Friday, January 16, 2009

தியாகராஜ கிருதி - யோசனா கமல - ராகம் த3ர்பா3ரு - Yochanaa Kamala - Raga Darbaaru

பல்லவி
1யோசனா கமல லோசன நனு ப்3ரோவ

அனுபல்லவி
ஸூசன தெலியகனொருல
யாசன ஸேதுனனுசு நீகு
தோசெனா த்3யுதி விஜிதாயுத
விரோசன நன்னு ப்3ரோவனிங்க (யோ)

சரணம்
2கேசன நிஜ ப4க்த நிசய பாப
விமோசன கல பி3ருது3லெல்ல கொனி
3நன்னேசனா 4க்ரு2த விபின சர
வராபி4ஷேசன
த்யாக3ராஜ பூஜித (யோ)


பொருள் - சுருக்கம்
கமலக்கண்ணா! பன்னாயிரம் பரிதிகளை வெல்லும் ஒளியோனே! மெய்த்தொண்டர்களின் வினைகளைக் களைவோனே! அடவி வாழ்வோனுக்கு (அரியணை) திருமுழுக்கு செய்வித்தவனே! தியாகராசனால் தொழப்பெற்றோனே!

இன்னமும் யோசனையா, என்னைக் காக்க?
குறிப்பறிந்துகொள்ளாது, மற்றோரை இரப்பேனென வுனக்குத் தோன்றியதா?
எதற்காக? உள்ள விருதுகளை யெல்லாம் உற்று, என்னை ஏய்ப்பதற்கா?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
யோசனா/ கமல/ லோசன/ நனு/ ப்3ரோவ/
யோசனையா/ கமல/ கண்ணா/ என்னை/ காக்க/


அனுபல்லவி
ஸூசன/ தெலியகனு/-ஒருல/
குறிப்பு/ அறிந்துகொள்ளாது/ மற்றோரை/

யாசன ஸேதுனு/-அனுசு/ நீகு/
இரப்பேன்/ என/ உனக்கு/

தோசெனா/ த்3யுதி/ விஜித/-அயுத/
தோன்றியதா/ ஒளியில்/ வெல்லும்/ பன்னாயிரம்/

விரோசன/ நன்னு/ ப்3ரோவனு/-இங்க/ (யோ)
பரிதிகளை/ என்னை/ காக்க/ இன்னமும்/ யோசனையா...


சரணம்
கேசன/ நிஜ/ ப4க்த நிசய/ பாப/
எதற்காக/ மெய்/ தொண்டர்களின்/ வினைகளை/

விமோசன/ கல/ பி3ருது3லு/-எல்ல/ கொனி/
களைவோனே/ உள்ள/ விருதுகளை/ யெல்லாம்/ உற்று/

நன்னு/-ஏசனா/ க்ரு2த/ விபின/ சர/
என்னை/ ஏய்ப்பதற்கா/ செய்வித்தவனே/ அடவி/ வாழ்வோனுக்கு/

வர-அபி4ஷேசன/ த்யாக3ராஜ/ பூஜித/ (யோ)
திருமுழுக்கு/ தியாகராசனால்/ தொழப்பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - நன்னேசனா - நின்னேசனா : இவ்விடத்தில் 'நன்னேசனா' பொருந்தும்

4 - க்ரு2த விபின சர வராபி4ஷேசன - க்ரு2த விபின சர அபி4ஷேசன.

Top

மேற்கோள்கள்
4- க்ரு2த அபி4ஷேசன - இராமன் அனுமனை அனுப்பி சுக்கிரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்விக்க உத்தரவிடுகின்றான். வால்மீகி ராமாயணம் – கிஷ்கிந்தா காண்டம் – அத்தியாயம் 26 நோக்குக.

விளக்கம்
1 - யோசனா - எல்லா புத்தகங்களிலும், இச்சொல்லுக்கு 'தயக்கமா' என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், 'யோசன' எனும் தெலுங்கு சொல்லுக்கும், அதற்கீடான 'யோசனை' என்னும் தமிழ் சொல்லுக்கும் அத்தகையதொரு நேரிடையான பொருள் இருப்பதாகத் தோன்றவில்லை.

Top

2 - கேசன - எதற்காக? - தியாகராஜரின் பல கீர்த்தனைகள், உரையாடல் முறையிலேயே அமைந்துள்ளன. இங்கு, இக்கேள்விக்கு, "எதற்காக இத்தனை விருதுகளை நீ பெற்றுள்ளாய்? - என்னை ஏய்ப்பதற்கா?" என்று பொருள் - அதாவது 'நீ என்னை காக்க யோசனை செய்தால் விருதுகளினால் பயன் என்ன' என.

3 - ஏசனா - எல்லா புத்தகங்களிலும், இச்சொல்லுக்கு 'ஏமாற்றுதல்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருள் இவ்விடத்தில் பொருந்தும். ஆனால், 'ஏசு' என்னும் தெலுங்கு சொல்லுக்கு அத்தகைய பொருள் இல்லை. பல கீர்த்தனைகளில் தியாகராஜர் இச்சொல்லுக்கு 'ஏமாற்றுதல்' என்ற பொருள்பட இயற்றியுள்ளார். அதனால் அவர் 'ஏசு' -க்கு ஈடான 'ஏய்த்தல்' - என்னும் தமிழ்ச் சொல்லினை பயன் படுத்துகின்றார் என நம்பவேண்டியுள்ளது.

குறிப்பறிந்துகொள்ளாது - 'தகவல் தெரியாது' என்றும் கொள்ளலாம்

அடவி வாழ்வோன் - சுக்கிரீவன்

Top


Updated on 17 Jan 2009

No comments: