Tuesday, April 6, 2010

தியாகராஜ கிருதி - அப்ப ராம - ராகம் பந்துவராளி - Appa Rama - Raga Pantuvarali

பல்லவி
அப்ப ராம ப4க்தியெந்தோ கொ3ப்பரா மா(யப்ப)

அனுபல்லவி
த்ரிப்படலனு தீர்சி கண்டி ரெப்ப வலெனு 1காசுனா மா(யப்ப)

சரணம்
சரணம் 1
லக்ஷ்மி தே3வி வலசுனா லக்ஷ்மணுண்டு3 கொலுசுனா
ஸூக்ஷ்ம பு3த்3தி43ல ப4ரதுடு3 ஜூசி ஜூசி ஸொலஸுனா மா(யப்ப)


சரணம் 2
213ரியெங்கி3லிச்சுனா 3சந்த்3ர த4ருடு3 மெச்சுனா
4அப3ல ஸ்வயம்ப்ரப4கு தை3வமசல பத3வினிச்சுனா மா(யப்ப)


சரணம் 3
5கபி வாரிதி4 தா3டுனா 6கலிகி ரோட கட்டுனா
அபராதி4 த்யாக3ராஜுகானந்த3மு ஹெச்சுனா மா(யப்ப)

பொருள் - சுருக்கம்
  • எமதப்பன் இராமனின் பக்தி எவ்வளவோ உயர்ந்ததடா!
  • (மனத்தின்) திரிதல்களைத் தீர்த்து, கண்ணிமைபோல் காக்கும், எமதப்பன் இராமனின் பக்தி, எவ்வளவோ உயர்ந்ததடா!

  • அன்றேல்,
    • இலக்குமி தேவி மருவுவாளா?
    • இலக்குவன் சேவைபுரிவானா?
    • நுண்ணறிவுடை பரதன், கண்டு கண்டு மயங்குவானா?

    • சபரி எச்சில் கொடுப்பாளா?
    • பிறையணிவோன் மெச்சுவானா?
    • அபலை சுயம்பிரபையினுக்கு, தெய்வம் நிலையான பதவியளிக்குமா?

    • குரங்கு கடலினைத் தாண்டுமா?
    • பெண்ணொருத்தி உரலில் கட்டுவாளா?
    • குற்றவாளி தியாகராசனுக்கு, ஆனந்தமும் பெருகுமா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அப்ப/ ராம/ ப4க்தி/-எந்தோ/ கொ3ப்பரா/ மா/-(அப்ப)
அப்பன்/ இராமனின்/ பக்தி/ எவ்வளவோ/ உயர்ந்ததடா/ எமது/ அப்பன்...


அனுபல்லவி
த்ரிப்படலனு/ தீர்சி/ கண்டி/ ரெப்ப/ வலெனு/ காசு/-ஆ/ மா/-(அப்ப)
(மனத்தின்) திரிதல்களை/ தீர்த்து/ கண்/ இமை/ போல்/ காக்கும்/ அந்த/ எமது/ அப்பன்...


சரணம்
சரணம் 1
லக்ஷ்மி/ தே3வி/ வலசுனா/ லக்ஷ்மணுண்டு3/ கொலுசுனா/
இலக்குமி/ தேவி/ மருவுவாளா/ இலக்குவன்/ சேவைபுரிவானா/

ஸூக்ஷ்ம/ பு3த்3தி4/ க3ல/ ப4ரதுடு3/ ஜூசி/ ஜூசி/ ஸொலஸுனா/ மா/-(அப்ப)
நுண்/ அறிவு/ உடைய/ பரதன்/ கண்டு/ கண்டு/ மயங்குவானா/ எமது/ அப்பன்...


சரணம் 2
13ரி/-எங்கி3லி/-இச்சுனா/ சந்த்3ர/ த4ருடு3/ மெச்சுனா/
சபரி/ எச்சில்/ கொடுப்பாளா/ பிறை/ அணிவோன்/ மெச்சுவானா/

அப3ல/ ஸ்வயம்ப்ரப4கு/ தை3வமு/-அசல/ பத3வினி/-இச்சுனா/ மா/-(அப்ப)
அபலை/ சுயம்பிரபையினுக்கு/ தெய்வம்/ நிலையான/ பதவி/ அளிக்குமா/ எமது/ அப்பன்...


சரணம் 3
கபி/ வாரிதி4/ தா3டுனா/ கலிகி/ ரோட/ கட்டுனா/
குரங்கு/ கடலினை/ தாண்டுமா/ பெண் (ஒருத்தி)/ உரலில்/ கட்டுவாளா/

அபராதி4/ த்யாக3ராஜுகு/-ஆனந்த3மு/ ஹெச்சுனா/ மா/-(அப்ப)
குற்றவாளி/ தியாகராசனுக்கு/ ஆனந்தமும்/ பெருகுமா/ எமது/ அப்பன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
இந்த கீர்த்தனையின் ராகம் 'காமவர்த்தினி' என்று சில புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

1 - காசுனா - இச்சொல் ஐயத்திற்குரியதாகத் தோன்றுகின்றது. இது 'காசு' என்றோ, 'காசே' என்றோ இருந்தால், அனுபல்லவியை, பல்லவியுடன் இணைத்து, பொருள் கொள்ளலாம். ஆயினும், எல்லா புத்தகங்களிலும் 'காசுனா' என்றே கொடுக்கப்பட்டுள்ளதால், இதனை, 'காசு+ஆ' (காக்கும் அந்த) என்று பிரித்துப் பொருள் கொள்ளப்பட்டது.

2 - 13ரியெங்கி3லிச்சுனா - ஸ13ரியெங்கி3லினிச்சுனா.

Top

மேற்கோள்கள்
2 - 13ரி எங்கி3லி இச்சுனா - சபரி எச்சில் (செய்ததனைக்) கொடுப்பாளா? இராமன், சபரியை சந்திக்கும் படலம், வால்மீகி ராமாயணத்தில் (ஆரண்ய காண்டம், அத்தியாயம் 74) வருகின்றது. அதனில், சபரி, எச்சில் செய்தவற்றை (பழங்களை), இராமனுக்கு அளித்ததாகக் கூறப்படவில்லை. இந்தப் படலத்தினில் கூறப்படுவதாவது -

"... சபரி, விருந்தினரை (இராமன் மற்றும் இலக்குவன்), கை, கால் அலம்பவும், வாய் கொப்பளிக்கவும் 'பாத்3யம்-ஆசமனம்' என்ற விருந்தோம்பல் முறைகளின் படி உபசரித்தாள்." (7)

சபரி விருந்தினருக்குக் கூறுவது -
"ஏ மனிதரில் சிங்கங்களே! பம்பை நதிக்கரையிலுள்ள வனத்திலிருந்து, தங்களுக்காக, என்னால் சேகரிக்கப்பட்டவற்றை ஏற்றுக்கொள்வீராக." (17 மற்றும் 18)

(சபரி எச்சில் செய்த பழங்களை அளித்ததாகக் கூறப்படும் பரம்பரைக் கதையினைக் காண்க.)

Top

3 - சந்த்3ர த4ருடு3 மெச்சுனா - பிறையணிவோன் மெச்சுவானா? - விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின், 'பயன் பகுதி'யில் கூறப்பட்டது -

பார்வதி, சிவனிடம், 'நாளும், விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும், பண்டிதர்கள் ஒதிக் கேட்க, விரும்புகின்றேன்' என, அதற்கு, சிவன், 'ஸ்ரீ ராம, ராம, ராம' யெனும், ராம நாமமே, ஆயிரம் (விஷ்ணுவின்) நாமாக்களுக்குச் சமமாகும்' என்று பதில் கூறினார்.

Top

4 - அப3ல ஸ்வயம்ப்ரப4 - அபலை சுயம்பிரபை - வால்மீகி ராமாயணத்தில் (கிஷ்கிந்தா காண்டம், 6-வது அத்தியாயம்) 'சீதையைத் தேடிச் செல்லும் வழியில், வானரர்கள், சுயம்பிரபை என்ற வயது முதிர்ந்த, தவசிப்பெண்ணால் காக்கப்பெற்ற நகரத்தினை, ஒரு அதிசயமான குகையினுள் கண்டனர். அவள், தேவர்களால் வரமளிக்கப்பட்ட, மேரு ஸாவர்ணி என்பவனின் மகளாவாள்' என்று கூறப்பட்டது. ஆனால், அவளுக்கு, ராமன் முத்தியளித்ததனைப் பற்றி, வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. 'அத்4யாத்ம ராமாயணத்தில்' (கிஷ்கிந்தா காண்டம், 6-வது அத்தியாயம்), ராமன், சுயம்பிரபைக்கு முத்தியளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Top

5 - கபி வாரிதி4 தா3டுனா - குரங்கு கடலினைத் தாண்டுமா? - கடலைத் தாண்டுமுன், அனுமன் வானரர்களிடம் கூறியது (வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், முதல் அத்தியாயம்) -

"எங்ஙனம் ராமனால் எய்யப்பெற்ற அம்பானது, காற்று வேகத்தினில் செல்லுமோ, அங்ஙனமே, நானும், ராவணனால் காக்கப்பெற்ற, இலங்கைக்கு விரைவேன். சீதையை, இலங்கையில் காணாவிடில், அதே வேகத்தில், வானுலகம் செல்வேன். அங்கும் சீதையைக் காணாவிடில், ராவணனைச் சங்கிலியால் கட்டி, இழுத்து வருவேன். எப்படியும் நான் வெற்றியாக, சீதையுடனே வருவேன்." (38 - 42)

ஆனால், அனுமன், தன்னுடைய பெரும் முயற்சிக்குப் பின்னர், சீதை, சிறை வைக்கப்பட்டுள்ள அசோக வனத்திற்கருகில் தான் இருந்தும், சீதையைக் காணாது, மிகவும் உள்ளம் தளர்ந்து, தான் தவசியாகச் செல்வது பற்றியும் யோசனை செய்தான். பின்னர், உள்ளத் துணிவை மேற்கொண்டு, ராமன், இலக்குவன், சீதை மற்றும் கடவுளர்களை, வணங்கி, வேண்டி, அசோக வனத்திற்குள் சென்று, சீதையைக் கண்டான்.

Top

தான் தேடும் சீதை, மற்றும் சீதையைத் தேட அனுப்பிய ராமன், இவர்களுக்கு வணக்கம் செலுத்தி, வேண்டிய பின்னரே, தான் ஏற்றுக்கொண்ட பணியில் அனுமன் வெற்றி கண்டது, மிக்கு வினோதமே. (ராமன் பாலம் கட்டித்தான் கடலைத் தாண்டினான்; ஆனால், 'ராம நாம'த்தினைச் சொல்லியே, அனுமன் கடலினைத் தாவினான். எனவே, ராமனைவிட, ராமனின் பெயரே சிறந்ததென, ஒரு ஹிந்தி பஜனைப் பாடலுண்டு.) இந்த வினோதத்தினை, தியாகராஜர், தனது 'ராம ராம நீவாரமு கா3மா' என்ற ஆனந்த பைரவி ராக கீர்த்தனையில், அனுபவித்து, 'மறைத்துக் கொண்டது போலும் மகிமை உடையோனே' என்று பாடுகின்றார்.

ஹரிகதைச் சொற்பொழிவாளர், திரு TS பாலகிருஷ்ண சாஸ்திரிகள், தமது 'தியாகராஜ ராமாயணம்' என்ற ஹரிகதையில், 'அனுமன் இலங்கை செல்லக் கடலைத் தாண்டியது ராம நாமத்தின் மகிமையினாலே' என்று குறிப்பிடுகின்றார். ஆனால், அப்படிப்பட்ட தொண்டன், 'தன்னால் முடியும்' என்று ஆங்காரம் கொண்டால், எடுத்துக் கொண்ட பணி செவ்வனே நிறைவேறாது என்பதும், தன்னுடைய ஆங்காரத்தினை அடக்கி, இறைவனிடம் சரணடைந்தாலே, காரியம் கைகூடும் என்பதும், இதனால் விளங்குவதாகும். அன்றேல், சீதையைத் தேட, சீதையையே வேண்டுவதனை எங்ஙனம் விளக்குவது?

Top

6 - கலிகி ரோட கட்டுனா - பெண்ணொருத்தி உரலில் கட்டுவாளா? - யசோதை கண்ணணைக் கட்டியது. இந்த நிகழ்ச்சி, பாகவத புராணத்தில் (10-வது புத்தகம், 9-வது அத்தியாயம்) கூறப்பட்டுள்ளது -

"உடலெல்லாம் வியர்க்க, தன்னுடைய கூந்தலில் முடியப்பெற்ற மலரெல்லாம் வாடி வீழ, மிகவும் களைத்திருந்த தனது தாயாரைக் கண்டு, கருணை கொண்ட கண்ணன், உரலில் கட்டுப்பட, தானே சம்மதித்தான்.
தங்களை, தமது உடலுடன் சேர்த்து நோக்கும் உலகோருக்கும், பரம்பொருளுடன் ஒன்றிய அறிஞர்களுக்கும் கூட, கண்ணன் எளிதில் கிட்டான். அவனிடம் பற்று கொண்டோருக்கே அவன் கிடைப்பான்." (18, 21)

பாபநாசம் சிவன், "எங்கும் நிறை பரம்பொருள், உன்னை 'அம்மா' என்றழைக்க, என்ன தவம் செய்தனை, யசோதா?" என்று அனுபவித்துப் பாடுகின்றார்.

Top

விளக்கம்
பிறையணிவோன் - சிவன்

Top


Updated on 07 Apr 2010

No comments: