Thursday, December 10, 2009

தியாகராஜ கிருதி - எவரு மனகு - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Evaru Manaku - Raga Deva Gandhari, Nauka Charitram

பல்லவி
எவரு மனகு ஸமானமிலலோனிந்துலார நேடு3

அனுபல்லவி
1அவனி ஹரி ஹர ப்3ரஹ்மாதி3
ஸுருலாஸசே மோஸ போயிரி க3னுகனு (எ)

சரணம்
2நலுவ தனயபை மோஹமு ஜெந்தி3 நாடே3 தகி3லி போயெ
முத்3து3லொலுகு ஸ்ரீ ஹரி வலசுசு 3ப்3ரு2ந்தா3 லோலுடை3 போயெ
சிலுவ பூ4ஷணுடு3 4தா3ருகா வனபு செலுல பாலாயெ
கோ3குலமுன த்யாக3ராஜ நுதுடு3 மன
வலல தகி3லி போயெ க3னுகனு (எ)


பொருள் - சுருக்கம்
வனிதையரே!
  • யார் நமக்கீடு புவியினிலே, இன்று?
  • ஆகுமென, அரி, அரன், பிரமன் முதலான வானோர் (பெண்) ஆசையினால் மோசம் போயினர்;
    • நான்முகன், மகளின் மீது மோகம் கொண்டு அன்றே சிக்கினான்;
    • எழில் சொட்டும் அரி, காதல் கொண்டு, பிருந்தா லோலனாகினான்;
    • அரவணிவோன், தாருகா வனப்பெண்டிர் வசமாகினான்;
    • கோகுலத்தினில், தியாகராசனால் போற்றப் பெற்றோன், நமது வலையில் அகப்பட்டனன்;

  • எனவே, யார் நமக்கீடு புவியினிலே, இன்று?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரு/ மனகு/ ஸமானமு/-இலலோனு/-இந்துலார/ நேடு3/
யார்/ நமக்கு/ ஈடு/ புவியினிலே/ வனிதையரே/ இன்று/


அனுபல்லவி
அவு/-அனி/ ஹரி/ ஹர/ ப்3ரஹ்மா/-ஆதி3/
ஆகும்/ என/ அரி/ அரன்/ பிரமன்/ முதலான/

ஸுருலு/-ஆஸசே/ மோஸ/ போயிரி/ க3னுகனு/ (எ)
வானோர்/ (பெண்) ஆசையினால்/ மோசம்/ போயினர்/ எனவே, யார்...


சரணம்
நலுவ/ தனயபை/ மோஹமு/ ஜெந்தி3/ நாடே3/ தகி3லி போயெ/
நான்முகன்/ மகளின் மீது/ மோகம்/ கொண்டு/ அன்றே/ சிக்கினான்/

முத்3து3லு/-ஒலுகு/ ஸ்ரீ ஹரி/ வலசுசு/ ப்3ரு2ந்தா3/ லோலுடை3 போயெ/
எழில்/ சொட்டும்/ ஸ்ரீ ஹரி/ காதல் கொண்டு/ பிருந்தா/ லோலன் ஆகினான்/

சிலுவ/ பூ4ஷணுடு3/ தா3ருகா/ வனபு/ செலுல/ பாலாயெ/
அரவு/ அணிவோன்/ தாருகா/ வன/ பெண்டிர்/ வசமாகினான்/

கோ3குலமுன/ த்யாக3ராஜ/ நுதுடு3/ மன/
கோகுலத்தினில்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோன்/ நமது/

வலல/ தகி3லி போயெ/ க3னுகனு/ (எ)
வலையில்/ அகப்பட்டனன்/ எனவே/ யார்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - நலுவ தனயபை மோஹமு ஜெந்தி3 - நான்முகன், மகளின் மீது மோகம் கொண்டு - கலைவாணி, பிரமனுக்குப் பிறந்தவள் எனப்படும்.'ப்3ரு2ஹதா3ரண்ய உபநிடத'த்தினில் (I.iv.3,4), இவ்வுலகத்தின் படைப்பினைப் பற்றி விவரிக்கையில், பிரமன், படைப்பின் தொடக்கத்தினில், தான் மட்டுமே தனியாக இருப்பதனை உணர்ந்து, தனிமைக்கு அஞ்சி, தான், ஒரு ஆணும், பெண்ணும் அரவணைப்பினில் இருப்பது போன்று மாறி, அவ்வணைப்பிலுள்ள உடலை இரண்டாகப் பிரித்து - ஒரு பகுதி ஆணாகவும், மறு பகுதி பெண்ணாகவும் படைப்பித்தான். அந்த முதல் தம்பதிகளிலிருந்து, மற்ற படைப்பு நிகழ்ந்ததெனக் கூறப்படும். பிரமன் தன்னிடமிருந்து தோன்றிய பெண்ணை, தானே புணர்ந்ததனால், 'மகளின் மீது மோகம் கொண்டு' என்று தியாகராஜர் கேலி செய்கின்றார்.

Top

3 - ப்3ரு2ந்தா3 லோலுடை3 - பிருந்தா லோலன் - துளசியின் கதை நோக்கவும். துளசி முற்பிறவியில் 'பிருந்தா' எனப்படுவாள். அப்பெண், விஷ்ணுவை தனது கணவனாக அடைய, பலகாலம் தவமிருந்தாள். அவளுக்கு அங்ஙனமே வரம் கிடைத்தது. ஆனால், அவளுக்கு இவ்வுலக இன்ப நுகர்ச்சிகளின் சுவை மிகுதியிருந்ததனால், 'சங்கசூடன்' என்ற அரக்க மன்னனை மணந்து பலகாலம் இன்புற்றிருந்தாள். அவ்வரக்கன், சிவனுடன் போரில் கொல்லப்பட்டான். போர் நடக்கையில், விஷ்ணு அவளிடம், அவளுடைய கணவனுடைய வேடந்தரித்து வந்து, அவளுடன் புணர்ந்தான். இதனை பின்னர் உணர்ந்த பிருந்தா, விஷ்ணுவுக்கு சாபமிட்டாள். விஷ்ணு, அவளுடைய உண்மையான கோரிக்கை என்ன என்பதனை நினைவூட்டி, அவளை தன்னுடைய மனைவியாக வரும்படி கூறுகின்றார். இதனைத்தான் தியாகராஜர் 'பிருந்தா லோலனாகினான்' என்று கேலியாகக் கூறுகின்றார்.

Top

4 - தா3ருகா வனபு செலுல - தாருகா வனப்பெண்டிர் - இருடியரின் மனைவியர் - சிவனின் பிட்சாடனர் வேடம். தாருகா வன இருடியர்கள், கடவுளே இல்லையென்றும், கருமங்களே உண்டென்றும், செருக்குற்றிருந்தனர். அவர்களுடைய செருக்கினை அடக்க, சிவனும், விஷ்ணுவும், ஆணும், பெண்ணாக வேடந்தரித்து, இருவரும் நிர்வாணமாக, அவ்வனத்திற்குச் சென்றனர். மோகினி வேடத்திலிருந்த விஷ்ணுவைக்கண்டு, இருடியர்கள் மயல் கொண்டு, அவளைத் தொடர்ந்தனர். பிட்சாடனராக வேடமணிந்த சிவனைக்கண்டு, இருடியரின் மனைவியர் மயல் கொண்டு, சிவனைப் பின்தொடர்ந்தனர். பின்னர், இதனை உணர்ந்த இருடியர், சிவனுக்கு சாபமிட்டு, மான் முதலானவற்றை ஏவினர். சிவன், அவற்றை வென்று, தன்னுடைய அணிகலன்களாக ஏற்றான். இந்நிகழ்ச்சியினைத் தியாகராஜர் குறிப்பிடுகின்றார்.

Top

விளக்கம்
1 - அவனி - இச்சொல்லின் மொழிபெயர்ப்பு ஐயத்திற்குரியது. இச்சொல்லின் நேரிடைப்பொருள் 'புவி' என்பதாகும். ஆனால், இவ்விடத்தில் இச்சொல்லின் வடிவம் சரியில்லை. எனவே, இச்சொல்லினை 'அவு+அனி' எனப் பிரித்து, 'ஆகுமென' (ஒவ்வுமென) பொருள் கொள்ளப்பட்டது.

இப்பாடல், 'நௌக சரித்திரம்' எனப்படும் 'ஓடக்கதை'யினில் வருவது.

பாடலின் பின்னணி - ஆய்ச்சியர், யமுனை நதிக்கரையில், கண்ணனைக் கலந்து இன்புற்றனர். அந்த மயக்கத்தினில், அப்பேர்ப்பட்ட கண்ணனே தமது வயப்பட்டதனால், தமக்கு எவரும் ஈடில்லை என செருக்குற்றனர். அந்த செருக்கினை வெளிப்படுத்தும் பாடல் இது. இப்பாடல், கோகுலத்தில், ஆய்ச்சியர் பாடுவதாக.

அரவணிவோன் - சிவன்
தியாகராசனால் போற்றப் பெற்றோன் - கண்ணனைக் குறிக்கும்

Top


Updated on 11 Dec 2009

No comments: