Thursday, May 7, 2009

தியாகராஜ கிருதி - மா ஜானகி - ராகம் காம்போ4ஜி - Maa Janaki - Raga Kaambhoji

பல்லவி
மா ஜானகி 1செட்ட பட்டக3 2மஹராஜவைதிவி

அனுபல்லவி
3ராஜ ராஜ வர ராஜீவாக்ஷ வினு
ராவணாரியனி ராஜில்லு கீர்தியு (மா)

சரணம்
கானகேகி3 ஆக்3ஞ மீரக மாயாகாரமுனிசி ஸி1கி2 செந்தனேயுண்டி3
4தா3னவுனி வெண்டனே சனி அஸோ1க தரு மூலனுண்டி3
வானி மாடலகு கோபகி3ஞ்சி கண்ட 5வதி4யிஞ்சகனேயுண்டி3
ஸ்ரீ நாயக யஸ1மு நீகே கல்க3 ஜேய லேதா3 த்யாக3ராஜ பரிபால (மா)


பொருள் - சுருக்கம்
பேரரசர்களில் மேலோனே! கமலக் கண்ணா! மா மணாளா! தியாகராசனைப் பேணுவோனே!
  • கேள்.

  • எமது சானகியை கைப் பிடித்ததனாலன்றோ பெருந்தகை யாகினாய்!

  • இராவணனை வென்றோனெனத் திகழ் புகழும் எமது சானகியை கைப் பிடித்ததனாலன்றோ!

    • கானகத்திற்கு (உடன்) சென்று,

    • (உனது) ஆணை மீராது, மாய உருவை யணிந்து,

    • (தான்) அக்கினியிடமே யிருந்து,

    • (மாய உருவுடன்) தானவனுடன் சென்று,

    • அசோக மரத்தடியினிலிருந்து,

    • அவனது சொற்களுக்கு சினுமுற்று கண்களினாலாயே (அவனை) வதைக்காதிருந்து,

  • (இராவணனை வென்றோனென) புகழுனக்கே கிடைக்கச் செய்தனளன்றோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மா/ ஜானகி/ செட்ட/ பட்டக3/ மஹராஜவு/-ஐதிவி/
எமது/ ஜானகியை/ கை/ பிடித்ததனாலன்றோ/ பெருந்தகை/ ஆகினாய்/


அனுபல்லவி
ராஜ ராஜ/ வர/ ராஜீவ/-அக்ஷ/ வினு/
பேரரசர்களில்/ மேலோனே/ கமல/ கண்ணா/ கேள்/

ராவண/-அரி/-அனி/ ராஜில்லு/ கீர்தியு/ (மா)
இராவணனை/ வென்றோன்/ என/ திகழ்/ புகழும்/ எமது சானகியை...


சரணம்
கானகு/-ஏகி3/ ஆக்3ஞ/ மீரக/ மாயா/-ஆகாரமு/-உனிசி/ ஸி1கி2/ செந்தனே/-உண்டி3/
கானகத்திற்கு/ (உடன்) சென்று/ (உனது) ஆணை/ மீராது/ மாய/ உருவை/ அணிந்து/ (தான்) அக்கினி/ இடமே/ இருந்து/

தா3னவுனி/ வெண்டனே/ சனி/ அஸோ1க/ தரு/ மூலனு/-உண்டி3/
(மாய உருவுடன்) தானவன்/ உடன்/ சென்று/ அசோக/ மரத்தின்/ அடியினில்/ இருந்து,

வானி/ மாடலகு/ கோபகி3ஞ்சி/ கண்ட/ வதி4யிஞ்சகனே/-உண்டி3/
அவனது/ சொற்களுக்கு/ சினுமுற்று/ கண்களினாலாயே/ (அவனை) வதைக்காது/ இருந்து/

ஸ்ரீ/ நாயக/ யஸ1மு/ நீகே/ கல்க3/ ஜேய/ லேதா3/ த்யாக3ராஜ/ பரிபால/ (மா)
மா/ மணாளா/ புகழ்/ உனக்கே/ கிடைக்க/ செய்தனள்/ அன்றோ/ தியாகராசனை/ பேணுவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
4 - தா3னவுனி வெண்டனே சனி - இராவணன் உடன் சென்று - வால்மீகி ராமாயணத்தினில், இராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கி மடியிலிருத்தி, ஆகாய மார்க்கத்தினில் இலங்கைக்குக் கொண்டு சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், அத்தியாயங்கள் 49 மற்றும் 52 நோக்கவும்.

சிறந்த தொண்டராகிய தியாகராஜருக்கு, இது நடவாத செயலாகத் தோன்றுகிறது. எனவே, அவர் 'அத்யாத்ம ராமாயணம்' மற்றும் துளசிதாசரின் 'ராம்சரித்ர மானஸ்' இவற்றில் கூறப்பட்டதனை ஏற்றுக்கொண்டு, இப்பாடலில் விவரித்துள்ளார். 'அத்யாத்ம ராமாயண'த்தினில், சீதையை, இராவணன் அபகரிக்கப்போவதை, ராமன் முன்கூட்டியே உணர்ந்து, சீதையை ஒராண்டு காலத்திற்கு அக்கினியிடமிருக்கும்படியும், மாய சீதை உருவணிந்து இராவணனுடன் செல்லும்படியும், தான் இராவணனைக் கொன்றபின், மாய சீதையினை நெருப்பினில் புகச்செய்து, உண்மையான சீதையை அக்கினி கொணர்ந்து அளிக்க, தன்னுடன் அயோத்திக்குத் திரும்பலாம் என்று கூறுகிறான். இதனைத்தான், தியாகராஜர், 'ஆணை மீறாது' என்று கூறுகின்றார்.

Top

5 - வதி4யிஞ்சகனேயுண்டி3 - வதைக்காதிருந்து - வால்மீகி ராமாயணத்தினில் (சுந்தர காண்டம், அத்தியாயம் 22 நோக்கவும்) இராவணன், சீதையை நோக்கி, தான் ஒராண்டு அவதி தருவதாகவும், அதற்குள் அவள் தானே இணங்காவிடில், அவளை வலிய அந்தப் புரத்திற்குக் கொண்டுசெல்லப்போவதாக மிரட்ட, சீதை, அவனுக்கு கூறிய பதிலாவது -

"நான், என்னுடைய வல்லமையினாலேயே, உன்னை எரித்து சாம்பலாக்கமுடியும். ஆனால், ராமனிடமிருந்து எனக்கு அங்ஙனமோர் ஆணையில்லாததாலும், நான், என்னுடை தவ வலிமையினை இழக்க விரும்பாததாலும், அப்படிச் செய்யவில்லை."

சீதை, இங்ஙனம் இராவணனை வதைக்காதிருந்து, ராமனுக்கு 'இராவணனை வென்றவன்' என்ற புகழ் பெறச் செய்தனள் என்று தியாகராஜர் கூறுகின்றார்.

Top

விளக்கம்
1 - செட்ட பட்டக3 - வைதிக முறைப்படி நடக்கும் திருமணங்களில் மணப்பெண்ணின் கையை மணமகன் பற்றுவதுதான் மிகவும் முக்கியமான சடங்காகும். அதற்கு 'பாணி க்3ரஹணம்' (கைப் பிடித்தல்) என்று பெயர். இச்சடங்கினில், மணமகள் தனது வலது கை விரல்களை ஒருமித்து மேல் நோக்கிக் கூப்ப, அதனை, மணமகன் தனது வலது கைவிரல்களினால் முழுவதுமாக அணைத்துப் பிடித்து அக்கினியை இருவரும் வலம் வருவார்கள். அவ்வமயம் மணமகன் கூறும் வசனங்களில் சில -

"பெண்ணே! நாம் அனேக, சிறந்த மக்களைப் பெறவும், பழுத்த வயதுவரை என்னுடன் நீ கூடி வாழவும் உனது கையினைப் பற்றுகின்றேன். கடவுள் இல்லற வாழ்கைக்கென உன்னை எனக்களித்துள்ளார்.

கலைமகளே! கைப்பற்றியுள்ள நாங்களிருவரும் உன்னருளால் செல்வங்கள் பெற்று ஆனந்தமாக வாழ்வோம் என யாவருக்கும் உரக்க அறிவிக்கின்றேன்.

பெண்ணே! எங்கும் செல்லும் திறமை வாய்ந்த வாயுவும், யாவற்றினையும் தூய்மையாக்கும் அக்கினியும் உனது மனத்தினில் புகுந்து நம்முடைய வாழ்க்கையினில் என்னை நீ ஒவ்வொரு நிமிடமும் நேசிக்கச் செய்யட்டும்."

வைதிகத் திருமணச் சடங்குகள் நோக்கவும்.

Top

2 - மஹராஜ - இங்கு, இச்சொல்லுக்கு 'பேரரசன்' என்ற பொருளல்ல. தெலுங்கு மொழி்யில், இச்சொல் ஓர் ஆசீர்வாதமாகவும், மனதார சம்மதித்தலையும் குறிக்கும்.

3 - ராஜ ராஜ வர ராஜீவாக்ஷ - 'வர' என்ற சொல்லினை 'ராஜ ராஜ' என்பதனுடனோ, அல்லது 'ராஜீவாக்ஷ' என்பதுனடனோ இணைத்துப் பொருள் கொள்ளலாம்.

அக்கினி - அக்கினி தேவன்
தானவன் - இராவணன்

Top


Updated on 07 May 2009

No comments: