ராக3 ஸுதா4 ரஸ பானமு ஜேஸி 1ரஞ்ஜில்லவே 2ஓ மனஸா
அனுபல்லவி
3யாக3 4யோக3 5த்யாக3 6போ4க3 ப2லமொஸங்கே3 (ரா)
சரணம்
7ஸதா3ஸி1வ மயமகு3 நாதோ3ங்கார ஸ்வர
விது3லு 8ஜீவன்முக்துலனி த்யாக3ராஜு தெலியு (ரா)
பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
- வேள்வி, யோகம், தியாகம் மற்றும் புவியின்பங்களின் பயனையளிக்கும் இராகமெனும் அமிழ்தச் சாற்றினைப் பருகி, களித்திடுவாய்;
- சதாசிவ மயமான நாதோங்கார சுரத்தில் வல்லோர் சீவன் முத்தரென தியாகராசனறிவான்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராக3/ ஸுதா4/ ரஸ/ பானமு ஜேஸி/ ரஞ்ஜில்லவே/ ஓ மனஸா/
ராகமெனும்/ அமிழ்த/ சாற்றினை/ பருகி/ களித்திடுவாய்/ ஓ மனமே/
அனுபல்லவி
யாக3/ யோக3/ த்யாக3/ போ4க3/ ப2லமு/-ஒஸங்கே3/ (ரா)
வேள்வி/ யோகம்/ தியாகம்/ புவியின்பங்களின்/ பயனை/ யளிக்கும்/ இராகமெனும்...
சரணம்
ஸதா3ஸி1வ/ மயமகு3/ நாத3/-ஓங்கார/ ஸ்வர/
சதாசிவ/ மயமான/ நாத/ ஓங்கார/ சுரத்தில்/
விது3லு/ ஜீவன்/ முக்துலு/-அனி/ த்யாக3ராஜு/ தெலியு/ (ரா)
வல்லோர்/ சீவன்/ முத்தர்/ என/ தியாகராசன்/ அறிவான்
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ரஞ்ஜில்லவே - ராஜில்லவே
2 - ஓ மனஸா - மனஸா
Top
மேற்கோள்கள்
3 - யாக3 - வேள்வி - பகவத்-கீதையில் (அத்தியாயம் 4, செய்யுள் 28) - ஐந்து விதமான வேள்விகள் கூறப்பட்டுள்ளன : செல்வம் - தவம் - யோகம் - மறையோதல் - மெய்யறிவு - ஆகியவற்றினை இறைவனுக்கு அர்ப்பணித்தல்.
4 - யோக3 - எட்டு அங்கங்களுடைய அட்டாங்க யோகம் - யமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, தியானம் மற்றும் சமாதி.
பகவத்-கீதையில் நான்கு விதமான இறைவனை அணுகு முறைகள் யோகங்களென கூறப்பட்டுள்ளன - சாங்கிய யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் மற்றும் பக்தி யோகம்.
Top
5 - த்யாக3 - பகவத்-கீதையில் (அத்தியாயம் 18, செய்யுள் 2) கூறியபடி -
"இச்சைகளுக்காக இயற்றப்படும் பணிகளை (கருமங்களை) துறத்தல் 'துறவு' என்பர் கற்றறிந்தோர்; அனைத்து கருமங்களின் பயன்களைத் துறத்தல் 'தியாகம்' எனச் சாற்றுவர் மெய்யறிவுடையோர்." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
7 - ஸதா3ஸி1வ - சதாசிவன் - அழிக்கும் தொழிலை நடத்தும் மூவரில் ஒருவரான சிவனல்ல. மூவருக்கும் மேற்பட்ட பரம்பொருளினைக் குறிக்கும். பதஞ்சலி யோக சூத்திரத்தில் (I.27) கூறப்பட்ட பரம்பொருளின் இலக்கணமாவது - "அவனைக் குறிக்கும் சொல் 'ஓம்' ஆகும்"
Top
விளக்கம்
6 - போ4க3 ப2லமொஸங்கே3 - 'போ4க3ம்' என்பது உலக இன்பங்களைக் குறிக்கும். மேல்வாரியாக நோக்குகையில், தியாகராஜர் கூறுவதாவது - 'வேள்வி, யோகம், தியாகம் மற்றும் புவியின்பங்களின் பயனையளிக்கும் இராகம்' என.
வேள்வி (யாகம்) மற்றும் யோகம், புவியின்பத்திற்காக இயற்றப்படலாம். ஆனால் தியாகத்தினால் புவியின்பம் கிடைக்கும் என்பது தவறாகும். ஏனெனில், மேற்கூறிபடி தியாகம் என்பது அனைத்து கருமங்களின் பயன்களைத் துறத்தலாகும். மேலும், புவியின்பங்களினால் என்ன பயன் கிடைக்கக்கூடும் - நோய் மற்றும் பிறவிக்கடலில் உழல்வதைத் தவிர? எனவே தியாகராஜர் புவியின்பங்களை மனதில் கொண்டு இங்ஙனம் பகர்வதாகத் தோன்றவில்லை. அவர் அப்படி சொல்பவரும் அல்ல.
மேலும், சரணத்தில், ராகத்தினில் வல்லுநர்கள் 'சீவன் முக்தர்கள்' என்கிறார். எனவே சீவன் முக்தரானவரும், ஆக விழைவோரும் புவி இன்பங்களைத் துய்க்க வேண்டுவரோ? எனவே, இங்கு 'போகம்' என்ற சொல்லுக்கு 'புவியின்பம்' என பொருள் கொள்வது சரியென்று தோன்றவில்லை. தியாகராஜர் எதுகை மோனைகளுக்காக சொற்களை வாரி இறைப்பவரன்று. அவருடை கீர்த்தனைகள் - முக்கியமாக இந்த கீர்த்தனையும் இம்மாதிரி பல கீர்த்தனைகளும் 'inspiration' எனப்படும் தெய்வீகத் தூண்டலினால் இயற்றப்பெற்றவை. எனவே, எனது சிற்றறிவுக்குத் தோன்றுவது என்னவென்றால், போ4க3ம் என்ற சொல் ஜீவன் முக்தர்கள் அனுபவிக்கும் நாதோங்காரத்தில் நண்ணும் பரமானந்தத்தினைக் குறிக்கும்.
பதினெண் சித்தர்களில் போகர் என்று ஒரு சித்தரும் உண்டு.
Top
8 - ஜீவன்முக்துலு - சீவன் முத்தர் - உயிருடனிருக்கையிலேயே முத்தியடைந்தோர் - தியாகராஜர் இங்கு விது3லு -(நாதோ3ங்கார ஸ்வர விது3லு) - (இசை) 'வல்லுநர்' என்பது வெறும் சங்கீதம் பயின்றவரையன்று. அதனையே (சங்கீதத்தினை) வழிபாடாகக் கருதும் 'உபாசகர்'களை. அவருடைய கிருதி 'ஸங்கீ3த ஞானமு'-வில் 'ஸங்கீ3த ஞானமு ப4க்தி வினா ஸன்-மார்க3மு கலதே3' - 'இசையறிவு, பக்தியின்றி நன்னெறி உய்விக்காது' என்று அறுதியிட்டுக் கூறிகின்றார்.
நாத யோகம் குறித்து விவரங்கள் அறிய
நாதோங்காரம் - இசைவடிவில் திகழும் ஓங்காரம்
Top
Updated on 10 Feb 2009
No comments:
Post a Comment