Wednesday, December 1, 2010

தியாகராஜ கிருதி - காஸிச்சேதே3 - ராகம் கௌ3ளிபந்து - Kaasicchede - Raga Gaulipantu

பல்லவி
காஸிச்சேதே3 கொ3ப்பாயெனுரா கலிலோ ராஜுலகு

அனுபல்லவி
1ஹரி தா3ஸுலு ஸேவிம்பரனுசு ப்ரபு4வுலு
3ய மானிரி பரமெஞ்சக போயிரி (கா)

சரணம்
2ராஜாங்க3மு கொரகு நால்கு3 ஜாதுல ரக்ஷண பர ஸுக2மோ
ராஜஸுலை ஸன்மார்க3மெருக3க பராகு ஸேய க4னமோ
ஆஜன்மமு கொலிசே விப்ர வருலகானந்த3மு க3லதோ3
த்யாக3ராஜ வினுத நீ மாய கானி நீரஜ நயன
ஸுஜனாக4 விமோசன (கா)


பொருள் - சுருக்கம்
  • தியாகராசன் போற்றுவோனே! கமலக்கண்ணா! நல்லோர் பாவம் களைவோனே!

  • காசு கொடுப்பதே பெரிதானதய்யா, கலியில், அரசர்களுக்கு.

    • அரியின் தொண்டர்கள் வணங்கமாட்டாரென, பிரபுக்கள் தயையைக் கைவிட்டனர்;
    • மறுமையை யெண்ணாமற் போயினர்.

    • அரசாங்கத்திற்காக நான்கு சாதியினரைப் பேணுதல் மறுமைக்குச் சுகமோ?
    • இராசத நெறியோராகி, நன்னெறி யறியாது, அசட்டை செய்தல் மேன்மையோ?
    • வாழ்நாள் முழுதும் (பிரபுக்களைப்) புகழும் அந்தணரிற் சிறந்தோருக்கு ஆனந்தம் உண்டோ?


  • (யாவும்) உன் மாயை யன்றோ!

  • காசு கொடுப்பதே பெரிதானதய்யா, கலியில், அரசர்களுக்கு.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
காஸு/-இச்சேதே3/ கொ3ப்ப/-ஆயெனுரா/ கலிலோ/ ராஜுலகு/
காசு/ கொடுப்பதே/ பெரிது/ ஆனதய்யா/ கலியில்/ அரசர்களுக்கு/


அனுபல்லவி
ஹரி/ தா3ஸுலு/ ஸேவிம்பரு/-அனுசு/ ப்ரபு4வுலு/
அரியின்/ தொண்டர்கள்/ வணங்கமாட்டார்/ என/ பிரபுக்கள்/

3ய/ மானிரி/ பரமு/-எஞ்சக/ போயிரி/ (கா)
தயையை/ கைவிட்டனர்/ மறுமையை/ யெண்ணாமற்/ போயினர்/


சரணம்
ராஜாங்க3மு கொரகு/ நால்கு3/ ஜாதுல/ ரக்ஷண/ பர/ ஸுக2மோ/
அரசாங்கத்திற்காக/ நான்கு/ சாதியினரை/ பேணுதல்/ மறுமைக்கு/ சுகமோ/

ராஜஸுலை/ ஸன்-மார்க3மு/-எருக3க/ பராகு/ ஸேய/ க4னமோ/
இராசத நெறியோராகி/ நன்னெறி/ யறியாது/ அசட்டை/ செய்தல்/ மேன்மையோ/

ஆஜன்மமு/ கொலிசே/ விப்ர/ வருலகு/-ஆனந்த3மு/ க3லதோ3/
வாழ்நாள் முழுதும்/ (பிரபுக்களைப்) புகழும்/ அந்தணரிற்/ சிறந்தோருக்கு/ ஆனந்தம்/ உண்டோ/

த்யாக3ராஜ/ வினுத/ நீ/ மாய/ கானி/ நீரஜ/ நயன/
தியாகராசன்/ போற்றுவோனே/ (யாவும்) உன்/ மாயை/ யன்றோ/ கமல/ கண்ணா/

ஸுஜன/-அக4/ விமோசன/ (கா)
நல்லோர்/ பாவம்/ களைவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - ராஜாங்க3மு கொரகு நால்கு3 ஜாதுல ரக்ஷண பர ஸுக2மோ - அரசாங்கத்திற்காக நான்கு சாதியினரைப் பேணுதல் மறுமைக்குச் சுகமோ? இது குறித்து மனு கூறியது (rAja dharma) நோக்கவும்.

".....அதனால் குடிமக்களை அரசன், தன் குழந்தைகளைப் போன்று மகிழ்விக்கட்டும். மக்களும், அரசன், மந்திரிகள், மற்ற அதிகாரிகளை, தங்களைக் காப்போர் என மதிக்கட்டும். ஏனெனில், உழவர்களும் மற்ற செல்வம் படைப்போருமே அரசனின் உண்மையான வல்லமையாகும். அரசன், அவர்களின் பாதுகாவலன். குடிமக்கள் இல்லையெனில், அவன் யாருக்கு அரசனெனப்படுவான்? மாறாக அரசன் இல்லையேல், யாருடைய குடிமக்கள் எனப்படுவர்? எனவே, ஆள்வோரும், ஆளப்படுவோரும் தத்தம் கடமைகளை இயற்றுவதில் சுதந்திரமாக இருக்கட்டும். ஆனால் எவற்றினில் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் தேவையோ அவற்றினில் ஒருவருக்கொருவர் பணிந்து நடக்கட்டும். ஆள்வோர், மக்களின் குரலுக்கு எதிராக நடக்காதிருக்கட்டும். மக்களும், மந்திரிகளும் மன்னனின் விருப்பத்திற்கு மாறாக ஏதும் செய்யாதிருக்கட்டும்.....".

அரச தருமத்தினைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் (அயோத்தியா காண்டம், 100-வது அத்தியாயம்), ராமன் விரிவாகக் கூறியதனையும் நோக்கவும்.

Top

விளக்கம்
1 - ஹரி - பல புத்தகங்களில் இச்சொல் bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கீர்த்தனயில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் புத்தகங்களில் பல விதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பல்லவியிலும், அனுபல்லவியிலும் கூறியவற்றை (காசு கொடுப்பது பெரிதானது - அரியின் தொண்டர்கள் தன்னை வணங்கமாட்டார்) நோக்குகையில், மக்களிடம் தயை காட்டுதல், மன்னனின் கடமையாகும் எனவும், அரசனைப் புகழ்ந்தால்தான், அரசன் அவர்களுக்குக் கொடையளிப்பான் என்பது தவறாகும் என்றும் தியாகராஜர் கருதுகின்றார். பிரதிபலனை எதிர்பார்த்து செய்யப்படுவது கொடையாகாது.

Top

தயை - பயன் கருதாத கொடையும், பேணுதலும்
அரசாங்கத்திற்காக - அரசாங்கத் தேவைகளுக்காக.
இராசத நெறி - இச்சை, புகழுக்காக இயற்றப்படும் செயல்கள்.
நன்னெறி யறியாது - நன்னெறி நிற்காது என.
அந்தணருக்கு - 'கற்றறிந்தோருக்கு' என்றும் கொள்ளலாம்.

Top


Updated on 02 Dec 2010

3 comments:

Govindaswamy said...

ிரு கோவிந்தன்அவர்களே
தியாகராஜரின் கிருதிகளில் கருத்துக்கள் மிகத் தெளிவாக இருக்கும். ஆனால்  “இந்த கீர்த்தனையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் புத்தகங்களில் பல விதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன”
என்று கூறியுள்ளீர். இந்த மாறுபட்ட உரைகளில் கூறப்பட்டுளவற்றில் உங்களுக்கு ஏற்புடையவற்றை எடுத்துக் கொண்டு நீங்கள் உரை கூறியுள்ளீரா? இதைப் படித்த பின்னும் தியாகராஜர் என்ன கூறுகிறார் என்று முழுமையாக விளங்கவில்லை.
இது தியாகராஜரின் பாடல் தானா அல்லது சிதைந்துவிட்டதா.
1.  பல்லவியில் ’கொ3ப்பாயெனுரா’   என்பதுஅரிதாகிவிட்டதுஎன்னும்பொருளில்(கேலியாக) கூறப்பட்டுள்ளதா? காசு கொடுப்பதே பெரிதானதய்யா கலியில், அரசர்களுக்கு என்று படித்தால் இந்த பொருள் தெளிவாக விளங்கவில்லை. பேசும் பொழுது பெரிதானதய்யா!!!!  என்பது கேலி என்று புரியும்.
2.   ’நால்கு3 ஜாதுல ரக்ஷண பர ஸுகமோ’ என்னும் கேள்வி ‘இல்லை’ என்னும் பதிலை எதிர்பார்த்துக் கேட்கப்படுவதாக(rhetoric) ஒலிக்கிறது. அரசர்கள் நான்கு சாதியினரைப் பேணுவதால் மறுமையில் சுகமடையார் என்று பொருளா? இது நீங்கள் மனுநீதியில் இருந்து எடுத்துக்காட்டாகக் கொடுத்ததற்கு முரண்பாடாக உள்ளது.
’ஸுகமோ’ என்பதை, ’ஸுகமே’ என்று எடுத்துக் கொண்டால், ‘ஆம்! சுகம் தான்’  என்று பொருள் தரும். நான்கு சாதியினரையும் பேணுதல் அரசனின் கடமை என்று பொருள் தரும். அடுத்த வரியில் உள்ள பராகு ஸேய க4னமோ  என்னும் கேள்விக்குப் பதில் அசட்டை செய்தல் மேன்மையல்ல என்பது தானே.
3.   இவ்வாறு அரசன் தன் கடமையைச் செய்தால் அந்தணரிற் சிறந்தோர் தங்கள் பிழைப்பிற்காகப் அரசரல்லாத பிரபுக்களைப் புகழத் தேவையில்லை என்று பொருளா? தமிழ் நாட்டில் ஒரு புலவன் மற்றொரு புலவனை எந்த அரசன் பரிசில் கொடுப்பான் என்று வழி காட்டுவதற்கு , ஆற்றுப்புத்தல்  என்று பெயர். தியாகராஜர் இந்த வழக்கத்தை மறுப்பதாகத் தோன்றுகிறது. அவர் மன்னர் ஸர்ஃபோஜியின்(Serfoji) பரிசை மறுத்து ‘நிதிசாலஸுகமா’ என்றுபாடியவராயிற்றே.
4.   ஆஜன்மமு கொலிசே விப்ர வருலகானந்த3மு க3லதோ3 - மற்ற பிரபுக்களைப் புகழும் அந்தணரிற் சிறந்தோருக்கு என்று பொருள் கொடுத்துள்ளீர்.  இப்பாடலில் அரசர்களையும் மற்ற செல்வந்தர்களையும் வேறுபடுத்தி த்யாகராஜர் காட்டுகிறாரா?
வணக்கம்
கோவிந்தசாமி
 
 

V Govindan said...

திரு கோவிநதசாமி அவர்களுக்கு,

தங்கள் கேள்விகளுக்கு திருப்தியாக பதிலளிப்பது கடினமாகும். 'விப்ர வருலகு' என்ற வரியைத் தவிர மற்ற வரிகள் யாவற்றிற்கும் பொருள் சரிவர விளங்கவில்லை. எனக்குத் தெரிந்தவரையில் பொருள் கூறியுள்ளேன்.

பிறரை அண்டி வாழும் புலவர்களில் தியாகராஜர் ஒருவரல்ல. மகாத்மா காந்தி, செல்வந்தர்கள் தனது செல்வத்திற்கு சொந்தக் காரர்கள் அல்ல - அதன் பாதுகாவலர்கள் - trustee - என்று கூறுவார். அரசனுடைய சொத்துக்கள் யாவுமே மக்களைச் சேர்ந்தவையாகும். வணிகர்களைப் பொருளீட்டுபவர்கள் என்று கொள்ளலாம். ஆனால், அரசனின் சொத்தெல்லாம் மக்களின் வரியிலிருந்து வந்ததே. எனவே, நான்கு வருணத்தாரைப் பேணுதல், அரசனின் கடமையாகும். தமிழ் நாட்டில் பரம்பரையாக பரிசுக்காகக் கவிதைகள் புனைவது வழக்கமாக இருந்துவந்துள்ளது. அந்த முறையினை இறைவனை வணங்குவோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

பாரதியார் பாடினார் - பரிபூரணனுக்கு அடிமை செய்து வாழ்வோம் என்று. அரச தருமம் என்பது நாளடைவில் நலிந்து, மக்கள் அரசனிடம் பிச்சை கேட்கும் நிலைமை வந்தது. இதைத்தான் நாம் இன்று நமது அரசாள்வோரிடம் செய்கின்றோம் - பிச்சையெடுக்கின்றோம்.

வணக்கம்
கோவிந்தன்

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
அரசனுடைய சொத்துக்கள் யாவுமே மக்களைச் சேர்ந்தவையாகும் என்று கூறுகிறீர். முற்காலத்தில் நாட்டை “ஆண்டவர்களும்” தற்காலத்தில் ஆள்பவர்களும், நாட்டுச் சொத்து தங்கள் குடும்பச் சொத்து என்று எண்ணினார்கள்/எண்ணுகின்றனர்.
"எனக்குத் தெரிந்தவரையில் பொருள் கூறியுள்ளேன்" என்று நீங்கள் கூறுவதால் மற்ற உரையாசிரியர்கள் கூறும் பொருளையும் வலையேற்றம் செய்ய வேண்டுகிறேன். உங்கள் உரைகளைப் படிக்கும் எனக்கும் மற்ற எல்லோருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
வணக்கம்
கோவிந்தசாமி