Thursday, September 2, 2010

தியாகராஜ கிருதி - கோடி நது3லு - ராகம் தோடி - Koti Nadulu - Raga Todi

பல்லவி
கோடி நது3லு 14னுஷ்கோடிலோனுண்ட33
2ஏடிகி திரிகெ33வே ஓ மனஸா

அனுபல்லவி
ஸூடிக3 ஸ்1யாம ஸுந்த3ர மூர்தினி
மாடி மாடிகி ஜூசே மஹாராஜுலகு (கோ)

சரணம்
33ங்க3 நூபுரம்பு3னனு ஜனிஞ்செனு
ரங்க3னி காவேரி கனி ராஜில்லெனு
பொங்கு3சு ஸ்ரீ ரகு4 நாது2னி ப்ரேமதோ
பொக3டே3 த்யாக3ராஜு மனவி வினவே (கோ)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
  • பேருவகையோடு, இரகு நாதனை, பேரன்புடன் போற்றும் தியாகாராசனின் விண்ணப்பத்தினைக் கேளடி.

    • கோடி நதிகள் (ராமனின்) வில் நுனியிலிருக்க, ஆறுகளுக்குத் திரிகின்றாயே!
    • நேரிடையாக, கார்முகில் வண்ண எழிலுருவத்தோனை, அவ்வப்போது காணும் சான்றோருக்கு, கோடி நதிகள் (ராமனின்) வில் நுனியிலிருக்க, ஆறுகளுக்குத் திரிகின்றாயே!

    • கங்கை (அவன்) திருவடியில் பிறந்தாள்.
    • அரங்கனை, காவேரி கண்டு, புகழ்பெற்றாள்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கோடி/ நது3லு/ த4னுஷ்-கோடி-லோன/-உண்ட33/
கோடி/ நதிகள்/ (ராமனின்) வில் நுனியில்/ இருக்க/

ஏடிகி/ திரிகெ33வே/ ஓ மனஸா/
ஆறுகளுக்கு/ திரிகின்றாயே/ ஓ மனமே/


அனுபல்லவி
ஸூடிக3/ ஸ்1யாம/ ஸுந்த3ர/ மூர்தினி/
நேரிடையாக/ கார்முகில் வண்ண/ எழில்/ உருவத்தோனை/

மாடி மாடிகி/ ஜூசே/ மஹாராஜுலகு/ (கோ)
அவ்வப்போது/ காணும்/ சான்றோருக்கு/ கோடி...


சரணம்
3ங்க3/ நூபுரம்பு3னனு/ ஜனிஞ்செனு/
கங்கை/ (அவன்) திருவடியில்/ பிறந்தாள்/

ரங்க3னி/ காவேரி/ கனி/ ராஜில்லெனு/
அரங்கனை/ காவேரி/ கண்டு/ புகழ்பெற்றாள்/

பொங்கு3சு/ ஸ்ரீ ரகு4 நாது2னி/ ப்ரேமதோ/
பேருவகையோடு/ ஸ்ரீ ரகு நாதனை/ பேரன்புடன்/

பொக3டே3/ த்யாக3ராஜு/ மனவி/ வினவே/ (கோ)
போற்றும்/ தியாகாராசனின்/ விண்ணப்பத்தினை/ கேளடி/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
3 - 3ங்க3 நூபுரம்பு3னனு ஜனிஞ்செனு - கங்கை (அவன்) திருவடியில் பிறந்தாள் - வாமனாவதாரத்தில் நடந்த நிகழ்ச்சியினை, பாகவத புராணத்தில் (8-வது புத்தகம், அத்தியாயம் 21, 4-வது செய்யுள்) காணலாம்.

"அரசே! பிரம்மாவின் கமண்டலத்தின் நீர், அந்த 'வாமனர்' எனப்படும் உருக்கிரமரின் திருவடிகளைக் கழுவியதனால், புனிதமடைந்து, விண்ணினின்று, 'ஸ்வர்-நதி' எனப்படும் கங்கையாக, பூமிக்குப் பாய்ந்து, அந்த வாசுதேவனின் புகழைப் போன்று, மூவுலகங்களையும் புனிதமடையச் செய்தாள்."

Top

விளக்கம்
1 - 4னுஷ்கோடி - இச்சொல்லுக்கு, மூன்று விதமாகப் பொருள் கொள்ளலாம் - ராமனின் வில் நுனி - த4னுஷ்கோடி யெனும் தீர்த்தம் - குண்டலினி யோகத்தினில் கூறியபடி, 'மேரு தண்டம்' எனப்படும் 'தண்டுவடத்தின் நுனி' - என.

அனுபல்லவியில், 'நேரிடையாக, கார்முகில் வண்ண எழிலுருவத்தோனை, அவ்வப்போது காணும் சான்றோர்' என்று கூறுகின்றார். அந்த 'எழில் உருவம்', வில்லேந்தி நிற்கும் ராமனுடைய உருவத்தினைக் குறிப்பதாகும்.

'ஸ்ரீ ராம ரகு ராம' என்ற யதுகுல காம்போஜி ராக கீர்த்தனையில், 'அறவுருவாகிய ராமனின் திருவடிகளைத் தொட, அந்த சிவனில் வில், என்ன தவம் செய்ததோ' என்கின்றார். இந்த நிகழ்ச்சி, ராமன், ஜனகரின் அவையில், சீதையை வெல்ல, சிவனின் பருத்த வில்லினை முறித்ததனைக் குறிக்கும். ஆகவே, அந்த வில்லின் நுனியினை, ராமன் அழுத்திக்கொண்டு, நாணேற்றினான் என்றாகும். எனவே, 'வில் நுனி' என்பது 'இறைவனின் திருவடிகளை' மறைமுகமாகக் குறிப்பிடும்.

Top

'நட3சி நட3சி' என்ற கரஹரப் பிரிய ராக கீர்த்தனையில், உள்ளத்தில் உறையும் (ஆத்மாராம) இறைவனைக் காண, அயோத்தி நகருக்கு யாத்திரை செல்லும் உலகோரை கேலி செய்கின்றார்.

எனவே, தியாகராஜர், 'புனித நீராடலினால் அல்லது புனித க்ஷேத்திரங்களை தரிசிப்பதனாலோ, இறைவன் கிட்டான்; அவனை, உள்ளுறை இறைவனாகத்தான் காணமுடியும்' என்ற கருத்தினை இந்த கீர்த்தனையில் வெளிப்படுத்துகின்றார்.

சரணத்தில், இந்த பாரத தேசத்தின், புனிதமான இரண்டு நதிகளாகிய, கங்கையையும், காவேரியையும் குறிப்பிட்டு, 'கங்கை இறைவனின் திருவடிகளினின்று தோன்றியது', 'காவேரி, அரங்கனைக் கண்டதனால் புகழ் பெற்றது' என்று கூறுகின்றார். எனவே, அந்த நதிகள், 'புனிதமானவை' எனக் கருதப்படுவது, இறைவனால் என்ற கருத்தினையும் வெளிப்படுத்துகின்றார். எனவே, 'மற்ற கோடிக்கணக்கான நதிகள் எம்மாத்திரம்' என்பது 'கோடி நதிகள் இறைவனின் வில் நுனி, அதாவது, திருவடிகளில் உள்ளன' என்று கூறுவதன் உட்பொருளாகும்.

Top

'தனுஷ்கோடி' தீர்த்தத்தினைப் பற்றி விவரங்கள் காணவும். மேற்கூறியபடி, புனித நீர்நிலைகள் மற்றும் க்ஷேத்திரங்களைப் பற்றி தியாகராஜரின் கருத்தினை நோக்குகையில், 'தனுஷ்கோடி' என்பது அந்த க்ஷேத்திரத்தினைக் குறிக்காது என்பது விளங்கும்.

தியாகராஜர், தமது 'ஈஸ1 பாஹி மாம்' என்ற கீர்த்தனையில், சிவனை, 'ஹேமாசல சாப' (மேருவினை வில்லாக உடையோன்) என்று கூறுகின்றார். இந்த 'மேரு வில்' அல்லது 'மேரு தண்டம்' என்பது 'மனிதனின் தண்டுவடத்தினை'க் குறிப்பதாக, 'குண்டலினி யோக'த்தினில் கூறப்படும்.

'குண்டலின் யோகம்' என்ற ஸ்வாமி சிவானந்தாவின் புத்தகம் (download) மற்றும் 'குண்டலினி யோக விளக்கம்' நோக்கவும்.

இந்த 'தண்டுவடத்தின் நுனியினை'த்தான் தியாகராஜர் 'தனுஷ்கோடி' என்று கூறுகின்றார் என்று கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் மேற்கூறிய காரணங்களினால், அத்தகைய பொருள் பொருந்துமா என்பது ஐயமாகும்.

Top

2 - ஏடிகி - இச்சொல்லுக்கு, இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். 'எதற்கு' என்றும், 'ஆறுகளுக்கு' (ஏரு - ஆறு) என்றும். பரம்பரையாக, இச்சொல்லுக்கு, 'ஆறுகள்' என்ற பொருளே கொள்ளப்பட்டுள்ளதாக, புத்தகங்களில் உள்ள விளக்கங்களை நோக்குகையில் தெரிகின்றது. எனவே, 'ஆறுகளுக்குத் திரிகின்றாயே' என்று கேலியாக இங்கு பொருள் கொள்ளப்பட்டது. ஆயினும், 'எதற்குத் திரிகின்றாய்' என்று கேள்வியாகவும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

ஆறுகளுக்கு - புனித நீராடலுக்கு
எழிலுருவத்தோன் - ராமன்
கேளடி - மனத்தினைப் பெண்பாலில் விளிக்கின்றார்.

Top


Updated on 03 Sep 2010

No comments: