Tuesday, September 7, 2010

தியாகராஜ கிருதி - தா31ரதீ2 நீ ரு2ணமு - ராகம் தோடி - Daasarathi Nee Rinamu - Raga Todi

பல்லவி
தா31ரதீ2 நீ ரு2ணமு தீ3ர்ப நா
தரமா பரம பாவன நாம

அனுபல்லவி
ஆஸ1 தீர தூ3ர தே31முலனு
ப்ரகாஸி1ம்ப ஜேஸின ரஸிக ஸி1ரோமணி (தா3)

சரணம்
4க்தி லேனி கவி ஜால வரேண்யுலு
பா4வமெருக3 லேரனி 1கலிலோன ஜனி
பு4க்தி முக்தி கல்கு3னனி கீர்தனமுல
போ3தி4ஞ்சின த்யாக3ராஜ கரார்சித (தா3)


பொருள் - சுருக்கம்
  • தாசரதீ! முற்றிலும் தூய நாமத்தோனே!

    • ஆசை தீர, தூர தேசங்களில் ஒளிரச் செய்த, இரசிகரின் முடிமணியே!
    • பக்தியற்ற, புலமைத்திறனில் சிறந்தோர், உள்ளப் பாங்கினை அறியமாட்டாரென, கலியினில் பிறந்து, உலக இன்பமும், முக்தியும் உண்டாகுமென, கீர்த்தனங்களைப் புகட்டிய, தியாகராசனின் கரங்களினால் தொழப் பெற்ற, தாசரதீ!


  • உனது கடனைத் தீர்க்க என்னால் இயலுமா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தா31ரதீ2/ நீ/ ரு2ணமு/ தீ3ர்ப/ நா/
தாசரதீ/ உனது/ கடனை/ தீர்க்க/ என்னால்/

தரமா/ பரம/ பாவன/ நாம/
இயலுமா/ முற்றிலும்/ தூய/ நாமத்தோனே/


அனுபல்லவி
ஆஸ1/ தீர/ தூ3ர/ தே31முலனு/
ஆசை/ தீர/ தூர/ தேசங்களில்/

ப்ரகாஸி1ம்ப/ ஜேஸின/ ரஸிக/ ஸி1ரோமணி/ (தா3)
ஒளிர/ செய்த/ இரசிகரின்/ முடிமணியே/


சரணம்
4க்தி/ லேனி/ கவி ஜால/ வரேண்யுலு/
பக்தி/ யற்ற/ புலமைத்திறனில்/ சிறந்தோர்/

பா4வமு/-எருக3/ லேரு/-அனி/ கலிலோன/ ஜனி/
உள்ளப் பாங்கினை/ அறிய/ மாட்டார்/ என/ கலியினில்/ பிறந்து/

பு4க்தி/ முக்தி/ கல்கு3னு/-அனி/ கீர்தனமுல/
உலக இன்பமும்/ முக்தியும்/ உண்டாகும்/ என/ கீர்த்தனங்களை/

போ3தி4ஞ்சின/ த்யாக3ராஜ/ கர/-அர்சித/ (தா3)
புகட்டிய/ தியாகராசனின்/ கரங்களினால்/ தொழப் பெற்ற/ தாசரதீ!...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கலிலோன - கலலோன.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - கலிலோன - கலலோன (கனவினில்) - 'கலலோன' என்பது சரியானால், கீழ்க்கண்டவாறு மொழிபெயர்க்கப்படும் -

"பக்தியற்ற, புலமைத்திறனில் சிறந்தோர், உள்ளப் பாங்கினை அறியமாட்டாரென, கனவினில் தோன்றி, உலக இன்பமும், முக்தியும் உண்டாகுமென, கீர்த்தனங்களை (தியாகராஜனுக்கு) புகட்டிய, தியாகராசனின் கரங்களினால் தொழப் பெற்ற, தாசரதீ!"

ஆனால் கீழ்க்கண்ட காரணங்களினால், 'கனவினில் தோன்றி' என்பது தவறாகும் - (1) 'போ3தி4ஞ்சின தியாகராஜ கரார்சித' (புகட்டிய தியாகராஜனின் கரங்களால் தொழப்பெற்ற) என்பதனால், 'புகட்டியது' தியாகராஜர் என்று பொருளாகுமே தவிர, 'இறைவன் தியாகராஜருக்குப் புகட்டினான்' என்றல்ல. (2) 'ஜனி' (பிறந்து) என்ற சொல், 'கனவினில்' என்பதுடன் சேராது. 'கனவினில் தோன்றி' என்றுதான் இருக்கவேண்டுமே தவிர, 'கனவினில் பிறந்து' என்பது தவறாகும். (3). 'ஆஸ1 தீர தூ3ர தே31முலனு ப்ரகாஸிம்ப ஜேஸின' (ஆசை தீர, தூர தேசங்களில் ஒளிரச் செய்த) என்பதற்கு, 'இறைவன் ஒளிரச் செய்தான்' என்றுதான் பொருள் கொள்ள இயலும். அப்படி, தியாகராஜனுக்கு இறைவன் புகட்டியதாகக் கொண்டால், 'தன்னை ஒளிரச் செய்த' என்ற தியாகராஜர் கூறுவது முரண்பாடாகும். (4) 'இறைவன் புகட்டியதாக'க் கொண்டால், 'நீ ரு2ணமு தீர்ப தரமா?' (உனது கடனைத் தீர்க்க என்னால் இயலுமா) என்பதற்குப் பொருளற்றுப் போகும். இறைவன் புகட்டியதற்கு, தியாகராஜர் ஏன் கடன்படவேண்டும்? எனவே, 'கலலோன' (கனவினில்) என்பது தவறாகும்.

'கடன்' என்று தியாகராஜர் கூறுவது, 'கலியினில் பிறக்கவைத்து, இசைமூலமாக, இறைவன் புகழினைப் பாடி, உலக இன்பங்களும், முக்தி கிடைப்பதற்கு, மனிதர்களுக்கு அவ்விசையினைப் புகட்ட ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்காகும்'.

Top

தாசரதி - தசரதன் மைந்தன் - இராமன்
இரசிகர் - இசைச் சுவை நுகர்வோர்
உள்ளப் பாங்கு - இறைப் பற்றின் தன்மை
கீர்த்தனங்கள் - இசையுடன் இறைவனின் புகழ் பாடுதல்

Top


Updated on 08 Sep 2010

No comments: