Monday, August 23, 2010

தியாகராஜ கிருதி - ஏமி ஜேஸிதே - ராகம் தோடி - Emi Jesite - Raga Todi

பல்லவி
ஏமி ஜேஸிதேனேமி ஸ்ரீ ராம
ஸ்வாமி கருண லேனி வாரிலலோ

அனுபல்லவி
காம மோஹ தா3ஸுலை ஸ்ரீ ராமுனி
1கட்டு தெலிய லேனி வாரிலலோ(னேமி)

சரணம்
சரணம் 1
ஸவமு ஜேஸிதேனேமி கலிமினி
2புத்ரோத்ஸவமு கலிகி3தேனேமி
பு4விலோனன்ய பீ3ஜ ஜனிதுனி கொனியேமி
ஸி1வ கர ஸ்ரீ ராமுனி த3ய லேனி வாரிலலோ(னேமி)


சரணம் 2
மேட3 கட்டிதேனேமி அந்து3ன லாந்த3ரு
ஜோடு3 கட்டிதேனேமி
சேடி3யலனு மெப்பிஞ்ச தெலிஸிதேனேமி
ஈடு3 லேனி ராமுனி த3ய லேனி வாரிலலோ(னேமி)


சரணம் 3
இம்மு கலிகி3தேனேமி இல்லாலிகி
ஸொம்மு பெட்டிதேனேமி
கம்ம வில்து கேளினி தெலிஸியேமி
தம்மி கண்டி வானி கருண லேனி வாரிலலோ(னேமி)


சரணம் 4
ராஜ்யமேலிதேனேமி ப3ஹு ஜனுலலோ
பூஜ்யுலைதேனேமி
ஆஜ்ய ப்ரவாஹமுதோனன்னமிடி3தேனேமி
பூஜ்யுடை3ன ராமுனி த3ய லேனி வாரிலலோ(னேமி)


சரணம் 5
கு3ருவு தானைதேனேமி கண்டிகி மேனு
கு3ருவை தோசிதேனேமி
வர மந்த்ரமன்யுலகுபதே3ஸி1ஞ்சிதேனேமி
வர த்யாக3ராஜ நுதுனி த3ய லேனி வாரிலலோ(னேமி)


பொருள் - சுருக்கம்
  • இராம சுவாமியின் கருணையற்றோர், புவியினில், என்ன செய்தாலென்ன?
  • காம, மோகத்திற்கு அடிமைகளாகி, இராமனின் கட்டினை அறியாதவர், புவியினில், என்ன செய்தாலென்ன?

    • வேள்விகள் இயற்றினாலென்ன?
    • சொத்துக்கு மக்கட் செல்வம் உண்டானாலென்ன?
    • புவியில் பிறருக்குப் பிறந்தவனை தத்து எடுத்தாலென்ன?

    • மேடை கட்டினாலென்ன?
    • அதனில் லாந்தர் ஜோடு கட்டினாலென்ன?
    • வனிதையரை மெச்சத் தெரிந்தாலென்ன?

    • உலக இன்பங்கள் உண்டானாலென்ன?
    • இல்லாளுக்கு நகைகள் இட்டாலென்ன?
    • கரும்பு வில்லோன் கேளிக்கைகள் தெரிந்தாலென்ன?

    • அரசாண்டாலென்ன?
    • வெகு மக்களிடை வணங்குதற்குரியோன் ஆனாலென்ன?
    • நெய் வழிந்தோட அன்னமிட்டாலென்ன?

    • தான் ஆசான் ஆகினாலென்ன?
    • கண்ணுக்குத் (தனது) மேனி செழிப்பாகத் தோன்றினாலென்ன?
    • உயர் மந்திரங்களை மற்றவருக்கு உபதேசித்தாலென்ன?


    • மங்களமருளும்,
    • இணையற்ற,
    • வணக்கத்திற்குரிய,
    • கமலக்கண்ணனின்,
    • உயர் தியாகராசன் போற்றும்,

  • இராமனின் தயையற்றோர், புவியினில், என்ன செய்தாலென்ன?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமி/ ஜேஸிதே/-ஏமி/ ஸ்ரீ ராம/
என்ன/ செய்தால்/ என்ன/ ஸ்ரீ இராம/

ஸ்வாமி/ கருண/ லேனி வாரு/-இலலோ/
சுவாமியின்/ கருணை/ அற்றோர்/ புவியினில்/


அனுபல்லவி
காம/ மோஹ/ தா3ஸுலை/ ஸ்ரீ ராமுனி/
காம/ மோகத்திற்கு/ அடிமைகளாகி/ ஸ்ரீ ராமனின்/

கட்டு/ தெலிய லேனி வாரு/-இலலோ/-(ஏமி)
கட்டினை/ அறியாதவர்/ புவியினில்/ என்ன...


சரணம்
சரணம் 1
ஸவமு/ ஜேஸிதே/-ஏமி/ கலிமினி/
வேள்விகள்/ இயற்றினால்/ என்ன/ சொத்துக்கு/

புத்ர/-உத்ஸவமு/ கலிகி3தே/-ஏமி/
மக்கட்/ செல்வம்/ உண்டானால்/ என்ன/

பு4விலோ/-அன்ய பீ3ஜ/ ஜனிதுனி/ கொனி/-ஏமி/
புவியில்/ பிறருக்கு/ பிறந்தவனை/ தத்து எடுத்தால்/ என்ன/

ஸி1வ/ கர/ ஸ்ரீ ராமுனி/ த3ய/ லேனி வாரு/-இலலோ/-(ஏமி)
மங்களம்/ அருளும்/ ஸ்ரீ ராமனின்/ தயை/ அற்றோர்/ புவியினில்/ என்ன...


சரணம் 2
மேட3/ கட்டிதே/-ஏமி/ அந்து3ன/ லாந்த3ரு/
மேடை/ கட்டினால்/ என்ன/ அதனில்/ லாந்தர்/

ஜோடு3/ கட்டிதே/-ஏமி/
ஜோடு/ கட்டினால்/ என்ன/

சேடி3யலனு/ மெப்பிஞ்ச/ தெலிஸிதே/-ஏமி/
வனிதையரை/ மெச்ச/ தெரிந்தால்/ என்ன/

ஈடு3/ லேனி/ ராமுனி/ த3ய/ லேனி வாரு/-இலலோ/-(ஏமி)
இணை/ அற்ற/ இராமனின்/ தயை/ அற்றோர்/ புவியினில்/ என்ன...


சரணம் 3
இம்மு/ கலிகி3தே/-ஏமி/ இல்லாலிகி/
உலக இன்பங்கள்/ உண்டானால்/ என்ன/ இல்லாளுக்கு/

ஸொம்மு/ பெட்டிதே/-ஏமி/
நகைகள்/ இட்டால்/ என்ன/

கம்ம/ வில்து/ கேளினி/ தெலிஸி/-ஏமி/
கரும்பு/ வில்லோன்/ கேளிக்கைகள்/ தெரிந்தால்/ என்ன/?

தம்மி/ கண்டி வானி/ கருண/ லேனி வாரு/-இலலோ/-(ஏமி)
கமல/ கண்ணனின்/ கருணை/ அற்றோர்/ புவியினில்/ என்ன...


சரணம் 4
ராஜ்யமு/-ஏலிதே/-ஏமி/ ப3ஹு/ ஜனுலலோ/
அரசு/ ஆண்டால்/ என்ன/ வெகு/ மக்களிடை/

பூஜ்யுலு/-ஐதே/-ஏமி/
வணங்குதற்குரியோன்/ ஆனால்/ என்ன/

ஆஜ்ய/ ப்ரவாஹமுதோ/-அன்னமு/-இடி3தே/-ஏமி/
நெய்/ வழிந்தோட/ அன்னம்/ இட்டால்/ என்ன/

பூஜ்யுடை3ன/ ராமுனி/ த3ய/ லேனி வாரு/-இலலோ/-(ஏமி)
வணக்கத்திற்குரிய/ இராமனின்/ தயை/ அற்றோர்/ புவியினில்/ என்ன...


சரணம் 5
கு3ருவு/ தானு/-ஐதே/-ஏமி/ கண்டிகி/ மேனு/
ஆசான்/ தான்/ ஆகினால்/ என்ன/ கண்ணுக்கு/ (தனது) மேனி/

கு3ருவை/ தோசிதே/-ஏமி/
செழிப்பாக/ தோன்றினால்/ என்ன/

வர/ மந்த்ரமு/-அன்யுலகு/-உபதே3ஸி1ஞ்சிதே/-ஏமி/
உயர்/ மந்திரங்களை/ மற்றவருக்கு/ உபதேசித்தால்/ என்ன/

வர/ த்யாக3ராஜ/ நுதுனி/ த3ய/ லேனி வாரு/-இலலோ/-(ஏமி)
உயர்/ தியாகராசன்/ போற்றுவோனின்/ தயை/ அற்றோர்/ புவியினில்/ என்ன...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், முதல் மூன்று சரணங்களின் வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.

அனுபல்லவி மற்றும் ஒவ்வோர் சரணத்தின் கடைசியிலும் வரும் 'வாரிலலோ' என்ற சொல், புத்தகங்களில் ஒரே மாதிரியாகக் கொடுக்கப்படவில்லை.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - கட்டு - இச்சொல்லினை, தியாகராஜர், தமது 'கட்டு ஜேஸினாவு' என்ற கீர்த்தனையில் 'பிணைப்பு', 'அடிமைத்தனம்' என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார். இச்சொல்லுக்கு, 'ஆணை', 'உத்தரவு' என்றும் பொருள் கூறலாம்.

வால்மீகி ராமாயணத்தில் (யுத்த காண்டம், 18-வது அத்தியாயம்) விபீடணனுக்குப் புகல் அளிக்கையில், இராமன், தனது கோட்பாட்டினைக் கூறுகின்றான். இதனை, வைணவர்கள் 'சரணாகதி சாத்திரம்' என்றும் கூறுவர். இராமன் கூறியதாவது -

"ஒருமுறையாகிலும், 'உன்னிடம் புகல் கோரினேன்' என்று எவன் இரந்து வருகின்றானோ,
அவனுக்கு, அனைத்து உயிரினங்களிடமிருந்தும், அபயம் அளிக்கின்றேன் - இதுவே எனது விரதம்."

இந்தக் கோட்பாட்டின்படி, இக்கீர்த்தனையில், 'கட்டு' என்ற சொல்லுக்கு, 'புகல் அடைதல்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

Top

'கட்டு' என்ற சொல்லுக்கு 'கண்கட்டு மாயை' என்ற பொருளும் கொள்ளலாம். இது குறித்து, 'கடோபநிடத'த்தில் (II.i.1) கூறப்பட்டது -

"தான்தோன்றியான பரம்பொருள், புலன்களை, 'வெளிநோக்கு' எனும் குறையுடையனவாகப் படைத்தான்.
அதனால், மனிதன், எப்போழ்தும், வெளிநோக்குமட்டுமே உடைத்துள்ளான் - உள்நோக்கல்ல.
எவனோ ஒரு தீரன் மட்டுமே, அமரத்துவம் வேண்டி,
புலன்களை உள்நோக்கிச் செலுத்தி, பரம்பொருளினைக் காண்கின்றான்."

இந்த, 'புலன்களின் வெளிநோக்கு' எனும் குறையினையும் 'கட்டு' என்று கூறலாம்.

'லலிதா ஸஹஸ்ர நாம'த்தில் 'மூன்று முடிச்சு'களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது - 'ப்3ரஹ்ம க்3ரந்தி2', 'விஷ்ணு க்3ரந்தி2' மற்றும் 'ருத்3ர க்3ரந்தி2' (பிரமன், விஷ்ணு மற்றும் ருத்திர முடிச்சுகள் என). இம்முடிச்சுகளையும், 'கட்டு' என்று கூறலாம். மூன்று முடிச்சுக்கள்.

Top

2 - புத்ரோத்ஸவமு - மக்கட் செல்வம். இது பற்றி, 'மார்க்கண்டேயரின் கதை' குறிப்பிடத்தக்கது. 'மிருகண்டு' என்ற முனிவர், தனது மனைவியுடன், மக்கட் செல்வம் வேண்டித் தவம் இயற்றினார். தவத்தினால் மகிழ்ந்த சிவன், அவர்கள் முன்தோன்றி, நீண்ட நாள் வாழக்கூடிய, அறிவிலிகளான 100 மக்கள் வேண்டுமா, அல்லது குறுகிய ஆயுளுடைய, ஆனால் அறிவிற் சிறந்த, ஒரு மகன் வேண்டுமா, என்று கேட்க, அம்முனிவர், குறுகிய ஆயுளுடைத்தாலும், அறிவிற்சிறந்த மகன் வேண்ட, அங்ஙனமே, மார்க்கண்டேயன் பிறந்தான். தன்னுடைய அறிவினால், இறப்பினையும் வென்ற மார்க்கண்டேயனின் கதைச் சுருக்கம் நோக்கவும்.

மார்க்கண்டேயர் இயற்றிய 'சந்திரசேகர அஷ்டகம்' நோக்கவும்.

Top

ராமனின் கட்டு - இறைவனிடம் புகலடைதல்
மேடை - உப்பரிகை
லாந்தர் - விளக்கு
கரும்பு வில்லோன் - காமன்
கரும்பு வில்லோன் கேளிக்கை - காமக் கேளிக்கை

Top


Updated on 24 Aug 2010

No comments: