Tuesday, July 6, 2010

தியாகராஜ கிருதி - மானமு லேதா3 - ராகம் ஹமீர் கல்யாணி - Manamu Leda - Raga Hamir Kalyani

பல்லவி
மானமு லேதா3 தனவாட3னி அபி4(மானமு)

அனுபல்லவி
கானமுரா நீ வலெ 1நிர்-மோஹினி
2கா3ன ருசி தெலியு குஸ1 லவ ஜனக (மா)

சரணம்
நீ ஸமுக2முன 3ரவி தனயுடு3 நின்னு
பா3ஸலு பல்கக3 4ரோஸமுதோ
ஸிம்ஹாஸனாதி4பதி ஜேஸின நீகு
தா3ஸுடை3ன த்யாக3ராஜ கரார்சித (மா)


பொருள் - சுருக்கம்
இசைச் சுவையறியும், குசலவர்களை யீன்றோனே! தியாகராசனின் கைத் தொழப்பெற்றோனே!
  • மானமில்லையோ?
  • தன்னவனெனப் பாசமில்லையோ?
    • காணோமய்யா, உன்னைப் போன்ற பற்றற்றவனை.
    • உனது முன்னிலையில், பரிதி மைந்தன், உன்னைப் பழிமொழிகள் கூற, உறைப்புடன், அரியாதனத் தலைவனாக்கிய
    • உனக்குத் தொண்டன் நான்.

  • மானமில்லையோ?
  • தன்னவனெனப் பாசமில்லையோ?பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மானமு/ லேதா3/ தனவாடு3/-அனி/ அபி4மானமு/ (லேதா3)
மானம்/ இல்லையோ/ தன்னவன்/ என/ பாசம்/ இல்லையோ...


அனுபல்லவி
கானமுரா/ நீ/ வலெ/ நிர்-மோஹினி/
காணோமய்யா/ உன்னை/ போன்ற/ பற்றற்றவனை/

கா3ன/ ருசி/ தெலியு/ குஸ1/ லவ/ ஜனக/ (மா)
இசை/ சுவை/ யறியும்/ குச/ லவர்களை/ யீன்றோனே/


சரணம்
நீ/ ஸமுக2முன/ ரவி/ தனயுடு3/ நின்னு/
உனது/ முன்னிலையில்/ பரிதி/ மைந்தன்/ உன்னை/

பா3ஸலு/ பல்கக3/ ரோஸமுதோ/
பழிமொழிகள்/ கூற/ உறைப்புடன்/

ஸிம்ஹாஸன/-அதி4பதி/ ஜேஸின/ நீகு/
அரியாதன/ தலைவன்/ ஆக்கிய/ உனக்கு/

தா3ஸுடை3ன/ த்யாக3ராஜ/ கர/-அர்சித/ (மா)
தொண்டனாகிய/ தியாகராசனின்/ கை/ தொழப்பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - கா3ன ருசி தெலியு குஸ1 லவ ஜனக - இசைச் சுவையறியும், குசலவர்களை யீன்றோனே - ராமாயணத்தின் உத்தர காண்டத்தில் (அத்தியாயம் 94), இராமன், தன்னுடைய மைந்தர்களினால், வால்மீகி இயற்றிய, இராம காதையினை, இசைவடிவில் பாடக் கேட்டான் என்று கூறப்பட்டுள்ளது.

Top

3 - ரவி தனயுடு3 நின்னு பா3ஸலு பல்கக3 - பரிதி மைந்தன் உன்னைப் பழிமொழிகள் கூற - சுக்கிரீவனுடன் தோழமை பூணுகையில், இராமன், தான் வாலியினைக் கொன்று அவனுக்கு (சுக்கிரீவனுக்கு) அரசு அளிப்பதாக வாக்களித்தான். சுக்கிரீவனுக்கு, இராமனின் வலிமைகளைப்பற்றி அதிகம் தெரியாது. அதனால், வலியோனாகிய தனது அண்ணன் வாலியுடன் போரிட்டு இராமன் வெல்ல இயலுமா என்ற ஐயத்தினால், வாலியின் வலிமைகளைப் பற்றி, திரும்பத் திரும்பக் கூறலானான். இதனை உணர்ந்த இராமன், அவனுடை ஐயத்தினைப் போக்குதற்காக, அங்கிருந்த, வாலியினால் கொல்லப்பட்ட, துந்துபி என்னும் எருமையரக்கனின் பெருத்த, உலர்ந்த உடலினை, தனது கால் கட்டை விரலினால் உதைத்தெறிந்தான். அப்படியும் சுக்கிரீவனின் ஐயம் தீராமையால், அங்கிருந்த, ஏழு குங்குலிய மரங்களையும் ஓரம்பினால் துளைத்து, அந்த அம்பு திரும்பத் தனது அம்பறாத்தூணியினை வந்தடையச் செய்தான்.

Top

அதன்பின், ஐயம் நீங்கிய சுக்கிரீவன், வாலியைப் போருக்கழைத்தான். அந்தப் போரில், இருவரின் உருவ ஒற்றுமையினால், சுக்கிரீவனை அடையாளம் கண்டுகொள்ள இயலாது, இராமன் வாலியைக் கொல்லவில்லை. வாலி, சுக்கிரீவனை நையப்புடைக்க, அவன் தப்பி ஓடிவந்து, இராமனைப் பழிசொற்கள் கூறினான். வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், அத்தியாயம் 12 நோக்கவும்.

சுக்கிரீவன் கூறியது -
"உன்னுடைய வலிமைகளைக் காட்டி, வாலியைப் போருக்கழைக்கச் சொல்லி,
எதிரியினால் என்னைப் புடைக்கச்செய்து, ஈதென்ன செய்தாய்?
இராகவா! உண்மையை முன்னமே என்னிடம் கூறியிருக்கவேண்டும்,
'நான் வாலியைக் கொல்லப் போவதில்லை' என்று; நான் இங்கிருந்து நகர்ந்திருக்கமாட்டேன்." (26,27)

Top

4 - ரோஸமுதோ - உறைப்புடன் - வால்மீகி ராமாயணத்தின்படி (கிஷ்கிந்தா காண்டம், அத்தியாயம் 12), சுக்கிரீவனுடைய சொற்களினால், இராமன் சினமுற்றதாகத் தெரியவில்லை. மாறாக, சுக்கிரீவனிடம் கனிவுடன் கூறிய சொற்களாவன -

"தம்பி சுக்கிரீவா! சினத்தினை உனது மனத்தினின்றும் விலக்குவாய்;
இந்த வலிய அம்பினை நான் எய்யாத காரணத்தினைக் கூறுகின்றேன், கேள்." (29)

Top

விளக்கம்
1 - நிர்-மோஹி - பற்றற்றோனே - 'லவ குசர்களின் தந்தை'யென்று கூறிவிட்டு, 'பற்றற்றோனே' என்று இராமனைத் தியாகராஜர் விளிப்பது காரணத்துடனே. சீதை சூலுற்றுள்ளாள் என்று தெரிந்தும், அவளை, உலகோரின் அவதூறுக்காக, இராமன் நாடுகடத்தினான். முன்னம், இலங்கையில், சீதையின் கற்பினைப் பற்றி நன்குணர்ந்தும், அவளைப் பழிச் சொற்கள் கூறி, நெருப்பில் புகச் செய்தான். இவற்றினால், இராமன், தன் உயிருக்குயிரான, இனிய மனைவி, உற்றார், சுற்றத்திடம் வைக்கும் பற்றினை விட, தனது பண்புகளுக்கும், அரச தர்மத்தினுக்கும் அதிக மதிப்புக் கொடுத்தான் என்பது விளங்கும். எனவே, தியாகராஜர், இராமனைக் கிண்டலாக, உயர்த்துகின்றார்.

குசலவர்கள் - இராமனின் மைந்தர்கள்
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்
அரியாதனத் தலைவன் - அரசன்

Top


Updated on 06 Jul 2010

No comments: