Saturday, May 1, 2010

தியாகராஜ கிருதி - ஞானமொஸக3 - ராகம் பூரி கல்யாணி - Jnanamosaga - Raga Poori Kalyani

பல்லவி
ஞானமொஸக3 ராதா33ருட33மன வாதா3

அனுபல்லவி
நீ நாமமு சே நா மதி3 1நிர்மலமைனதி3 (ஞா)

சரணம்
பரமாத்முடு3 ஜீவாத்முடு3 2பது3-நாலுகு3 லோகமுலு
நர 3கின்னர கிம்புருஷுலு நாரதா3தி3 முனுலு
4பரிபூர்ண நிஷ்களங்க நிரவதி4 ஸுக2 தா3யக
வர த்யாக3ராஜார்சித வாரமு 5தானனே (ஞா)


பொருள் - சுருக்கம்
  • கருடன் ஏறுவோனே!
  • பரிபூரணனனே! களங்கமற்றோனே! இடையறா சுகமருள்வோனே! தியாகராசன் தொழும் மேலோனே!

    • மெய்யறிவு அருளலாகாதா? வாதா?
    • உனது நாம பஜனை செய்து, எனதுள்ளம் மாசற்றதாகியது;
    • பரமான்மா, சீவான்மா, பதினான்கு உலகங்கள், மனிதர், கின்னர, கிம்புருடர்கள், நாரதர் முதலான முனிவர்கள், எவ்வமயமும் தானேயெனும் மெய்யறிவு அருளலாகாதா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஞானமு/-ஒஸக3 ராதா3/ க3ருட3/ க3மன/ வாதா3/
மெய்யறிவு/ அருளலாகாதா/ கருடன்/ ஏறுவோனே/ வாதா/


அனுபல்லவி
நீ/ நாமமு/ சே/ நா/ மதி3/ நிர்மலமு/-ஐனதி3/ (ஞா)
உனது/ நாம (பஜனை)/ செய்து/ எனது/ உள்ளம்/ மாசற்றது/ ஆகியது/


சரணம்
பரமாத்முடு3/ ஜீவாத்முடு3/ பது3-நாலுகு3/ லோகமுலு/
பரமான்மா/ சீவான்மா/ பதினான்கு/ உலகங்கள்/

நர/ கின்னர/ கிம்புருஷுலு/ நாரத3/-ஆதி3/ முனுலு/
மனிதர்/ கின்னர/ கிம்புருடர்கள்/ நாரதர்/ முதலான/ முனிவர்கள்/

பரிபூர்ண/ நிஷ்களங்க/ நிரவதி4/ ஸுக2/ தா3யக/
பரிபூரணனனே/ களங்கமற்றோனே/ இடையறா/ சுகம்/ அருள்வோனே/

வர/ த்யாக3ராஜ/-அர்சித/ வாரமு/ தானு/-அனே/ (ஞா)
மேலோனே/ தியாகராசன்/ தொழும்/ எவ்வமயமும்/ தானே/ எனும்/ மெய்யறிவு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
ராகம் - பூரி கல்யாணி - ஷட்3வித4 மார்கி3ணி -
3மனஸ்1ரம.

1 - நிர்மலமைனதி3 - நிர்மலமையுன்னதி3.

2 - பது3-நாலுகு3 - பதி3-நாலுகு3.
Top

மேற்கோள்கள்
2 - பது3-நாலுகு3 லோகமுலு - பதினான்கு உலகங்கள் - மேலேழு - பூலோகம், புவர்லோகம், ஸ்வர்லோகம், மஹர்லோகம், ஜனர்லோகம், தபோலோகம், ஸத்யலோகம். கீழேழு - அதளம், விதளம், ஸுதளம், ரஸாதளம், தளாதளம், மஹாதளம், பாதாளம்.

3 - கின்னர கிம்புருஷுலு - கின்னர, கிம்புருடர்கள் - வானோரின் இசைக்கலைஞர்கள் - குபேரனின் பணியாட்கள்

4 - பரிபூர்ண - பரிபூரணன் - இச்சொல்லுக்கு இலக்கணம் கூறுவது கடினமாகும். கீழ்க்கண்ட 'ஈஸா1வஸ்ய உபநிடத' சாந்தி பாடச் செய்யுளினை நோக்கவும் -

ஓம் பூர்ணமத3: பூர்ணமித3ம் பூர்ணாத் பூர்ணமுத3ச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதா3ய பூர்ணமேவ அவஸி1ஷ்யதே ||

Top

"ஓம். பூரணம் அஃது; பூரணம் இஃது; (அந்த) பூரணத்தினின்று (இந்த) பூரணம் தோன்றுகின்றது;
(அந்த) பூரணத்தினின்று (இந்த) பூரணத்தினை நீக்க, பூரணமே எஞ்சி நிற்கும்."

இஃது (இந்த) - புலன்கள், மனம், சித்தத்தினால் அறியப்படும் உலகம்;
அஃது (அந்த) - இவை யாவற்றிற்கும் அப்பாற்பட்ட, ஆனால் யாவற்றிற்கும் ஊன்றுகோலான, என்றும் நிலைபெயராத பரம்பொருள்.

செய்யுளின் விளக்கம்

Top

விளக்கம்
5 - தானனே - தானேயெனும். புத்தகங்களில், 'நானே பரமான்மா என்றுணரும் மெய்யறிவு', 'பரமான்மா மற்றும் சீவான்மாவின் ஒற்றுமையினை உணரும் மெய்யறிவு', 'பரமான்மா, சீவான்மா மற்றும் யாவும் நீயே எனும் மெய்யறிவு' என பலவிதமாகப் பொருள் கொள்ளப் பட்டுள்ளது.

சரணத்தில், 'சீவான்மா' (பரமாத்முடு3 ஜீவாத்முடு3) கொடுக்கப்பட்டுள்ளதால், 'தான்' என்பது தன்னிலையைக் குறிக்காது என்று நான் கருதுகின்றேன். எனவே 'தான்' என்பதற்கு முன்னிலையில் 'நீ' என்று பொருள் கொள்ளப்பட்டது.

Top

என் சிற்றறிவுக்கு எட்டியவரை, 'நானே பரமான்மா' என்று கூறுதல் முறையாகாது என்று நான் கருதுகின்றேன். இது குறித்து, ஆதி சங்கரர், தமது 'ஷ்ட்பதீ3 ஸ்1லோக'த்தில் (3) கூறுவது -

"தலைவா! எனக்கும், உனக்கும் வேறுபாடுகள் அகன்றாலும், நான், உன்னவனாவேனே யன்றி, நீ என்னவனாவதில்லை.
கடலினின்றே அலைகளே யன்றி, அலைகளினின்று கடல் அன்று."

Top


Updated on 02 May 2010

No comments: