Saturday, May 15, 2010

தியாகராஜ கிருதி - மஹிம தக்3கி3ஞ்சுகோ - ராகம் ரிஷப4 ப்ரிய - Mahima Tagginchuko - Raga Rishabha Priya

பல்லவி
1மஹிம தக்3கி3ஞ்சுகோவய்ய
மஹினி ஸத்ய ஸ்வரூபுட3னு
மஹா ராஜ ராஜேஸ்1வர நீ (ம)

அனுபல்லவி
விஹித மார்க34க்துலுகா3 மஹாத்முலு
வெலயக3 வின லேதா3 ஸ்வகீயமகு3 (ம)

சரணம்
2பனிகி ரானி பனுலு ஜேஸி ஸ1ரணனு
வாரி
வெதலு தீர்சி ப்3ரோசிதிவே
தனிவி தீர நம்மினாட3னுசு ஸ்ரீ
த்யாக3ராஜ நுத தப்புலாட3கு (ம)


பொருள் - சுருக்கம்
பேரரசர்களுக்கும் பேரீசனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • புவியில் மெய்ம்மை வடிவத்தோனெனும் உனது சொந்த மகிமையினைக் குறைத்துக்கொள்ளுமய்யா;
    • விதித்த நெறியில், தொண்டர்களாக, சான்றோர்கள் விளங்கினரென, கேள்விப் படவில்லையா?
    • பயனற்ற பணிகளை இயற்றி, (பின்னர்) புகல் அடைந்தோரின் துயரங்களை தீர்த்து, காத்தனையே!

  • (உன்னை) உளமாற நம்பினவன் என்பதனால், (என்மீது) குற்றம் காணாதே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மஹிம/ தக்3கி3ஞ்சுகோ/-அய்ய/
மகிமையினை/ குறைத்துக்கொள்ளும்/ அய்யா/

மஹினி/ ஸத்ய/ ஸ்வரூபுடு3/-அனு/
புவியில்/ மெய்ம்மை/ வடிவத்தோன்/ எனும்/

மஹா/ ராஜ ராஜ/-ஈஸ்1வர/ நீ/ (ம)
பெரும்/ பேரரசர்களுக்கும்/ ஈசனே/ உனது/ மகிமையினை...


அனுபல்லவி
விஹித/ மார்க3/ ப4க்துலுகா3/ மஹாத்முலு/
விதித்த/ நெறியில்/ தொண்டர்களாக/ சான்றோர்கள்/

வெலயக3/ வின லேதா3/ ஸ்வகீயமகு3/ (ம)
விளங்கினரென/ கேள்விப் படவில்லையா/ சொந்த/ மகிமையினை...


சரணம்
பனிகி ரானி/ பனுலு/ ஜேஸி/ ஸ1ரணு-/
பயனற்ற/ பணிகளை/ இயற்றி/ (பின்னர்) புகல்/

அனு வாரி/ வெதலு/ தீர்சி/ ப்3ரோசிதிவே/
அடைந்தோரின்/ துயரங்களை/ தீர்த்து/ காத்தனையே/

தனிவி தீர/ நம்மினாடு3/-அனுசு/ ஸ்ரீ/
(உன்னை) உளமாற/ நம்பினவன்/ என்பதனால்/ ஸ்ரீ/

த்யாக3ராஜ/ நுத/ தப்புலு/-ஆட3கு/ (ம)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ (என்மீது) குற்றம்/ காணாதே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மஹிம தக்3கி3ஞ்சுகோ - எல்லா புத்தகங்களிலும் 'மஹிம த3க்கிஞ்சுகோ' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 'மகிமையைக் குறைத்துக்கொள்வாய்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கில், 'குறைத்துக்கொள்' என்பதற்கு, 'தக்3கி3ஞ்சுகோ' எனப்படும். எனவே, 'மஹிம தக்3கி3ஞ்சுகோ' என ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
2 - பனிகி ரானி பனுலு ஜேஸி ஸ1ரணனு வாரு - பயனற்ற பணிகளை இயற்றி, பின்னர் புகல் அடைந்தோர் - இது அனேகமாக சுக்கிரீவனைக் குறிக்கலாம். சுக்கிரீவன் தனது சொந்த நலனுக்காக, இராமனிடம் புகலடைந்தான்.

பாகவத புராணத்தில் (புத்தகம் 6, அத்தியாயங்கள் 1-3), 'அஜாமிளன்' என்பவனுடைய கதையினையும் உதாரணம் கூறலாம். அஜாமிளன், வாழ்நாள் முழுவதும் வீணாக்கிவிட்டு, கடைசி காலத்தில், உயிர் போகும் தறுவாயில், எமனின் தூதர்களைக் கண்டு அஞ்சி, தனது மகனை 'நாராயணா' என்றழைத்தான். உடனே, விஷ்ணுவின் பணியாட்கள் விரைந்து வந்து, எம தூதர்களை விரட்டியடித்தனர்.

Top

விளக்கம்
இந்த கிருதியில் கூறப்பட்ட, 'விஹித மார்க3' (விதித்த நெறி) மற்றும் 'தப்புலாட3கு' (குற்றம் காணாதே) என்ற சொற்களுக்கு, தியாகராஜர் எந்த சூழ்நிலையில் இந்த கிருதியினை இயற்றினார் என்ற விவரம் தெரியாது, சரிவர பொருள் கொள்ள இயலாது. 'விஹித மார்க3' (விதித்த நெறி) என்று எதனைச் சொல்கின்றார் என விளங்கவில்லை.

Top

ஆனால், இந்த கிருதியினை முழுமையாக நோக்குகையில், அவர் உரைப்பது என்னவென்றால், 'நீ கீதையினில் வாக்களித்தபடி, நான் உளமாற உன்னிடம் சரணடைந்துவிட்டேன். இனி உனது சொல்லினைக் காப்பது உனது கடமை. அதைவிட்டு என்மீது குற்றம் காணாதே' என.

கீதையில் (18-வது அத்தியாயம், செய்யுட்கள் 65,66) கண்ணன் உரைத்தது -

"என்னை உன்னுள்ளத்தில் நிறைப்பாய், என் தொண்டனாவாய், எனக்காக வேள்வி இயற்றுவாய், என்னை வணங்குவாய்;
என்னையே நீ அடைவாய், இது சத்தியம் என வாக்களிக்கின்றேன்; நீ எனக்கு வேண்டியவன்.
அனைத்து தருமங்களையும் கைவிட்டு என்னயே சரணடைவாய்;
நான் உன்னை அனைத்து பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன், கவலைப்படாதே."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

Top


Updated on 15 May 2010

2 comments:

Neyveli Santhanagopalan said...

நண்பரே ...தநிவி தீர என்பதன் சரியான பொருள் என்ன?

V Govindan said...

திரு சந்தான கோபாலன் அவர்களுக்கு,
தங்களைப் போன்ற புகழ்பெற்ற கலைஞருடன் உரையாடுவதற்கு மகிழ்ச்சி அடைகின்றேன். 'தனிவி தீர' என்பதற்கு 'ஆசை தீர' அல்லது 'உளமாற', 'மனதார' என்று பொருள்.
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=tanivi&table=brown தெலுங்கு அகராதி நோக்கவும்
வணக்கம்
கோவிந்தன்