Tuesday, December 22, 2009

தியாகராஜ கிருதி - ஸீதா வர - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Sita Vara - Raga Deva Gandhari

பல்லவி
ஸீதா வர ஸங்கீ3த ஞானமு
தா41வ்ராயவலெரா

அனுபல்லவி
கீ3தாத்3யகி2லோபநிஷத்-ஸார 2பூ4
ஜீவன்முக்துட3கு3டகு
(ஸீ)

சரணம்
3ஆகாஸ11ரீரமு ப்3ரஹ்மமனே
4ஆத்மா ராமுனி தா 5ஸரி ஜூசுசு
லோகாது3லு சின்மயமனு ஸுஸ்வர
லோலுடௌ3 த்யாக3ராஜ ஸன்னுத (ஸீ)


பொருள் - சுருக்கம்
  • (வெட்ட) வெளி மெய், பிரமமெனும், ஆன்மா ராமனை, தான் சரிகண்டுகொண்டு,
  • உலகங்கள் சின்மயமெனும்,
  • இனிய சுரங்களில் திளைக்கும்,
  • தியாகராசனால் சிறக்கப் போற்றப் பெற்ற, சீதை மணாளா!

    • கீதை முதலாக, அனைத்து உபநிடத சாரமாகிய, பூத சீவன் முத்தனாகுதற்கு,
    • இசையறிவு, தாதை எழுதவேண்டுமய்யா;



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஸீதா/ வர/ ஸங்கீ3த/ ஞானமு/
    சீதை/ மணாளா/ இசை/ அறிவு/

    தா4த/ வ்ராயவலெரா/
    தாதை/ எழுதவேண்டுமய்யா/


    அனுபல்லவி
    கீ3தா/-ஆதி3/-அகி2ல/-உபநிஷத்/-ஸார/ பூ4த/
    கீதை/ முதலாக/ அனைத்து/ உபநிடத/ சாரமாகிய/ பூத/

    ஜீவன்/-முக்துடு3/-அகு3டகு/ (ஸீ)
    சீவன்/ முத்தன்/ ஆகுதற்கு/ சீதை...


    சரணம்
    ஆகாஸ1/ ஸ1ரீரமு/ ப்3ரஹ்மமு/-அனே/
    (வெட்ட) வெளி/ மெய்/ பிரமம்/ எனும்/

    ஆத்மா/ ராமுனி/ தா/ ஸரி/ ஜூசுசு/
    ஆன்மா/ ராமனை/ தான்/ சரி/ கண்டுகொண்டு/

    லோக-ஆது3லு/ சின்மயமு/-அனு/ ஸுஸ்வர/
    உலகங்கள்/ சின்மயம்/ எனும்/ இனிய சுரங்களில்/

    லோலுடௌ3/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ஸீ)
    திளைக்கும்/ தியாகராசனால்/ சிறக்கப் போற்றப் பெற்ற/ சீதை...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - வ்ராயவலெரா - வ்ராயவலெரா ராம.

    Top

    மேற்கோள்கள்
    2 - பூ4த ஜீவன்முக்துட3கு3டகு - பூத சீவன் முத்தன் - உடலுடன் இருக்கையில் முத்தி பெறுதல் - 'பூ4த ஜீவன்' என்ற சொல்லுக்கு, கீதையில் (15-வது அத்தியாயம், 7-வது செய்யுளில்) கண்ணன் உரைத்த விளக்கத்தினை நோக்கவும் -

    "என்னுடையதோர் பகுதி, உயிரினங்களில், அழிவற்ற சீவனாகி,
    மனம் முதலான ஆறு புலன்களை, தன்னுள் ஈர்த்துக்கொண்டு, பிரகிருதியில் (இயற்கை) உறைகின்றது."
    (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

    தியாகராஜர், தமது 'மோக்ஷமு க3லதா3' என்ற கீர்த்தனையில் 'பக்தியுடன் கூடிய, இசையறிவுடைத்தோர்கள், சீவன் முத்தராகி, வீடு பெறுகின்றனர்' என்று கூறுகின்றார். அதாவது, அப்படிப்பட்ட இசையறிவற்றோர், சீவன் முத்தராகாததனால், வீடு பெறுவதில்லை, என்று பொருளாகும்.

    தியாகராஜர், 'நாதோபாஸனை' எனப்படும் இசைவழிபாட்டினைப் பற்றி மட்டுமே கூறியுள்ளார். சீவன் முத்தராவதற்கு, கீதையில், கண்ணன் கூறிய, 'கரும', 'ஞான', 'பக்தி' மற்றும் 'ராஜ' யோக முறைகளைப் பற்றி விமரிசிக்கவில்லை.

    ஆதி சங்கரர் இயற்றிய 'ஜீவன்-முக்தானந்த லஹரி' நோக்கவும்.

    Top

    விளக்கம்
    1 - வ்ராயவலெரா - பிறந்த குழந்தையின் தலையில், மண்டையோடுகள் சேரும் இடத்தில், தோல் மடிப்புகள், நெளிந்த கோடுகளாகக் காணப்படும். இந்த கோடுகள், தெலுங்கில் 'தல வ்ராத' என்றும், தமிழில் 'தலையெழுத்து' என்றும் வழங்கும். இந்த கோடுகள், ஒருவனுடைய விதியினைக் குறிப்பதாகக் கருதப்படும். நெற்றியிலுள்ள கோடுகளும், அங்ஙனமே விதியினைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.

    3 - ஆகாஸ11ரீரமு ப்3ரஹ்மமு - லோகாது3லு சின்மயமு - வெட்டவெளியே பிரமத்தின் மெய்யாக - உலகங்கள் சின்மயமாக. இதுபற்றி தியாகராஜர் மற்ற கீர்த்தனைகளில் கூறியுள்ளவை -

    • 'சதாசிவ மயமாகிய நாதோங்காரம்' - கிருதி 'ராக3 ஸுதா4 ரஸ'
    • 'நாதத்தினையே தனது உடலாக உடைத்த சங்கரன்' - கிருதி 'நாத3 தனுமனிஸ`ம்'
    • 'பிரணவ நாதம், உயிர்மூச்சு மற்றும் வெம்மையின் சேர்க்கையினால், ஏழு சுரங்களாகித் திகழும்' - கிருதி 'மோக்ஷமு க3லதா3'


    தியாகராஜர் இந்த கீர்த்தனையில் கூறுவதன் சாரம் -
    இசையறிவினால் ஒருவன் சீவன்முத்தனாகலாம். சீவன் முத்தன் என்பது -
    • உள்ளுறை இறைவனை, வெட்டவெளியே மெய்யாக உடைத்த, பரம்பொருளென (அபரோக்ஷ ஞானம் எனப்படும்) நேரிடையாக உணர்வதும்,
    • பரம்பொருளின் மெய்யாகிய இவ்வுலகங்கள், சின்மயமானது என்று அறிவதும் ஆகும்.


    4 - ஆத்மா ராமுனி - ஆன்மா ராமன் - உள்ளுறை இறைவன் - 'ஆத்மாராம' என்ற சொல்லுக்கு 'தன்னுள்ளோ, பரம்பொருளினிலோ களிப்புறுதல்' என்று பொருளாகும். இவ்விடத்தில், இந்தக் களிப்பினை, உருவகப்படுத்தி, 'ஆன்மா ராமன்' என்று தியாகராஜர் கூறுகின்றார்.

    Top

    5 - ஸரி ஜூசுசு - சரி கண்டுகொண்டு - இச்சொல்லுக்கு 'ஒப்பிட்டு நோக்கல்' என்று பொருளாகும். ஆனால், இவ்விடத்தில் கூறப்பட்டுள்ள, 'வெட்டவெளி மெய் பிரமமெனும், ஆன்மா ராமனை சரி கண்டுகொண்டு' என்பது, மேலே கூறிய 'அபரோக்ஷ ஞானம்' எனும் 'தத்-த்வம்-அஸி' (அது நீயென்றறி), 'அஹம் ப்3ரஹ்மாஸ்மி' (நானே பிரமம்), 'ப்3ரஹ்மைவாஹம்' (பிரமமே நான்), 'ஸோஹம்' (அவனே நான்), 'ஹம்ஸஸ்ஸோஹம்' (நானே அவன்; அவனே நான்) என்ற மகா வாக்கியங்களின் உட்பொருளினை நேரிடையாக உணர்தலைக் குறிக்கின்றது.

    இந்த கீர்த்தனையில், தியாகராஜர், மனித வாழ்வின் நோக்கமாகிய, 'முக்தி' எனும் தன்னையுணர்தலைப் பற்றி, தான் அவற்றினை நேரிடையாக உணர்ந்து, பாடியுள்ளார். இவற்றிற்கு, அத்தகைய அனுபவமின்றி, வெறும் ஏட்டறிவினால் மட்டுமே, பொருள் கூறுவது, 'ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது' என்ற பழமொழியினை நி்ரூபிப்பதாக அமையும். எனவே, எனது சிற்றறிவுக்கு எட்டியவரை நான் எழுதியவற்றில் தவறுகள் இருந்தால், மன்னிக்க வேண்டுகின்றேன்.

    தாதை - பிரமன்
    வெட்ட வெளி மெய் - வெட்டவெளியே உடலாக
    சின்மயம் - ஞானமயம் அல்லது பிரஞ்ஞை (உணர்வு) மயம்
    இனிய சுரங்கள் - இசையின் ஏழு சுரங்கள்

    Top


    Updated on 23 Dec 2009
  • No comments: