Saturday, September 12, 2009

தியாகராஜ கிருதி - ப4க்தி பி3ச்சம் - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Bhakti Biccham - Raga Sankarabharanam

பல்லவி
14க்தி 2பி3ச்சமிய்யவே
பா4வுகமகு3 3ஸாத்வீக (ப4)

அனுபல்லவி
4முக்திககி251க்திகி த்ரி-
மூர்துலகதி மேல்மி 6ராம (ப4)

சரணம்
ப்ராணமு லேனி வானிகி ப3ங்கா3ரு 7பாக3 சுட்டி
ஆணி வஜ்ர பூ4ஷணமுரமந்து3 பெட்டு ரீதி
8ஜாணலகு புராணாக3ம ஸா1ஸ்த்ர வேத3 ஜப ப்ரஸங்க3
த்ராண கல்கி3யேமி ப4க்த த்யாக3ராஜ நுத 9ராம (ப4)


பொருள் - சுருக்கம்
தொண்டன் தியாகராசனால் போற்றப் பெற்ற இராமா!
  • பேறெனத்தகும் சாத்துவிக பக்திப் பிச்சையிடுவாயய்யா;

  • முக்திக்கும், அனைத்து சக்திகளுக்கும், மும்மூர்த்திகளுக்கும் மிக்கு மேலானதாகும்;


  • உயிரற்றவனுக்கு பொற் பாகைச் சுற்றி, ஆணி வைர நகைககள் மார்பிலணிவித்தல் போலும்,

  • கெட்டிக்காரர்களுக்கு புராண, ஆகம, சாத்திர, வேதம் ஓதல், சொற்பொழிவுத் திறனுண்டாகியென்ன (பயன்)?பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
4க்தி/ பி3ச்சமு/-இய்யவே/
பக்தி/ பிச்சை/ இடுவாயய்யா/

பா4வுகமகு3/ ஸாத்வீக/ (ப4)
பேறெனத்தகும்/ சாத்துவிக/ ப4க்தி...


அனுபல்லவி
முக்திகி/-அகி2ல/ ஸ1க்திகி/ த்ரி/-
முக்திக்கும்/ அனைத்து/ சக்திகளுக்கும்/ மும்/-

மூர்துலகு/-அதி/ மேல்மி/ ராம/ (ப4)
மூர்த்திகளுக்கும்/ மிக்கு/ மேலானதாகும்/ இராமா/


சரணம்
ப்ராணமு/ லேனி வானிகி/ ப3ங்கா3ரு/ பாக3/ சுட்டி/
உயி்ர்/ அற்றவனுக்கு/ பொற்/ பாகை/ சுற்றி/

ஆணி/ வஜ்ர/ பூ4ஷணமு/-உரமந்து3/ பெட்டு/ ரீதி/
ஆணி/ வைர/ நகைககள்/ மார்பில்/ அணிவித்தல்/ போலும்/

ஜாணலகு/ புராண/-ஆக3ம/ ஸா1ஸ்த்ர/ வேத3/ ஜப/ ப்ரஸங்க3/
கெட்டிக்காரர்களுக்கு/ புராண/ ஆகம/ சாத்திர/ வேதம்/ ஓதல்/ சொற்பொழிவு/

த்ராண/ கல்கி3/-ஏமி/ ப4க்த/ த்யாக3ராஜ/ நுத/ ராம/ (ப4)
திறன்/ உண்டாகி/ என்ன (பயன்)/ தொண்டன்/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - பி3ச்சமிய்யவே - பி3ச்சமீய்யவே - பி3க்ஷமீயவே : 'பி3ச்சம்' என்பது ஸம்ஸ்கிருத சொல் 'பி3க்ஷ' என்பதன் தெலுங்கு திரிபாகும். மேலும், 'இய்யவே' அல்லது 'ஈயவே' என்பதுதான் சரியான சொல்லாகும். எனவே, 'பி3ச்சமிய்யவே' ஏற்கப்பட்டது.

7 - பாக3 - பா33 : அடுத்துவரும், 'சுட்டி' (சுற்றி) என்ற சொல்லினால், 'பாக3' என்பதே சரியாகும். (பாகை - தலைப்பா)

9 - ராம - இச்சொல் சில புத்தகங்களில் காணப்படவில்லை.

Top

மேற்கோள்கள்
5 - 1க்தி - அணிமாதி சித்திகளை தியாகராஜர் குறிப்பிடுவதாகத் தெரிகின்றது.

Top

விளக்கம்
1 - 4க்தி பி3ச்சமிய்யவே - பக்திப் பிச்சை இடுவாயய்யா - இறைவனை அணுகுவதற்கு, பக்தி இன்றியமையாததாகும். அத்தகைய பக்தியும், இறைவன் பிச்சையிட்டால்தான் உண்டு என்றால், இறைவனின் கருணை முன்வருமா, அல்லது மனிதனின் முயற்சியாகிய பக்தி முன்வருமா, என்ற கேள்வி எழுகின்றது. எனது சிறிய அறிவுக்கு எட்டியவரை, கீழ்க்கண்ட விளக்கத்தில் கூறிய 'கௌ3ண பக்தி' வரை மனிதனின் முயற்சியென்றும், அதற்குப் புறம்பான 'முக்2ய பக்தி' இறைவன் அருளால்தான் கிட்டும் என்றும் புலப்படுகின்றது. தியாகராஜர் 'ஸாத்வீக' என்ற சொல்லினைக் கடைசியில் வைத்தாலும், அதுதான் இந்த கிருதிக்கு உயிராகும். அவர் வேண்டுவது ஸாத்வீக பக்தியினை.

Top

3 - ஸாத்வீக ப4க்தி - சாத்துவிக பக்தி - கோரிக்கைகளும் இச்சைகளுமற்ற இறைப் பற்று.

நாரத பக்தி சூத்திரங்களில் (56) பக்தி இருவகையெனக் கூறப்பட்டுள்ளது - கோரிக்கைகளும் இச்சைகளுமற்ற உன்னதமான இறைப் பற்றாகிய 'முக்2ய பக்தி' மற்றும் கோரிக்கைகளினாலோ, உள்ளப்பாங்கினாலோ உந்தப்படும் 'கௌ3ண பக்தி' என.

"கௌ3ண பக்தி, சாத்துவிகம், ராஜசம் மற்றும் தாமசம் எனப்படும் உள்ளத்தின் பாங்கினைப் பொருத்தோ, அல்லது கீதையில் (அத்தியாயம் 7, செய்யுள் 16) கண்ணன் உரைத்த, நோக்கங்களைப் பொருத்தோ, ('ஆர்த்தி' யெனும் துயரம் தீர்க்கவேண்டி, 'ஜிக்3ஞாசு' எனப்படும் மெய்யறிவினை வேண்டி, 'அர்த்தார்தி' எனப்படும் பொருளாசைக்காக) மூன்று வகைப்படும்.

சாத்துவிகம் ஆகிய உள்ளத்தின் குணப் பாகுபாட்டினால் எழுவதனால் 'கௌ3ண' பக்தியெனக் கூறப்படும். இந்தவகையான பக்தி, குற்றங்குறைகளற்ற 'முக்2ய' பக்தியினின்றும் வேறுபட்டதாகும்." (ஸ்வாமி த்யாகீஸானந்தாவின் மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

தியாகாராஜர் வேண்டும் 'சாத்துவிக பக்தி', முக்திக்கும் மேற்பட்டதாகும் என்கிறார். மனிதப் பிறப்பின் இறுதி நோக்கமான முக்தியினையும் வேண்டாத இறைப்பற்று 'முக்2ய பக்தி' வகையினைச் சேர்ந்ததாகும். எனவே, நாரத பக்தி சூத்திரங்களில் கூறப்பட்ட 'கௌ3ண பக்தி'யின் பகுதியான 'சாத்துவிக பக்தி'யல்ல தியாகராஜர் வேண்டுவது. இதுபற்றி நாரத பக்தி சூத்திரங்களில் (67) மேலும் கூறப்படுவதாவது -

"அத்தகைய முக்2ய பக்தியுடைய தொண்டர்கள் 'ஏகாந்த'மெனப்படும் 'ஓர்-நோக்கக் காதல்' - இறைவனுக்காக இறைவனிடம் காதல் - கொண்டவர்கள்." (ஸ்வாமி த்யாகீஸானந்தாவின் மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

நாரத பக்தி சூத்திரங்கள்.

தியாகராஜர் தனது 'பு3த்3தி4 ராது3' என்ற ஸங்கராபரண கீர்த்தனையில் அத்தகைய 'முக்2ய பக்தி'யுடையவர்களை 'நான்ய ப4க்துலு' - இறைவனின் நினைவு தவிர மற்றெதும் இல்லாத தொண்டர்கள் - என்கிறார்.

Top

4 - முக்திகி மேல்மி - முக்திக்கும் மேற்பட்டது - இதுகுறித்து தொண்டரடிரப்பொடி ஆழ்வார் திருவரங்கனைப்பற்றி இயற்றிய திருமாலையின் ஒர் பாசுரம் நினைவுகூறத்தக்கது. -

பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும்,
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே! (2)

இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வாழ்க்கைக் குறிப்பாகிய The Gospel of Sri Ramakrishna-ல் இதுபற்றி கூறப்பட்டுள்ளதாவது -

"அனுமன், இறைவனை, உருவ மற்றும் அருவ நிலைகளில் உணர்ந்தபின்னர், தான், இறைவனின் தொண்டனெனக் கருதி, 'தொண்டன் அகந்தை'யினை உடைத்து விளங்குகின்றான். நாரதர், சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் (முருகன்) எனப்படும் பெரும் முனிவர்கள், பரம்பொருளினை உணர்ந்தபின்னர், அஃதே 'தொண்டன் அகந்தை'யை மட்டும் இருத்திக்கொண்டு விளங்குகின்றனர். அவர்கள் யாவரும், தானும் கடலைக் கடந்து, மற்றவர்களையும் கடக்க உதவும், பெரிய நீராவிக்கப்பல்கள் போன்றவர்கள்." (அத்தியாயம் 26)

இதுகுறித்து நாரத பக்தி சூத்திரங்களில் (50) மேலும் கூறப்படுவது -

(முக்2ய பக்தி உடைய) "அவன் தானும் மாயையினைக் கடந்து, உலகோரையும் கடத்துகின்றான்." (ஸ்வாமி த்யாகீஸானந்தாவின் மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

Top

8 - ஜாணலகு - கெட்டிக்காரர்களுக்கு - சாத்வீக பக்தி (முக்3ய பக்தி) உடையவனுக்கே, புராணங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், மறைகள் ஆகியவற்றின் உட்பொருள் விளங்கும்; அவன் கூறும் சொற்களே, மற்றவர்களுக்கு உரைக்கும். மற்றபடி, அத்தகைய பக்தியற்றவர்கள், புராணங்கள் ஆகியவற்றினை ஓதினாலோ, சொற்பொழிவாற்றினாலோ, அதற்கு மதிப்பு ஏதும் இல்லை என்பது தியாகராஜரின் கருத்து. தியாகராஜர் கூறியபடி, அப்படிப்பட்ட கெட்டிக்காரர்கள் ஆற்றும் சொற்பொழிவு, 'உயிரற்றவனுக்கு பொற் தலைப்பாகை சுற்றி, மார்பினில் தங்க நகைககள் இட்டது போன்றதாகும்'.

6 and 9 - ராம - சில புத்தகங்களில் இச்சொல்லினை, பல்லவியுடன் இணைத்து 'ராம பக்தி பிச்சையிடுவாய்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தியாகராஜர், பல கீர்த்தனைகளில், இறைவனை முன்னிலையியும், படர்க்கையிலும் குறிப்பிடுகின்றார். எனவே அத்தகைய பொருளும் பொருந்தும்.

Top


Updated on 13 Sep 2009

2 comments:

Govindaswamy said...

அன்புள்ள கோவிந்தன் அவர்களே
அனுபல்லவி மற்றும் சரணங்களின் இறுதியில் வரும்
'ராம' என்பவை விளிச்சொற்கள். அனுபல்லவி முழுவதும் இராமனின் புகழ் பாடுவதாகவும், 'அதி/ மேல்மி/ ராம/ ' என்பதற்கு 'மும்/-மூர்த்திகளுக்கும்/ மிக்கு/ மேலான/இராமா/' என்று பொருள் கொள்ளலாமா?
இன்னும் சில பாடல்களில் இராமன் மூவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்று தியாகஜராஜர் கூறவில்லையா.
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'அதி மேல்மி' என்பது 'முக்திகி', 'அகில ஸக்திகி', 'த்ரி-மூர்த்துலகு' ஆகிய மூன்றிற்கும் பொதுவானது. எனவே, 'மும்மூர்துலகு அதி மேல்மி' என்று தனிப்படப் பிரித்தல் சரியாகாது.

வணக்கம்
கோவிந்தன்.