Wednesday, August 19, 2009

தியாகராஜ கிருதி - கீ3தார்த2மு - ராகம் ஸுரடி - Gitaarthamu - Raga Surati

பல்லவி
1கீ3தார்த2மு 2ஸங்கீ3தானந்த3முனு-
3ஈ தாவுன ஜூட3ரா ஓ மனஸா

அனுபல்லவி
ஸீதா பதி சரணாப்3ஜமுலிடு3கொன்ன
4வாதாத்மஜுனிகி பா33 தெலுஸுரா (கீ3தா)

சரணம்
5ஹரி ஹர பா4ஸ்கர காலாதி3
கர்மமுலனு மதமுல 6மர்மமுலனெரிங்கி3
ஹரி வர ரூபுடு3 7ஹரி ஹய வினுதுடு3
வர த்யாக3ராஜ வரது3டு3 8ஸுகி2ரா (கீ3தா)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
  • கீதையின் பொருளினையும், சங்கீதத்தின் ஆனந்தத்தினையும் இவ்விடத்தினில் காண்பாயடா;

  • சீதாபதியின் திருவடித் தாமரைகளை யேந்தியிருக்கும் வாயு மைந்தனுக்கு நன்கு தெரியுமடா;

    • அரி, அரன், பரிதி, சக்தி முதலான கருமங்கள் எனும் மதங்களின் மருமங்களினை யறிந்த,

    • உயர் வானர உருவத்தோன்,

    • பொற்குதிரையோனால் போற்றப் பெற்றோன்,

    • உயர் தியாகராசனுக்கருள்வோன்,

  • களிப்பவனடா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கீ3தா/-அர்த2மு/ ஸங்கீ3த/-ஆனந்த3முனு/-
கீதையின்/ பொருளினையும்/ சங்கீதத்தின்/ ஆனந்தத்தினையும்/

ஈ/ தாவுன/ ஜூட3ரா/ ஓ மனஸா/
இந்த/ இடத்தினில்/ காண்பாயடா/ ஓ மனமே/


அனுபல்லவி
ஸீதா/ பதி/ சரண/-அப்3ஜமுலு/-இடு3கொன்ன/
சீதா/ பதியின்/ திருவடி/ தாமரைகளை/ ஏந்தியிருக்கும்/

வாத/-ஆத்மஜுனிகி/ பா33/ தெலுஸுரா/ (கீ3தா)
வாயு/ மைந்தனுக்கு/ நன்கு/ தெரியுமடா/


சரணம்
ஹரி/ ஹர/ பா4ஸ்கர/ கால/-ஆதி3/
அரி/ அரன்/ பரிதி/ சக்தி/ முதலான/

கர்மமுலு/-அனு/ மதமுல/ மர்மமுலனு/-எரிங்கி3ன/
கருமங்கள்/ எனும்/ மதங்களின்/ மருமங்களினை/ யறிந்த/

ஹரி/ வர/ ரூபுடு3/ ஹரி ஹய/ வினுதுடு3/
வானர/ உயர்/ உருவத்தோன்/ பொற்/ குதிரையோனால்/ போற்றப் பெற்றோன்/

வர/ த்யாக3ராஜ/ வரது3டு3/ ஸுகி2ரா/ (கீ3தா)
உயர்/ தியாகராசனுக்கு/ அருள்வோன்/ களிப்பவனடா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
6 - மர்மமுலனெரிங்கி3 - மர்மமுலெரிங்கி3ன.

7 - ஹரி ஹய - ஹர ஹய : 'ஹரி ஹய' என்பது சரியான சொல்லாகும்.

Top

மேற்கோள்கள்
1 - கீ3தார்த2மு - கீதை - கண்ணன் உபதேசித்தது - கீதையின் சாரமாக கண்ணன் (அத்தியாயம் 18, செய்யுட்கள் 65, 66) மொழிந்தது -

"உனது மனத்தில் என்னை நிறைப்பாய்; எனக்குத் தொண்டு செய்வாய்; எனக்கென வேள்வி இயற்றுவாய்; என்னை வணங்குவாய். நீ என்னை யடைவாய் - உண்மையுரைக்கின்றேன்; ஏனெனில், நீ எனக்கு வேண்டியவன்."

"அனைத்து தர்மங்களையும் கைவிட்டு, என் ஒருவனையே புகலடைவாயாக; நான் உன்னை அனைத்து பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்; கவலைப்படாதே."(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

2 - ஸங்கீ3தானந்த3மு - தியாகராஜர் தனது கிருதி 'ஸங்கீத ஞானமு' என்ற 'தன்யாசி' ராக கீர்த்தனையில் அனுமன் இசைவழிபாடு செய்கின்றான் (உபாஸிஞ்சே) என்று கூறுகின்றார்.

அனுமனின் இசையறிவினைப் பற்றி கூறப்படுவது -

அனுமன், விவாதிகள் கருவம் அடங்க,
அசலம் உருக, 'குண்டகக் கிரியா' எனும்
இராகம் பாடி, அடக்கி, மேலும்,
சன்னிய ராகம், ஆறாயிரம் சமைத்து, அதற்கு
'அனும கடகம்' எனும் பெயர் அணிந்தனன். ....45

Top

4 - வாதாத்மஜுனிகி பா33 தெலுஸு - மகாபாரதப் போரில், அனுமன், அர்ஜுனனின் தேரில் கொடியாக இருந்து, கண்ணன் கீதை உபதேசித்ததனைச் செவி மடுத்தான். கீதை, அத்தியாயம் 1, செய்யுள் 20 - 'கபி த்4வஜ:'.

5 - ஹரி ஹர பா4ஸ்கர காலாதி3 - சிவன், விஷ்ணு, சக்தி, சூரியன், கணபதி ஆகிய பஞ்சாயதன பூஜை (ஐந்து வழிபாட்டு முறை) எனப்படும். பிற்காலத்தில், இதனை, ஆதி சங்கரர், முருகன் வழிபாட்டினை (கௌமாரம்) இணைத்து, 'அறு மத' வழிபாட்டாக்கினார் என்பர்.

Top

விளக்கம்
3 - ஈ தாவுன - இவ்விடத்தினில் - அனுமனிடத்தினில் : சில புத்தகங்களில் 'இவ்விடத்தினில்' என்பதற்கு 'ராமனிடத்தில்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனது சிற்றறிவிற்கு எட்டியவரை, அனுமன் ராமனுடைய திருவடிகளைப் பற்றியிருக்கும் நோக்கமாகிய 'முற்றும் புகலடைதலையே' தியாகராஜர் இங்கு சுட்டிக்காட்டுகின்றார். அதுதான் கீதையின் சாரமாகும் (கீதார்த2மு)

5 - கால - 'காளி' எனப்படும் 'காலி' - 'கால' என்ற சொல்லின் பெண்பாலாகும். அங்ஙனம் இச்சொல் 'சக்தி வழிபாட்டினை'க் குறிக்கும்.

6 - மர்மமுலனெரிங்கி3 - கருமங்கள் - அறு மத வழிபாட்டு முறைகளைக் குறிக்கும். இது குறித்து கீதையில் (அத்தியாயம் 3, செய்யுள் 9) கண்ணன் கூறுவதாவது -

"வேள்விக்கென்றே அல்லாது, மற்ற நோக்கங்களுக்காக இயற்றப்படும் செயல்களினால் உலகோர் கட்டப்படுகின்றனர். எனவே, ஓ குந்தி மகனே! பற்றினைத் துறந்து, வேள்விக்கென்றே செயல்களைப் இயற்றுவாயாக. ('வேள்வி' என்ற சொல்லுக்கு விஷ்ணு என்றும் பொருள்.) (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

Top

8 - ஸுகி2ரா - களிப்பவன் - அனுமனைக் குறிக்கும். அனுமன் களிப்புறுவதெங்ஙனம்

"ராமனின் முடிசூட்டு விழா மிக்குச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சீதை, அனுமனுக்கு ஆணி முத்துமாலையொன்றினைப் பரிசாக அளித்தாள். அனுமன், அதனை மிகு பணிவுடன் பெற்று, அந்த முத்துகளைப் பற்களினால் கடித்துப் பிளந்துகொண்டிருந்தான். சீதையும் மற்ற அவையிலிருந்த அமைச்சர்களும், அனுமனின் இந்த விந்தையான செயலினைக் கண்டு, மிக்கு வியந்தனர்.

'ஏ வீரனே! நீ என்ன செய்கின்றாய்? ஏன் முத்துக்களைப் பிளக்கின்றாய்?' என சீதை வினவ, அனுமன் கூறியது - 'தாயே, இந்த முத்து மாலை விலை மதிப்பற்றது; ஏனெனில், அஃது உனது புனித கரத்தினின்று எனக்கு வந்தது. ஆயினும், இதனுள் ராமன் இருக்கின்றானா, என நான் தேடுகின்றேன்; ஏனென்றால், ராமனில்லாத பொருளெதனையும் நான் வைத்துக்கொள்வதில்லை. இந்த முத்துக்களில் அவனில்லையே'.

'உன்னுள் நீ ராமனை வைத்துள்ளாயோ எனத் தெரிவிப்பாய்' என சீதை பகர, அனுமன், உடனே, தன்னுடை மார்பினைப் பிளந்து, ராமன், சீதை மற்றும் யாவருக்கும் காண்பித்தான். அனைவரும், சீதையுடன், ராமன், அனுமனின் இதயத்தினில் இருப்பதனைக் கண்டனர். "

பொற்குதிரையோன் - இந்திரன்

Top


Updated on 19 Aug 2009

No comments: