Monday, August 10, 2009

தியாகராஜ கிருதி - ஸா1ந்தமு லேக - ராகம் ஸா1ம - Saantamu Leka - Raga Saama

பல்லவி
ஸா1ந்தமு லேக ஸௌக்2யமு லேது3
ஸாரஸ த3ள நயன

அனுபல்லவி
தா3ந்துனிகைன வேதா3ந்துனிகைன (ஸா1)

சரணம்
சரணம் 1
தா3ர ஸுதுலு த4ன தா4ன்யமுலுண்டி3
ஸாரெகு ஜப தப ஸம்பத3 கல்கி3ன (ஸா1)


சரணம் 2
ஆக3ம ஸா1ஸ்த்ரமுலன்னியு சதி3வின
பா43வதுலனுசு பா3கு33 பேரைன (ஸா1)


சரணம் 3
யாகா3தி3 கர்மமுலன்னியு ஜேஸின
பா3கு33 1ஸகல ஹ்ரு2த்3பா4வமு தெலிஸின (ஸா1)


சரணம் 4
ராஜாதி4 ராஜ ஸ்ரீ ராக4வ த்யாக3-
ராஜ வினுத ஸாது4 ரக்ஷக 2தனகுப(ஸா1ந்தமு)


பொருள் - சுருக்கம்
தாமரையிதழ்க் கண்ணா! அரசர்க்கரசனே, இராகவா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே! சாதுக்களைக் காப்போனே!
  • (மன) அமைதியின்றி சௌக்கியமில்லை;

  • தவசிக்காகிலும், வேதாந்திக்காகிலும் (மன) அமைதியின்றி சௌக்கியமில்லை;

    • மனைவி, மக்கள், செல்வம், தானியங்களுடைத்தாயினும்,

    • எவ்வமயமும் செப, தவச் செல்வங்களுண்டாகினாலும்,

    • ஆகம சாத்திரங்களனைத்தினையும் கற்றிடினும்,

    • பாகவதரெனச் சிறக்க பெயர் பெற்றிடினும்,

    • வேள்வி முதலான கருமங்களனைத்தும் இயற்றிடினும்,

    • (அவற்றின்) உட்கருத்தினையெல்லாம் நன்கறிந்திடினும்,

  • (மன) அமைதியின்றி சௌக்கியமில்லை;

  • தனக்கு உபசாந்தமின்றி சௌக்கியமில்லை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸா1ந்தமு/ லேக/ ஸௌக்2யமு/ லேது3/
(மன) அமைதி/ இன்றி/ சௌக்கியம்/ இல்லை/

ஸாரஸ/ த3ள/ நயன/
தாமரை/ இதழ்/ கண்ணா/


அனுபல்லவி
தா3ந்துனிகி/-ஐன/ வேதா3ந்துனிகி/-ஐன/ (ஸா1)
தவசிக்கு/ ஆகிலும்/ வேதாந்திக்கு/ ஆகிலும்/ (மன) அமைதியின்றி...


சரணம்
சரணம் 1
தா3ர/ ஸுதுலு/ த4ன/ தா4ன்யமுலு/-உண்டி3ன/
மனைவி/ மக்கள்/ செல்வம்/ தானியங்கள்/ உடைத்தாயினும்/

ஸாரெகு/ ஜப/ தப/ ஸம்பத3/ கல்கி3ன/ (ஸா1)
எவ்வமயமும்/ செப/ தவ/ செல்வங்கள்/ உண்டாகினாலும்/ (மன) அமைதியின்றி...


சரணம் 2
ஆக3ம/ ஸா1ஸ்த்ரமுலு/-அன்னியு/ சதி3வின/
ஆகம/ சாத்திரங்கள்/ அனைத்தினையும்/ கற்றிடினும்/

பா43வதுலு/-அனுசு/ பா3கு33/ பேரு/-ஐன/ (ஸா1)
பாகவதர்/ என/ சிறக்க/ பெயர்/ பெற்றிடினும்/ (மன) அமைதியின்றி...


சரணம் 3
யாக3/-ஆதி3/ கர்மமுலு/-அன்னியு/ ஜேஸின/
வேள்வி/ முதலான/ கருமங்கள்/ அனைத்தும்/ இயற்றிடினும்/

பா3கு33/ ஸகல/ ஹ்ரு2த்3-பா4வமு/ தெலிஸின/ (ஸா1)
நன்கு/ எல்லா/ (அவற்றின்) உட்கருத்தினை/ அறிந்திடினும்/ (மன) அமைதியின்றி...


சரணம் 4
ராஜ-அதி4 ராஜ/ ஸ்ரீ ராக4வ/ த்யாக3ராஜ/
அரசர்க்கரசனே/ ஸ்ரீ ராகவா/ தியாகராசனால்/

வினுத/ ஸாது4/ ரக்ஷக/ தனகு/-உப(ஸா1ந்தமு/)
போற்றப் பெற்றோனே/ சாதுக்களை/ காப்போனே/ தனக்கு/ உபசாந்தம்/ இன்றி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இரண்டு மற்றும் மூன்றாவது சரணங்களின் இரண்டாவது வரிகள் ஒன்றுக்கொன்று மாற்றி கொடுக்கப்பட்டன.

Top

மேற்கோள்கள்
1 - ஸகல ஹ்ரு2த்3பா4வமு தெலிஸின - புத்தகங்களில் இதற்கு 'யாவருடைய உள்ளப்பாங்கினை அறியத் தெரிந்தாலும்' என்றும் 'நினைவுகளின் தன்மையை அறிந்தாலும்' என்றும் மொழிபெயர்க்கப்பட்டுளன. ஆனால், இச்சொற்களுக்கு முன் வரும் 'யாகா3தி3 கர்மமுலன்னியு ஜேஸின' என்ற சொற்களைக் கருத்தில் கொண்டு, '(வேள்விகளின்) உட்கருத்தினையெல்லாம் நன்கறிந்திடினும்' என்று இங்கு மொழிபெயர்க்கப்பட்டது. இது குறித்து, கீதையில் கண்ணன் கூறுவதாவது (3-வது அத்தியாயம், 6-வது செய்யுள்) -

"வேள்விகளுக்காகவே அன்றி, மற்ற நோக்கங்களுடன் இயற்றப்படும் கருமங்களினால், இம்மக்கள் கட்டப்படுகின்றார்கள். எனவே, ஒ குந்தி புதல்வா, பற்றினைத் துறந்து, வேள்விகளுக்காகவே கருமங்கள் இயற்றுவாயாக." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்)

இதனைக் கருத்தில் கொண்டு, தியாகராஜர், பல கீர்த்தனைகளில், இச்சைகளுக்காக வேள்வி இயற்றுதலைக் கண்டிக்கின்றார். அவர் தனது, 'மனவினாலகிஞ்ச' என்ற 'நளினகாந்தி' கீர்த்தனையில் கூறுவது -

கர்ம காண்ட3 மத ஆக்ரு2ஷ்டுலை ப4வ, க3ஹன சாருலை,
கா3ஸி ஜெந்த3க3 கனி, மானவ அவதாருடை3 கனிபிஞ்சினாடே3 நட3த

கருமத்துப் பாலின் கோட்பாடுகளினால் ஈர்க்கப்பட்டு, பிறவியெனும் அடவியில் உழன்று,
மக்கள் துயரடையக் கண்டு, மனித அவதாரமெடுத்து, காண்பித்தானே நடத்தையினை;

Top

2 - உபஸா1ந்தமு - இச்சொல்லுக்குப் பொதுவாக 'மன அமைதி' எனப் பொருளாகும். ஆனால் திருமூலரின் திருமந்திரத்தினில் (செய்யுட்கள் 2506 - 2511) இதனை தனிப்பட விவரிக்கப்பட்டுள்ளது.

முத்திக்கு வித்து முதல்வன் தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரந் தானாதல்
சத்திக்கு வித்துத் தனது உபசாந்தமே (2506)

தாயுமானவரின் இச்செய்யுளையும் நோக்கவும் -

தேகாதி பொய்யெனவே தேர்ந்தவுப சாந்தருக்கு
மோகாதி உண்டோ மொழியாய் பராபரமே.(43) 298.

Top

விளக்கம்
வேதாந்தி - தத்துவ சாத்திரங்கள் அறிந்தவன்

பாகவதர் - இறைவனின் சீரிய தொண்டன்

Top

No comments: