Monday, June 15, 2009

தியாகராஜ கிருதி - மனஸு விஷய - ராகம் நாட குறஞ்ஜி - Manasu Vishaya - Raga Nata Kuranji

பல்லவி
1மனஸு விஷய நட விடுலகொஸங்கி3தே
மா ராமுனி க்ரு2ப கலுகு3னோ மனஸா

அனுபல்லவி
2தன தலுபொகரிண்டிகி தீஸி பெட்டி
தா குக்கலு தோலு ரீதி காதோ3 (மனஸு)

சரணம்
3தவிடிகி ரங்காட3 போயி கூடி
4தபிலெ கோதி கொனிபோயினடு காதோ3
5செவிடிகினுபதே3ஸி1ஞ்சினடு காதோ3
ஸ்ரீ த்யாக3ராஜ நுதுனி தலசக (மனஸு)


பொருள் - சுருக்கம்
  • மனத்தினை விடய களவொழுக்கத்தினருக்கு அளித்தால், எமது இராமனின் கிருபை யுண்டாகுமோ?

    • தன் கதவை பிறர் வீட்டிற்குப் பெயர்த்து வைத்து, தான், நாய்களை விரட்டுதல் போன்றாகாதோ?

    • தவிட்டுக்கு வேசியாடச் செல்ல, கூழ்ப் பானையை குரங்கு கொண்டுபோனது போன்றாகாதோ?

    • செவிடனுக்கு உபதேசித்தது போன்றாகாதோ?

  • தியாகராசனால் போற்றப் பெற்றோனை நினையாது, மனத்தினை விடய களவொழுக்கத்தினருக்கு அளித்தால், எமது இராமனின் கிருபையுண்டாகுமோ?பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மனஸு/ விஷய/ நட விடுலகு/-ஒஸங்கி3தே/
மனத்தினை/ விடய/ களவொழுக்கத்தினருக்கு/ அளித்தால்/

மா/ ராமுனி/ க்ரு2ப/ கலுகு3னோ/ மனஸா/
எமது/ இராமனின்/ கிருபை/ உண்டாகுமோ/ மனமே/


அனுபல்லவி
தன/ தலுபு/-ஒகரி/-இண்டிகி/ தீஸி/ பெட்டி/
தன்/ கதவை/ பிறர்/ வீட்டிற்கு/ பெயர்த்து/ வைத்து/

தா/ குக்கலு/ தோலு/ ரீதி/ காதோ3/ (மனஸு)
தான், நாய்களை விரட்டுதல் போன்று ஆகாதோ?


சரணம்
தவிடிகி/ ரங்காட3/ போயி/ கூடி/
தவிட்டுக்கு/ வேசியாட/ செல்ல/ கூழ்/

தபிலெ/ கோதி/ கொனிபோயின/-அடு/ காதோ3/
பானையை/ குரங்கு/ கொண்டுபோனது/ போன்று/ ஆகாதோ/

செவிடிகி/-உபதே3ஸி1ஞ்சின/-அடு/ காதோ3/
செவிடனுக்கு/ உபதேசித்தது/ போன்று/ ஆகாதோ/

ஸ்ரீ த்யாக3ராஜ/ நுதுனி/ தலசக/ (மனஸு)
ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/ நினையாது/ மனத்தினை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - தவிடிகி ('தவுடு3' திரிந்து 'தவிடிகி' ஆகும்) - தவிட்டுக்கு - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டு, அதற்கு 'தவிட்டுக்கு' என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அடுத்து வரும், 'கூடிகி' (கூழுக்கு) என்ற சொல்லினால், 'தவிடிகி' சரியான சொல்லாகுமா என ஐயம் எழுகின்றது. ஏனெனில், தவிடு மாட்டுக்குத் தீவனமாகும். ஆயினும் 'தவிடு' அடுப்பு எரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. பாரம்பரியமாக 'தவிடிகி' (தவிட்டுக்கு) என்ற சொல் வழங்கி வருவதனால், அங்ஙனமே இங்கும் மொழி பெயர்க்கப்பட்டது.

தெலுங்கில் 'தவித3' என்ற சொல் 'ராகி' என்ற தான்னியத்தினைக் குறிக்கும். இதனை கூழுக்காக பயன்படுத்துவர். எனவே 'தவுடு3' என்ற சொல்லுக்கு பதிலாக 'தவித3' என்றிருக்கலாம். ஆனால் 'தவித3' என்ற சொல் தெலுங்கில் திரிந்து, 'தவித3கு' என்று வருமேயொழிய, 'தவிடிகி' என்ற வராது.

4 - தபிலெ - தபில : அகராதியின்படி 'தபெல' சரியான சொல்லலாகும்

Top

மேற்கோள்கள்
1 - மனஸு விஷய நட விடுலகொஸங்கி3தே - மனத்தினை விடய களவொழுக்கத்தினருக்கு அளித்தால் - மனது விடயங்களை நாடித் திரிதலைக் குறிக்கும். தியாகராஜர், தமது 'நிஜமுக3 நீ மஹிம' என்ற கீர்த்தனையில் கூறுவது -

"அறிவு எனும் தாயினை விடயங்களெனும் களவொழுக்கத்தினருக்கு நாள் முழுதும் அளித்து, பணமீட்டும் 'சித்தர்கள்'...".

காஞ்சி மாமுனிவரின் மனத்தினை அடக்குதல் பற்றிய உரையை நோக்கவும்.

மனம் எனும் கடிவாளம்

Top

விளக்கம்
2 - தன தலுபொகரிண்டிகி தீஸி பெட்டி - தன் கதவை பிறர் வீட்டிற்கு பெயர்த்து வைத்து - இதற்கு, இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். (1) ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, தான் தன் மனத்தினைக் கட்டாதிருத்தல்; என்றும் (2) மனத்தின் ஆளுகையினை, விடயங்களைத் தேடியலையும் இயல்புடைய புலன்களுக்கு அளித்துவிட்டு, தான் மனத்தினை அடக்க முயற்சித்தல்; என்றும். இரண்டாவதாகக் கூறப்பட்டது, இந்தப் பாடலின் கருத்துக்கு உகந்ததாகும்.

3 - தவிடிகி ரங்காட3 போயி - தவிட்டுக்கு வேசியாடச் செல்ல, கூழ்ப் பானையை குரங்கு கொண்டுபோனது : நம்முடைய ஒரு தேவை நிறைவேறுமுன் இன்னொன்று நம்மை எதிர்நோக்கி நிற்றலும், அதற்காக மேலும் மேலும் நம்மை நாம் இழிவுபடுத்திக்கொள்வதும், இங்ஙனம் பிறவிக்கடலில் ஓயாது நாம் உழல்வதும்.

5 - செவிடிகி உபதே3ஸி1ஞ்சினடு - ஆசான், சீடனின் காதுகளில்தான் உபதேசம் செய்வார். செவி கேளாதவனுக்கு எங்ஙனம் உபதேசிப்பது? இவ்வுவமையின் நோக்கம் - விடய நாட்டத்தில் உழலும் புலன்களும், புலன்களைக் கட்டவியலாத மனமும், செவிடனுக்கு ஈடாகும். அத்தகைய மனத்திற்கு நல்லுரை கூறுதல் செவிடனுக்கு உபதேசிப்பது போன்றாகும்.

Top

இந்த கிருதியில் தியாகராஜர் தனது மனத்தினை விளித்து, அதற்கு, மனத்தை அடக்குதல் பற்றி கூறுகின்றார். அதனால் அவர் கூற விரும்புவது - 'மனமே, நான் இராமனுடைய அருளை விழைகின்றேன். எனவே, நான் உன்னை, உன்னுடை இயல்பான, விடயங்களைத் தேடியலையும், போக்கில் செல்ல ஒப்பமாட்டேன். அதனால், என்னுடை நல்லுரைகளின்படி நடந்து இறைவனை நினைந்திருப்பாயாக' என.

உலகத்தில் நல்லாசான்கள் பொதுவாக நேரிடையாக உபதேசிப்பது இல்லை. தன்னையே உதாரணமாக ஆக்கியும், தன்னையே இழிவாக நோக்கியும், தன் மூலமாக, உலகோருக்கு நல்லுரை புகட்டுவார்கள். அவ்வழியில், இப்பாடல், உண்மையாகவே தியாகராஜரின் மனத்திற்கு நல்லுரையாகவோ அல்லது தன் மனத்தினை கருவியாக்கி, உலகோருக்காகவே இயற்றப்பெற்றதாகவோ இருக்கலாம்.

விடயம் - புலன்களால் அறிப்படுபவை

விடய களவொழுக்கத்தினர் - விடயங்களின் நுகர்ச்சிக்கு, வரம்போ, முறைமையோ இன்மையால், களவொழுக்கத்திற்கு ஈடாகுமென.

நாய்களை விரட்டுதல் - திறந்தவீட்டில் நுழையும் நாய்கள்

Top


Updated on 16 Jun 2009

No comments: