Friday, March 19, 2010

தியாகராஜ கிருதி - லேமி தெல்ப - ராகம் நவநீதம் - Lemi Telpa - Raga Navanitam

பல்லவி
லேமி தெல்ப 1பெத்33லெவரு லேரோ

அனுபல்லவி
2ஆ மஹிமலெல்ல மானி ஈ மஹிலோ புட்டிரோ (லே)

சரணம்
3நீ ரூபுமுனு பூனி மனஸு நிர்மலுலையுண்ட3 லேதா3
தா4ரா-த4ராப41ரீர 4த்யாக3ராஜ வினுத (லே)



பொருள் - சுருக்கம்
  • கார்முகில் வண்ண உருவத்தோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
    • (எனது) வறுமையினைத் தெரிவிக்கப் பெரியோர் எவரும் இலரோ?
    • (அவர்கள்) உனதுருவத்தினைப் புனைந்து, உள்ளத் தூயோராகத் திகழவில்லையா?
    • (அன்றி) அவ்வல்லமைகளையெல்லாம் துறந்து இப்புவியினில் பிறந்தனரோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லேமி/ தெல்ப/ பெத்33லு/-எவரு/ லேரோ/
(எனது) வறுமையினை/ தெரிவிக்க/ பெரியோர்/ எவரும்/ இலரோ/


அனுபல்லவி
ஆ/ மஹிமலு/-எல்ல/ மானி/ ஈ/ மஹிலோ/ புட்டிரோ/ (லே)
அந்த/ வல்லமைகளை/ எல்லாம்/ துறந்து/ இந்த/ புவியினில்/ பிறந்தனரோ/


சரணம்
நீ/ ரூபுமுனு/ பூனி/ மனஸு/ நிர்மலுலை/-உண்ட3 லேதா3/
உனது/ உருவத்தினை/ புனைந்து/ உள்ள/ தூயோராக/ திகழவில்லையா/

தா4ரா-த4ர/-ஆப4/ ஸ1ரீர/ த்யாக3ராஜ/ வினுத/ (லே)
கார்முகில்/ வண்ண/ உருவத்தோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஆ மஹிமலெல்ல - ஈ மஹிமலெல்ல - இந்த கிருதியில், 'மகிமைகள்' என்னவென்று விளக்கப்படவில்லையாதலால், 'இந்த மகிமைகளை' (ஈ மஹிமலெல்ல) என்று கூறுதல் பொருந்தாது. எனவே, 'ஆ மஹிமலெல்ல' (அந்த மகிமைகளை) என்று ஏற்கப்பட்டது.

3 - ரூபுமுனு - ரூபமன : இவ்விடத்தில் 'ரூபமுனு' என்பதே பொருந்தும்.

4 - த்யாக3ராஜ வினுத - த்யாக3ராஜ நுத.

Top

மேற்கோள்கள்
3 - நீ ரூபுமுனு பூனி - உனதுருவத்தினைப் புனைந்து - சாரூபம் எனப்படும் முத்திப்படிகளிலொன்று - ஆதி சங்கரர் தமது 'சிவானந்த லஹரி'யில் (28) கூறுவது -

"சாரூப்பியம், (உனதுருவம்) உனது வழிபாட்டினாலும்;
'சிவனே', 'மகாதேவா' என்ற நாம சங்கீர்த்தனத்தினால், சாமீப்பியமும், (உனதண்மை);
சிவனின் தொண்டிலீடுபட்டோரின் இணக்கம் மற்றும் கலந்துரையாடலினால், சாலோக்கியமும் (உனது உலகுறைதல்);
அசைவன, அசையாதனவற்றின் ஆன்மாவாகிய உனது உருவத் தியானத்தினால், ஏ பவானி மணாளா! சாயுச்சியமும் (உன்னுடனொன்றுதல்) பெற்று,
இறைவா! இவ்வுடலெடுத்ததன் பயனை நானடைவேன்."
(ஸ்வாமி தபஸ்யானந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top

"தனது இஷ்ட தெய்வத்தின் உலகத்தினை அடைந்து, அங்குறைதல் 'சாலோக்கிய பதவி' எனப்படும். அதற்கடுத்த படி, 'சாமீப்பியம்'. இந்தப் படியில்தான், தொண்டன், அக்கடவுளின் அண்மையிலுறையும் பேற்றினை அடைகின்றான். அடுத்த படி, அக்கடவுளின் உருவத்தினை இடையறாது தியானித்து, அவ்வுருவினையே அடையும் 'சாரூப்பிய பதவி'. முடிவாக, 'சாயுச்சிய பதவி' எனப்படும், தன்னுடைய வழிபாட்டின் இலக்கினுடன் ஒன்றுதலாகும். இதனில், உருவத்துடன், அவ்வுருவின் தன்மையினையும் அடைகின்றான்." (காஞ்சி மாமுனிவரின் 'ஸௌந்தர்ய லஹரி'யின் மீதான சொற்பொழிவு)

"கஜேந்திரன், இறைவனால் தொடப்பட்டதனால், அவ்வமயமே, தன்னுடைய 'தளைகளெனும் அறிவின்மை'யினின்று விடுபட்டு, இறைவனுடைய உருவத்தினையே - நான்கு கைகள், பீதாம்பரம் ஆகியவை - (சாரூப்பிய முக்தி) - பெற்றான்...." (பாகவத புராணம், 8-வது புத்தகம், 6-வது அத்தியாயம்)
Top

விளக்கம்
1 - பெத்33லு - பெரியோர் - தியாகராஜர், இச்சொல்லினை, சரணத்தினில் 'உனது உருவத்தினையடைந்து' என்று குறிப்பிடுகின்றார். எனவே, 'அவர்கள் தங்களது மகிமைகளையெல்லாம் துறந்து உலகினில் பிறந்தனரோ?' என்ற அனுபல்லவி கேள்வியினை, சரணத்திற்குப் பின் கொள்ளல்வேண்டும். அதுவே, கிருதியின் பொருள்-வரிசையாகும் (logical sequence).

3 - நீ ரூபுமுனு பூனி - உனது உருவத்தினை அடைந்து - இது, கருடன், அனுமன் மற்றும் நாரத முனிவர் போன்றோரைக் குறிக்கலாம். தியாகராஜர், நாரத முனிவரைத் தனது ஆசானாக வழிபட்டார் - 'ஸ்ரீ நாரத முனி' என்ற 'பைரவி' ராக கீர்த்தனையினை நோக்கவும்.

ஒரு புத்தககத்தில் 'பெரியோர்' என்ற சொல்லுக்கு 'நித்திய சூரிகள்' என்ற பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. கருடன், அனுமன், துளசி ஆகியோர் ‘நித்திய சூரிகள்’ எனப்படுவர்.

Top


Updated on 20 Mar 2010

1 comment:

Dilip Subramanian said...

Amazing !! Thank you for taking the pains to translate, word by word