Monday, August 24, 2009

தியாகராஜ கிருதி - ராமசந்த்3ர - ராகம் ஸுரடி - Ramachandra - Raga Surati

பல்லவி
ராமசந்த்3ர நீ த3ய ராமயேல ராத3

அனுபல்லவி
காம கோடி 1ஸுந்த3ராகார த்4ரு2த மந்த3
ப்ரேம மீர முந்த3ர பிலுவ ராகயுந்து3ரா (ரா)

சரணம்
சரணம் 1
கானனம்பு3 தாபமோ 2கைக மீதி3 கோபமோ
நேனு ஜேயு பாபமோ நீகு ஸ1க்தி 3லோபமோ (ரா)


சரணம் 2
4ஆட33ன்ன ரோஸமோ அல 5நாடு3பாஸமோ
மேட3 லேனி வாஸமோ மேமு ஜேயு தோ3ஸமோ (ரா)


சரணம் 3
கல்லலைன நேயமா கண்டே நீகு ஹேயமா
தல்லடி3ல்ல ந்யாயமா த்யாக3ராஜ கே3யமா (ரா)


பொருள் - சுருக்கம்
இராமசந்திரா! இராமா! மதன கோடி எழிலுருவத்தோனே! மந்தர மலையைச் சுமந்தோனே! தியாகராசனால் பாடப் பெற்றோனே!

  • உனது தயை ஏன் வாராதய்யா?

  • காதல் மீர அழைத்தால், எதிரில் வாராமலிருப்பரோ?


    • கானகத் துயரமோ?

    • கைகேயி மீதான கோபமோ?

    • நான் செய்யும் பாவமோ?

    • உனக்கு வல்லமை குறைவோ?

    • (அன்று) மனைவி பகன்ற நாணமோ?

    • அந்நாளையப் பட்டினியாலோ?

    • (அடவியில்) மேடையற்ற வாசத்தினாலோ?

    • யாம் செய்யும் குற்றமோ?


  • (எனது) கள்ளமான நேயமா?

  • கண்டாலுனக்கு வெறுப்போ?

  • (நான்) தடுமாறுதல் சரியாமோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராமசந்த்3ர/ நீ/ த3ய/ ராம/-ஏல/ ராது3-அய/
இராமசந்திரா/ உனது/ தயை/ இராமா/ ஏன்/ வாராதய்யா/


அனுபல்லவி
காம/ கோடி/ ஸுந்த3ர/-ஆகார/ த்4ரு2த/ மந்த3ர/
மதன/ கோடி/ எழில்/ உருவத்தோனே/ சுமந்தோனே/ மந்தர மலையை/

ப்ரேம/ மீர/ முந்த3ர/ பிலுவ/ ராக/-உந்து3ரா/ (ரா)
காதல்/ மீர/ எதிரில்/ அழைத்தால்/ வாராமல்/ இருப்பரோ/


சரணம்
சரணம் 1
கானனம்பு3/ தாபமோ/ கைக/ மீதி3/ கோபமோ/
கானக/ துயரமோ/ கைகேயி/ மீதான/ கோபமோ/

நேனு/ ஜேயு/ பாபமோ/ நீகு/ ஸ1க்தி/ லோபமோ/ (ரா)
நான்/ செய்யும்/ பாவமோ/ உனக்கு/ வல்லமை/ குறைவோ/


சரணம் 2
ஆட3தி3/-அன்ன/ ரோஸமோ/ அல/ நாடு3/-உபாஸமோ/
(அன்று) மனைவி/ பகன்ற/ நாணமோ/ அந்த/ நாளைய/ பட்டினியாலோ/

மேட3/ லேனி/ வாஸமோ/ மேமு/ ஜேயு/ தோ3ஸமோ/ (ரா)
(அடவியில்) மேடை/ அற்ற/ வாசத்தினாலோ/ யாம்/ செய்யும்/ குற்றமோ/


சரணம் 3
கல்லலைன/ நேயமா/ கண்டே/ நீகு/ ஹேயமா/
(எனது) கள்ளமான/ நேயமா/ கண்டால்/ உனக்கு/ வெறுப்போ/

தல்லடி3ல்ல/ ந்யாயமா/ த்யாக3ராஜ/ கே3யமா/ (ரா)
(நான்) தடுமாறுதல்/ சரியாமோ/ தியாகராசனால்/ பாடப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸுந்த3ராகார த்4ரு2த மந்த3 - ஸுந்த3ர கர த்4ரு2த மந்த3ர : 'கர த்4ரு2த மந்த3ர' என்றால் 'மந்தர மலையைக் கையில் ஏந்தியவனே' என்று பொருளாகும். விஷ்ணு, தனது கூர்மாவதாரத்தில் (ஆமை), முதுகின் மீது மந்தர மலையைச் சுமந்தார். எனவே, 'கையில் ஏந்தியவனே' (கர த்4ரு2த) என்று கூறுவது தவறாகும். இதற்குமுன் வரும், 'காம கோடி' என்ற சொற்களினால், 'ஸுந்த3ர கர' (அழகான கையோன்) என்று கூறவதும் தவறாகும். எனவே 'கர' என்ற சொல் முன்னும் இணைக்க முடியாது; பின்னும் இணைக்க முடியாது. எனவே 'ஸுந்த3ர கர த்4ரு2த மந்த3ர' என்பது தவறாகும்.

2 - கைக மீதி3 - கைக மீத3 - கைக மீது3 : 'கைக மீதி3' என்பதே சரியெனத் தோன்றுகின்றது.

3 - லோபமோ - லோப4மோ : இவ்விடத்தில் 'லோபமோ' என்ற சொல்லே பொருந்தும்.

4 - ஆட33ன்ன - ஆடு33ன்ன : தெலுங்கில் 'ஆட3தி3', 'ஆடு3தி3' என்ற இரண்டு சொற்களுக்கும் 'பெண்' என்றே பொருள்.

Top

மேற்கோள்கள்
4 - ஆட33ன்ன ரோஸமோ - (அன்று) மனைவி (பெண்) பகன்ற நாணமோ? - பதினான்கு வருடங்கள் காட்டில் வாழவேண்டுமென, கைகேயி மூலமான, தனது தந்தையின் ஆணையின்படி, இராமன், காடு செல்ல முனைந்தபோது, சீதையும், தான் 'உடன் வருவேன்' என்று சொன்னாள். இராமன், காட்டில் உள்ள சிரமங்களைப்பற்றிக் கூறி, அவளை அழைத்துச் செல்ல மறுத்தான். சீதை, தனக்கு, திருமணத்திற்கு முன்பே, தான் காட்டில் வாழ வேண்டி வருமென, ஒரு பிக்ஷிணி கூறியதையும் பகன்று, தான் காட்டிற்கு வருவேன் என்று கூறினாள். இராமன் அதற்கும் ஒப்பாததனால், இராமனை 'நீ ஆண்மகனா?' என்று இழிசொல் பகன்றாள். அதன்பின்தான், இராமன், சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல, ஒப்புதல் அளித்தான். இதனைத்தான், தியாகராஜர், இப்பாடலில் குறிப்பிட்டு, 'அதனால் ஏற்பட்ட நாணமா?' என்று கேட்கின்றார். வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயங்கள் 28 - 30 நோக்கவும்.

தியாகராஜர், தமது 'ரமா ரமண பா4ரமா' என்ற 'வஸந்த பைரவி' இகழ்ச்சியான புகழ்ச்சிக் கீர்த்தனையில், சீதையின், 'நீ ஆண்மகனா?' என்ற இழிசொல்லை, தானும் இராமனிடம் கேட்கின்றார் - 'புமானுட3னி காத3னி தெல்புமா' - 'நீ ஆண்மகனா அல்லவா என்று தெரிவிப்பாய்' என்கிறார்.

Top

விளக்கம்
5 - உபாஸமோ - 'உபவாஸம்' எனப்படும் 'நோன்பிற்காக பட்டனியிருத்தலை' சொல்வழக்கில் 'உபாஸம்' என்பர். இவ்விடத்தில், இராமன், கிழங்குகளையும், கனிகளையும் உண்டு வனவாசம் செய்ததனைச் சுட்டுகின்றார் கேலியாக.

மேடை - உப்பரிகை

Top


Updated on 24 Aug 2009

No comments: