Friday, June 12, 2009

தியாகராஜ கிருதி - க்ரு2ப ஜூசுடகு - ராகம் சா2யா தரங்கி3ணி - Krpa Joochutaku - Raga Chaaya Tarangini

பல்லவி
க்ரு2ப ஜூசுடகு வேளரா ராம

அனுபல்லவி
அபராத4முலனோர்வ வஸ1மா1யன போகவே ஸரிவாரலலோ (க்ரு2ப)

சரணம்
2பரமார்த2மௌ மார்க3மெருக3ரு 3ப்ரபு4வுலெல்ல நீச ஸேவகுலுரா
பர லோக ப4யமெந்த கானரு வர த்யாக3ராஜ ஹ்ரு2த்-ஸத3ன (க்ரு2ப)


பொருள் - சுருக்கம்
இராமா! தியாகராசனின் இதயத்துறை பெருந்தகையே!
  • ஈடானோரில் கருணை புரிய வேளையய்யா;

  • 'குற்றங்களைப் பொறுக்கக் கூடுமா' யென சொல்லப் போகாதே;


  • மெய்யறிவு சேர்க்கும் நெறியினையறிந்திலர்;

  • பிரபுக்களெல்லோரும் தாழ்ந்த சேவகர்களய்யா;

  • மற்ற உலகத்தின் அச்சம் எத்தகையதென அறிந்திலர்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
க்ரு2ப/ ஜூசுடகு/ வேளரா/ ராம/
கருணை/ புரிய/ வேளையய்யா/ இராமா/


அனுபல்லவி
அபராத4முலனு/-ஓர்வ/ வஸ1மா/-அன/ போகவே/ ஸரிவாரலலோ/ (க்ரு2ப)
'குற்றங்களை/ பொறுக்க/ கூடுமா' யென/ சொல்ல/ போகாதே/ ஈடானோரில்/ கருணை...


சரணம்
பரம-அர்த2மௌ/ மார்க3மு/-எருக3ரு/ ப்ரபு4வுலு/-எல்ல/ நீச/ ஸேவகுலுரா/
மெய்யறிவு சேர்க்கும்/ நெறியினை/ அறிந்திலர்/ பிரபுக்கள்/ எல்லோரும்/ தாழ்ந்த/ சேவகர்களய்யா/

பர/ லோக/ ப4யமு/-எந்த/ கானரு/ வர/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-ஸத3ன/ (க்ரு2ப)
மற்ற/ உலகத்தின்/ அச்சம்/ எத்தகையதென/ அறிந்திலர்/ பெருந்தகையே/ தியாகராசனின்/ இதயத்து/ உறை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - பரமார்த2மௌ மார்க3மெருக3ரு - மெய்யறிவு சேர்க்கும் நெறியினையறிந்திலர் - தியாகராஜர் தனது 'காஸிச்சேதே3' என்ற கௌ3ளிபந்து ராக கீர்த்தனையில் கூறவது -
"அரியின் தொண்டர்கள் தங்களை சேவிக்கமாட்டார் என்று, மன்னர்கள் தயை புரிவதைக் கைவிட்டனர்; மற்ற உலகத்தைப் பற்றி எண்ணமாற்போயினர்."

Top

விளக்கம்
1 - அன போகவே - சொல்லப் போகாதே - இறைவன் 'குற்றங்களைப் பொறுக்கக் கூடுமா?' எனச் சொல்வானோ என அஞ்சி, முன் கூட்டியே எச்சரிக்கின்றார்.

2 - பரமார்த2மௌ மார்க3மு - மெய்யறிவு சேர்க்கும் நெறி - இவ்விடத்தில், பிரபுக்களை இச்சொல் குறிப்பிடுவதனால், 'அரச நீதி'யினைக் கடைப்பிடிக்காது நாடாளும் மன்னர்கள், 'மெய்யறிவு சேர்க்கும் நெறி அறியார்' எனக் கூறுவதாகத் தோன்றுகின்றது. அரச நீதியினைப் பற்றி மனு மற்றும் பலரும் உரைத்துள்ளவற்றினைக் குறித்து கட்டுரைகளை நோக்கவும்.

Top

3 - ப்ரபு4வுலெல்ல நீச ஸேவகுலு - பிரபுக்களெல்லோரும் தாழ்ந்த சேவகர்கள் - அக்பர் சக்ரவர்த்தியைக் குறித்து ஓர் கதை கூறப்படும். இஸ்லாமியர்கள் 'அல்லாஹு அக்பர்' (இறைவனே பெருந்தகை) என வழிபடுவர். அமைச்சரொருவர், அக்பர்தான் இறைவன் எனக் கூறினார்.

ஒரு நாள் அக்பரிடம் பிச்சை வேண்டி ஒரு துறவி வந்தார். காவலர், அக்பர், இறைவழிபாடு செய்வதாகவும், சிறிது பொறுத்திருக்க அவரை வேண்டினர். ஆனால், அந்தத் துறவி தங்காது சென்றுவிட்டார். அக்பர் வழிபாடு முடிந்தபின், விவரமறிந்து, அந்தத் துறவி ஏன் தங்கவில்லை என காவலரைக் கேட்க, அவர்கள், அந்தத் துறவி - "அக்பர்தான் இறைவன் என கேள்விப்பட்டேன். அதனால் அவரிடம் பிச்சை கேட்க வந்தேன். ஆனால் அவரோ இறைவனை இரப்பதாக அறிகின்றேன். நான், இறைவனிடமே நேரிடையாக எனது கோரிக்கையினைக் கேட்டுக்கொள்கின்றேன்" என கூறியதை அக்பரிடம் கூறினர். அக்பர், தன்னை 'இறைவன்' எனக் கூறிய அமைச்சர் இச்சகம் (முகமன்) பேசியதை உணர்ந்தார்.

முத்துஸ்வாமி தீக்ஷிதர், தனது 'ஹிரண்மயீம் லக்ஷ்மீம்' என்ற கீர்த்தனையில் 'இழிந்த மனிதர்களின் ஆதரவினை ஒறுக்கின்றேன்' எனக் கூறுகின்றார்.

இதனால், தியாகராஜர் இங்கு இறைவனிடம் சொல்ல விரும்புவது யாதெனில், 'மன்னர்களையும் செல்வந்தர்களையும் அண்டி வாழ்தலை இழிவானதாகக் கருதுகின்றேன். எனவே, இராமா, நீ கருணை புரிய வேளையிஃதாகும் (க்ரு2ப ஜூசுடகு வேளரா ராம)'.

பிரபுக்கள் - மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள்

மற்ற உலகம் - உயிர் நீத்தபின் எதிர்கொள்ளும் நிலைகள்
Top


Updated on 12 Jun 2009

No comments: