Friday, November 5, 2010

தியாகராஜ கிருதி - மானஸ ஸஞ்சரரே - ராகம் புன்னாகவராளி - Manasa Sancharare - Raga Punnagavarali

பல்லவி
1மானஸ ஸஞ்சரரே ராமே

சரணம்
சரணம் 1
வர முனி ப4க்த லோக சயார்யே
பரம பாவன நிர்ஜர வர்யே
2முக2 ஜித பா4ர்யே (மா)


சரணம் 2
ஸ்வர ஜித க4ன ரவ மாது4ர்யே
ஸுர வைரி நிசய தமஸ்-ஸூர்யே
நிருபம ஸௌ1ர்யே (மா)


சரணம் 3
விகஸித ஸரஸீருஹ நேத்ரே
3மகராங்க கோடி ஸன்னிப4 கா3த்ரே
கௌஸி1க மித்ரே (மா)


சரணம் 4
4ஸு1க முக2 வினுத ஸு-சாரித்ரே
அகளங்க ஸீதா ஸு-களத்ரே
கருணா பாத்ரே (மா)


சரணம் 5
அக3ணித லோக க3ணாதா4ரே
5நக3 வைரி ரிபு ஜலத3 ஸமீரே
6து3ர்ஜன தூ3ரே (மா)


சரணம் 6
விக3ளித மத3 ஹ்ரு23யாகா3ரே
நிக3மாக3ம ஸஞ்சாரே
ஹரி பரிவாரே (மா)


சரணம் 7
கமலாஸன நுத கு3ண க்3ராமே
7கமலாரி ஸே12ர ப்ரிய ராமே
வாரித3 ஸ்1யாமே (மா)


சரணம் 8
கமலா 8ஹ்ரு2த்3-குமுத3 ஸோமே
அமல சித்த ஜன ரிபு பீ4மே
கோ3பிகா காமே (மா)


சரணம் 9
வாகீ3ஸே1ந்த்3ர ருத்3ராதீ4ஸே1
ராக3 லோப4 மத3 வினாஸே1
ஸகலாதீ4ஸே1 (மா)


சரணம் 10
ராஜ ராஜ பூஜித ரமேஸே1
த்யாக3ராஜ ஹ்ரு23ய நிவேஸே1
ஸாகேத புரீஸே1 (மா)


பொருள் - சுருக்கம்
ஏ மனமே!

 • இராமனில் நிலைப்பாய்.

  • உயர் முனிவர், தொண்டர், உலகங்களுக்கு இனியோனில்,
  • முற்றிலும் தூய, வானோரால் வேண்டப்படுவோனில்,
  • தாராதிபனை வெல்லும் முகத்தோனில்,

  • கார்முகில் உறுமலை வெல்லும் இனிய குரலுடையோனில்,
  • வானோர் பகைவர்களெனும் இருளுக்குப் பகலவனில்,
  • சூரத்தனத்தினில் உவமையற்றோனில்,

  • அலர்ந்த கமலக் கண்ணனில்,
  • மதனர்கள் கோடி நிகர் உடல் வனப்புடையோனில்,
  • கௌசிக முனிவனின் நண்பனில்,

  • சுகர் ஆகியோர் போற்றும் நற்பண்புடையோனில்,
  • களங்கமற்ற சீதையின் இனிய மணாளனில்,
  • கருணைப் பெட்டகத்தினில்,

  • எண்ணிறந்த உலகங்களுக்கு ஆதாரமானவனில்,
  • இந்திரன் பகைவரெனும் முகிலை விரட்டும் புயலினில்,
  • தீயோருக்குத் தூரமானவனில்,

  • ஆணவம் வென்றோரின் உள்ளத்துறைவோனில்,
  • மறைகள், ஆகமங்கள் உள்ளுறைவோனில்,
  • வானரப் பரிவாரத்தோனில்,

  • மலரோன் போற்றும் பண்புக் குவியலினில்,
  • பிறையணிவோனுக்கு இனிய, களிப்பூட்டுவோனில்,
  • கார்முகில் வண்ணனில்,

  • கமலா இதயக் குமுதத்தின் மதியினில்,
  • தூய உள்ளத்தோர் பகைவரை நடுங்கவைப்போனில்,
  • ஆய்ச்சியர் காமுறுவோனில்,

  • பிரமன், இந்திரன், அரனுக்கும் தலைவனில்,
  • பற்று, பேராசை, செருக்கை வேரறுப்போனில்,
  • யாவர்க்கும் (யாவற்றிற்கும்) அதிபனில்,

  • அரசர்க்கரசர் தொழும், மா மணாளனில்,
  • தியாகராசன் இதயத்துட்புகுந்தோனில்,
  • சாகேதபுரி மன்னனில்,

 • ஏ மனமே! நிலைப்பாய்பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மானஸ/ ஸஞ்சர/ ரே/ ராமே/
மனமே/ நிலைப்பாய்/ ஏ/ இராமனில்/


சரணம்
சரணம் 1
வர/ முனி/ ப4க்த/ லோக சய/-ஆர்யே/
உயர்/ முனிவர்/ தொண்டர்/ உலகங்களுக்கு/ இனியோனில்/

பரம/ பாவன/ நிர்ஜர/ வர்யே/
முற்றிலும்/ தூய/ வானோரால்/ வேண்டப்படுவோனில்/

முக2/ ஜித/ ப4-/ஆர்யே/ (மா)
முகத்தோனில்/ வெல்லும்/ தாரா/ அதிபனை/ மனமே...


சரணம் 2
ஸ்வர/ ஜித/ க4ன/ ரவ/ மாது4ர்யே/
குரலில்/ வெல்லும்/ கார்முகில்/ உறுமலின்/ இனிமையினை/

ஸுர/ வைரி நிசய/ தம:/-ஸூர்யே/
வானோர்/ பகைவர்கள்/ (எனும்) இருளுக்கு/ பகலவனில்/

நிருபம/ ஸௌ1ர்யே/ (மா)
உவமையற்ற/ சூரனில்/ மனமே...


சரணம் 3
விகஸித/ ஸரஸீருஹ/ நேத்ரே/
அலர்ந்த/ கமல/ கண்ணனில்/

மகர/-அங்க/ கோடி/ ஸன்னிப4/ கா3த்ரே/
மீன்/ சின்னத்தோன் (மதன)/ கோடி/ நிகர்/ உடல் வனப்புடையோனில்/

கௌஸி1க/ மித்ரே/ (மா)
கௌசிக முனிவனின்/ நண்பனில்/ மனமே...


சரணம் 4
ஸு1க/ முக2/ வினுத/ ஸு-சாரித்ரே/
சுகர்/ ஆகியோர்/ போற்றும்/ நற்பண்புடையோனில்/

அகளங்க/ ஸீதா/ ஸு-களத்ரே/
களங்கமற்ற/ சீதையின்/ இனிய/ மணாளனில்/

கருணா/ பாத்ரே/ (மா)
கருணை பெட்டகத்தினில்/ மனமே...


சரணம் 5
அக3ணித/ லோக க3ண/-ஆதா4ரே/
எண்ணிறந்த/ உலகங்களுக்கு/ ஆதாரமானவனில்/

நக3/ வைரி/ ரிபு/ ஜலத3/ ஸமீரே/
மலைகளின்/ எதிரி (இந்திரன்)/ பகைவர்/ (எனும்) முகிலை/ (விரட்டும்) புயலினில்/

து3ர்ஜன/ தூ3ரே/ (மா)
தீயோருக்கு/ தூரமானவனில்/ மனமே...


சரணம் 6
விக3ளித/ மத3/ ஹ்ரு23ய/-ஆகா3ரே/
வென்றோரின்/ ஆணவம்/ உள்ளத்து/ உறைவோனில்/

நிக3ம/-ஆக3ம/ ஸஞ்சாரே/
மறைகள்/ ஆகமங்கள்/ உள்ளுறைவோனில்/

ஹரி/ பரிவாரே/ (மா)
வானர/ பரிவாரத்தோனில்/ மனமே...


சரணம் 7
கமல-ஆஸன/ நுத/ கு3ண/ க்3ராமே/
மலரோன்/ போற்றும்/ பண்பு/ குவியலினில்/

கமல/-அரி/ ஸே12ர/ ப்ரிய/ ராமே/
கமல/ பகை (மதி) (பிறை)/ யணிவோனுக்கு/ இனிய/ களிப்பூட்டுவோனில்/

வாரித3/ ஸ்1யாமே/ (மா)
கார்முகில்/ கார்-வண்ணனில்/ மனமே...


சரணம் 8
கமலா/ ஹ்ரு2த்3/-குமுத3/ ஸோமே/
கமலா/ இதய/ குமுதத்தின்/ மதியினில்/

அமல/ சித்த ஜன/ ரிபு/ பீ4மே/
தூய/ உள்ளத்தோர்/ பகைவரை/ நடுங்கவைப்போனில்/

கோ3பிகா/ காமே/ (மா)
ஆய்ச்சியர்/ காமுறுவோனில்/ மனமே...


சரணம் 9
வாக்3/-ஈஸ1/-இந்த்3ர/ ருத்3ர/-அதீ4ஸே1/
நாமகள்/-மணாளன் (பிரமன்)/ இந்திரன்/ ருத்திரன் (அரனுக்கும்)/ தலைவனில்/

ராக3/ லோப4/ மத3/ வினாஸே1/
பற்று/ பேராசை/ செருக்கை/ வேரறுப்போனில்/

ஸகல/-அதீ4ஸே1/ (மா)
யாவர்க்கும் (யாவற்றிற்கும்)/ அதிபனில்/ மனமே...


சரணம் 10
ராஜ/ ராஜ/ பூஜித/ ரமா/-ஈஸே1/
அரசர்க்கு/ அரசர்/ தொழும்/ ரமை (மா)/ மணாளனில்/

த்யாக3ராஜ/ ஹ்ரு23ய/ நிவேஸே1/
தியாகராசன்/ இதயத்து/ உட்புகுந்தோனில்/

ஸாகேத/ புரி/-ஈஸே1/ (மா)
சாகேத/ புரி/ மன்னனில்/ மனமே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மானஸ ஸஞ்சரரே - சில புத்தகங்களில் இச்சொற்கள் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

8 - ஹ்ரு2த்3-குமுத3 - ஹ்ரு23ய குமுத3.

Top

மேற்கோள்கள்
3 - மகராங்க - மீன் சின்னத்தோன் - காமன்.

5 - நக3 வைரி - மலைகளுக்கு எதிரி - இந்திரன் - வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், முதல் அத்தியாயம் - (மைனாக மலை அனுமனுக்குக் கூறுவது) நோக்கவும்.

Top

விளக்கம்
2 - முக2 ஜித பா4ர்யே - 'பா4ர்யா' என்ற சொல்லுக்கு, 'மனைவி' என்று பொருளாகும். இதனை நேரிடையாக மொழி பெயர்த்தால், 'முக அழகினில் மனைவியையும் வெல்வோன்' என்று பொருளாகும். அத்தகைய பொருள் பொருத்தமாகப் படவில்லை. புத்தகங்களில், இதற்கு, 'முக அழகினில் மதியினை வெல்வோன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தியாகராஜர், பல கிருதிகளில், 'மதி'யை, 'ப4 ராஜ' (ப4 - தாரை) 'தாராதிபன்' என்று குறிப்பிடுகின்றார். அவருடைய, 'மேலுகோவய்யா' என்ற பௌ4ளி ராக கிருதி நோக்கவும். எனவே, 'பா4ர்யே' என்பதனை 'ப4+ஆர்யே' (தாரைகளுக்கு இனியோன்) என்று பிரித்துப் பொருள் கொள்ளப்பட்டது.

4 - ஸு1க முக2 வினுத - சுகர் முதலானோர் போற்றுவோன். சதாசிவ ப்ரம்மேந்திரரின், 'பிப3ரே ராம ரஸம்' என்ற கீர்த்தனையினையும் நோக்கவும் - சரணம் 4 - 'ஸு1க, ஸௌ1னக, கௌஸி1க முக2 பீதம்' (சுகர், சௌனகர் மற்றும் கௌசிகர் (விசுவாமித்திரர்) ஆகியோர் பருகிய ராம நாம ரசம்).
Top

6 - து3ர்ஜன தூ3ரே - தீயோருக்குத் தூரமானவன். இறைவன் அனைத்து உயிரினங்களிலும் - நல்லவனாகிலும், தீயவனாகிலும் - உள்ளியக்கமாக உள்ளான். ஆனால், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறுவது போன்று, எங்ஙனம் நெருப்பு, அண்டியோனுக்கு இதமளிக்கின்றதோ, அங்ஙனம், இறைவனை அண்டினால் இதம் பெறலாம்; தீயோர், இறைவனை அண்டாததனால், அவர்களுக்கு அந்த சுகம் கிடைப்பதில்லை. அவ்வகையில், 'தீயோருக்குத் தூரமானவன்' என்று பொருள். ராம கிருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள் - Gospel of SrI rAmakRSNa paramahaMsa

7 - கமலாரி - கமலப் பகை - தாமரை மலர்களில் சில, பொழுது விடிய, மலரும்; பொழுது சாய, மூடிக்கொள்ளும். சில, சந்திரனைக் கண்டு மலரும்; பொழுது விடிய, மூடிக்கொள்ளும். கமலம், முதல் வகையைச் சேர்ந்தது; குமுதம், இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. அதனால், இடத்திற்குத் தகுந்தபடி, பகலவனையும், மதியினையும், 'குமுதப் பகை' மற்றும் 'கமலப் பகை' என்று கூறப்படும்.

Top

முற்றிலும் தூய - இறைவனைக் குறிக்கும்
தாராதிபன் - மதி
கௌசிக முனி - விசுவாமித்திரர்
இந்திரன் பகைவர் - அரக்கர்
மலரோன் - பிரமன்
பிறையணிவோன் - சிவன்
கமலா - இலக்குமி
சாகேத புரி - அயோத்தி நகர்

Top


Updated on 06 Nov 2010

No comments: