Friday, April 2, 2010

தியாகராஜ கிருதி - ஸரி ஜேஸி வேடு3க - ராகம் தீவ்ர வாஹினி - Sari Jesi Veduka - Raga Tivra Vahini

பல்லவி
ஸரி ஜேஸி வேடு3க ஜூசுட
ஸாகேத ராம ந்யாயமா

அனுபல்லவி
14ரலோன நீ நிஜ தா3ஸுலனு
2கந்த3ர்பகாது3 நிஜ தா3ஸுலனு (ஸ)

சரணம்
3கொக்க ஸா1ஸ்த்ர விது3லு 4நர ஸன்னுதி சே
கொ3ப்ப ப3ஹுமதுலனந்தே3ரய்ய
சக்ககா3னு ப4க்தி ஸா1ஸ்த்ர விது3
5சால கனி நவ்வெத3ரு 6த்யாக3ராஜ நுத (ஸ)


பொருள் - சுருக்கம்
சாகேதராமா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • சரிசெய்து வேடிக்கை பார்த்தல் நியாயமா?
  • புவியில், உனது உண்மையான தொண்டர்களையும், காமம் ஆகியவற்றின் பேரடிமைகளையும் சரிசெய்து வேடிக்கை பார்த்தல் நியாயமா?

    • கொக்க சாத்திர வல்லுநர்கள், மனிதத் தோத்திரம் செய்து சிறந்த வெகுமானங்களைப் பெற்றனரய்யா; (அஃதன்றி)
    • நன்றாக, பக்தி சாத்திர வல்லுநர்களை நோக்கி, மிக்கு நகைத்தனர்;


  • புவியில், உனது உண்மையான தொண்டர்களையும், காமம் ஆகியவற்றின் பேரடிமைகளையும் சரிசெய்து வேடிக்கை பார்த்தல் நியாயமா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸரி/ ஜேஸி/ வேடு3க/ ஜூசுட/
சரி/ செய்து/ வேடிக்கை/ பார்த்தல்/

ஸாகேத/ ராம/ ந்யாயமா/
சாகேத/ ராமா/ நியாயமா/


அனுபல்லவி
4ரலோன/ நீ/ நிஜ/ தா3ஸுலனு/
புவியில்/ உனது/ உண்மையான/ தொண்டர்களையும்/

கந்த3ர்பக/-ஆது3ல/ நிஜ/ தா3ஸுலனு/ (ஸ)
காமம்/ ஆகியவற்றின்/ பெரும்/ அடிமைகளையும்/ சரிசெய்து...


சரணம்
கொக்க/ ஸா1ஸ்த்ர/ விது3லு/ நர/ ஸன்னுதி/ சே/
கொக்க/ சாத்திர/ வல்லுநர்கள்/ மனித/ தோத்திரம்/ செய்து/

கொ3ப்ப/ ப3ஹுமதுலனு/-அந்தே3ரு/-அய்ய/
சிறந்த/ வெகுமானங்களை/ பெற்றனர்/ அய்யா/ (அஃதன்றி)

சக்ககா3னு/ ப4க்தி/ ஸா1ஸ்த்ர/ விது3ல/
நன்றாக/ பக்தி/ சாத்திர/ வல்லுநர்களை/

சால/ கனி/ நவ்வெத3ரு/ த்யாக3ராஜ/ நுத/ (ஸ)
மிக்கு/ நோக்கி/ நகைத்தனர்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 4ரலோன நீ நிஜ தா3ஸுலனு - த4ரலோன நீ பரிவாருலனு : இவ்விடத்தில் 'த4ரலோன நீ நிஜ தா3ஸுலனு' என்பதே மிக்கு பொருந்தும்.

5 - சால கனி - ஜால க3னி : இவ்விடத்தில் 'சால கனி' என்பதே பொருந்தும்.

6 - த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜ வினுத.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - கந்த3ர்பகாது3 - 'கந்த3ர்பக' என்பதற்கு 'காமம்' என்று பொருளாகும். ஆனால், தமிழில், 'காமம்' என்ற சொல்லுக்கு, பொதுவாக இச்சையென்றும், 'காம இச்சை'யென்றும் பொருளுண்டு. சரணத்தில் கூறப்பட்ட, 'கொக்க சாத்திர' என்பதனைக் கருத்தில் கொண்டு, இவ்விடத்தில், 'கந்த3ர்பக' என்பதற்கு, 'காம இச்சை'யென்று பொருள்படும்.

கந்த3ர்பகாது3ல - காமம் ஆகியவற்றின் - காமம் முதலான உட்பகை ஆறு - காமம், சினம், பேராசை, மோகம், செருக்கு, காழ்ப்பு

3 - கொக்க ஸா1ஸ்த்ர - கொக்க சாத்திரம் - 'கொக்கோகம்' எனப்படும் காமக்கலை நூல். 'கொக்க சாத்திர வல்லுநர்கள்' என்பது இவ்விடத்தில், சங்கீதத்தின் பெயரால், தாய்க்குலத்தை நுகர்ச்சிப் பொருளாக்கி, சதிருக்காக, கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தி, பாடல் இயற்றும் வாக்கேயக்காரர்களையும், அப்பாடல்களைப் பாடும், இசைக் கலைஞர்களையும் குறிக்கலாம்.

Top

4 - நர ஸன்னுதி சே - மனிதத் தோத்திரம் செய்து - அத்தகைய சதிர்ப் பாடல்களில், கடவுளர்களின் பெயர்கள் வந்தாலும், உண்மையில், அந்தப் போர்வையில், அவை மனிதரைத் தோத்திரம் செய்வனவாகும். தியாகராஜரின் 'நிதி4 சால சுக2மா' என்ற கல்யாணி ராக கீர்த்தனையினையும் நோக்கவும்

சரிசெய்து - ஒப்பிட்டு
பக்தி சாத்திர வல்லுநர்கள் - இறைவனின் தொண்டர்கள்

Top


Updated on 02 Apr 2010

No comments: