Sunday, April 12, 2009

தியாகராஜ கிருதி - ஒக மாட - ராகம் ஹரி காம்போ4ஜி - Oka Maata - Raga Hari Kaambhoji

பல்லவி
1ஒக மாட 2ஒக பா3ணமு 3ஒக பத்னீ வ்ரதுடே3 மனஸா

அனுபல்லவி
4ஒக சித்தமு-க3லவாடே3 ஒக நாடு3னு மரவகவே (ஒ)

சரணம்
5சிர ஜீவித்வமு 6நிர்ஜர வர 7மோக்ஷமொஸங்கு3னே
483ரகே3 தே3வுடே3 9த்யாக3ராஜ நுதுடு3 (ஒ)


பொருள் - சுருக்கம்
மனமே!
  • இராமன், ஓர் சொல், ஓரம்பு, ஓர்மனை விரதத்தோனடி;

  • ஓர் சித்தமுடையவனடி;

  • நீண்டாயுளும், குன்றாத, உயர் வீடும் அளிப்பானடி;

  • புவியில் திகழும் தெய்வமடி, தியாகராசனால் போற்றப் பெற்றோன்;

ஒரு நாளும் மறவாதேடி.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஒக/ மாட/ ஒக/ பா3ணமு/ ஒக/ பத்னீ/ வ்ரதுடே3/ மனஸா/
ஓர்/ சொல்/ ஓர்/ அம்பு/ ஓர்/ மனை/ விரதத்தோனடி/ மனமே/


அனுபல்லவி
ஒக/ சித்தமு/-க3லவாடே3/ ஒக/ நாடு3னு/ மரவகவே/ (ஒ)
ஓர்/ சித்தம்/ உடையவனடி/ ஒரு/ நாளும்/ மறவாதேடி/


சரணம்
சிர/ ஜீவித்வமு/ நிர்ஜர/ வர/ மோக்ஷமு/-ஒஸங்கு3னே/
நீண்ட/ ஆயுளும்/ குன்றாத/ உயர்/ வீடும்/ அளிப்பானடி/

4ர/ ப3ரகே3/ தே3வுடே3/ த்யாக3ராஜ/ நுதுடு3/ (ஒ)
புவியில்/ திகழும்/ தெய்வமடி/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோன்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - சிர ஜீவித்வமு - சிரஞ்ஜீவித்வமு : வடமொழி அகராதிபடி, 'சிர ஜீவித்வமு' சரியாகும்; தெலுங்கு அகராதிபடி, இரண்டு சொற்களுமே சரியாகும்.

7 - மோக்ஷமு - ஸௌக்2யமு : 'ஸௌக்2யமு' சரியானால், 'நிர்ஜர வர ஸௌக்2யமு' என்பதற்கு 'வானுலக இன்பம்' என்று பொருளாகும். தியாகராஜர் வானுலக இன்பத்தினை ஒரு குறிக்கோளாகக் கொண்டவரல்ல. மேலும் அதனை (வானுலுக இன்பங்களை) யாருக்கும் அவர் பரிந்துரைக்க மாட்டார். 'நிர்ஜர' என்ற சொல் பொதுவாக 'வானோரை'க் குறிப்பிடும் - கீழ்க்கண்ட விளக்கத்தினையும் நோக்கவும். அதனால், அந்த பொருளில் மொழிபெயர்த்து, 'மோக்ஷமு' என்ற சொல்லுக்கு பதிலாக, 'ஸௌக்2யமு' என்ற சொல்லைத் திணித்துள்ளதாகக் கருதுகின்றேன். எனவே, 'மோக்ஷமு' என்ற சொல்தான் சரியாகும்.

8 - 3ரகே3 - ப3ரகு3

Top

மேற்கோள்கள்
1 - ஒக மாட - ஓர் சொல் - சொல் தவறாதவனென - வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், 18-வது அத்தியாயத்தில் ராமன் கைகேயியை நோக்கிக் கூறவது -

"தேவி! நீங்கள் என்ன சொல்லவந்தீர்களே அதனைச் சொல்லவும். அரசன் விரும்புவதனை நான் தவறாது நிறைவேற்றுவேன் - அதற்கான எனது வாக்குறுதியையும் அளிக்கின்றேன். ராமன் இருமுறைப் பகர்கிலன்."

விளக்கம்
2- ஒக பா3ணமு - ஓரம்பு : 'எவரிச்சிரிரா' என்ற கீர்த்தனையில் இராமனின் அம்பினை வெகுவாக தியாகராஜர் புகழ்ந்துள்ளார். இச்சொல்லுக்கு (ஓரம்பு), 'ஓரே குறிக்கோள்' அல்லது 'குறிக்கோளில் தவறாத' என்ற பொருளாகும்.

3 - ஒக பத்னீ - ஓர் மனை - இராமனுக்கு, 'மரியாதா புருஷோத்தமன்', அதாவது, 'வரம்பு மீறாதவன்' என்று பெயராகும். இராமனின் தந்தையான தசரதனுக்கு, 3 ராணிகளுடன், 60,000 வேறு மனைவியரும் உண்டென வழக்கு. ஆனால், இராமனோ, தனது மனைவியை, காட்டுக்கு அனுப்பிவிட்டு, மறுமணம் செய்து கொள்ளாது, 'அஸ்1வமேத4 யாக'த்திற்காக, பொன்னால் சீதையின் உருவத்தினை வடித்து, அச்சிலை முன்னிலையில், அந்த யாகத்தினைச் செய்தான். இப்படி, இராமன், நன்னடத்தையின் வரம்பினை மீறாததுடன், அந்நன்னடைத்தைக்கே புது வரம்புண்டாக்கினான்.

4 - ஒக சித்தமு - ஓர் சித்தம். எண்ணியதை முடித்தல். விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் இறைவனுக்கு 'ஸித்34 ஸங்கல்ப' என்ற பெயராகும். இதன் முழு விளக்கத்தையும் இங்கு காணவும்.

போர் தொடங்குமுன்பே, விபீடணனுக்கு, இலங்கையின் அரசனாக முடிசூட்டியது, இராமனின் 'எண்ணியதை முடித்தலுக்கு' ஓர் எடுத்துக்காட்டாகும்.

Top

5 - சிர ஜீவித்வமு நிர்ஜர வர மோக்ஷமு - நீண்ட ஆயுளும் குன்றாத உயர் வீடும் அளிப்பானடி - வடமொழியில், இதற்கு 'பு4க்தி முக்தி' (இம்மை, மறுமை) எனப்படும். அனுமன் 'சிரஞஜீவி'.

6 - நிர்ஜர - பொதுவாக, இச்சொல்லுக்கு 'மூப்பற்றோர்' அதாவது 'வானோர்' என்ற பொருளாகும். ஆனால், இவ்விடத்தில், இது 'குன்றாத' தன்மையுடைய வீட்டனைக் குறிக்கும்.

9 - த்யாக3ராஜ நுதுடு3 - தியாகராஜனால் போற்றப்பெற்றோன் - இச்சொற்கள் இதற்கு முன் வரும் 'த4ர ப3ரகே3 தே3வுடே3' (புவியில் திகழும் தெய்வமடி) என்பதனுடனோ, அல்லது, பல்லவியுடனோ சேர்க்கலாம். ஆனால் முன்கூறியபடி சேர்த்தலே மிக்கு பொருந்தும் எனக் கருதுகின்றேன்.

இப்பாடலில் வரும் 'ஏ' என்ற விளிப்பினைக் கொண்ட சொற்கள் ('மரவகவே'...) பெண்பால் விளித்தலாகும். தியாகராஜர் மனத்தினைப் பெண்பாலில் விளிப்பதனை பல பாடல்களில் காணலாம்.

மனை - மனைவி

Top


Updated on 13 Apr 2009

No comments: