Friday, March 13, 2009

தியாகராஜ கிருதி - மாரு பல்கக3 - ராகம் ஸ்ரீ ரஞ்ஜனி - Maaru Palkaga - Raga Sri Ranjani

பல்லவி
மாரு பல்ககு3ன்னாவேமிரா
மா மனோ-ரமண

அனுபல்லவி
1ஜார சோர4ஜன ஜேஸிதினா
ஸாகேத ஸத3ன (மா)

சரணம்
2தூ3ர-பா4ரமந்து3 நா ஹ்ரு23-
யாரவிந்த3மந்து3
3நெலகொன்ன
4தா3ரினெரிகி3 ஸந்தஸில்லி-
னட்டி த்யாக3ராஜ நுத (மா)


பொருள் - சுருக்கம்
  • இலக்குமியின் உள்ளத்தினை மகிழ்விப்போனே! சாகேத நகருறைவோனே!

  • நெடுந்தூரத்திலும், எனது இதயக் கமலத்திலும் (நீ) நிலைபெற்றுள்ள தன்மையினை யறிந்து களித்திருப்பவனாகிய தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • (அல்லது)

  • நெடுந்தூரத்திலும், எனது இதயக் கமலத்திலும் நிலைபெற்றுள்ள, நெறியினை யறிந்து களித்திருப்பவனாகிய, தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

    • காமுகரையும், கள்வரையுமா புகழ்ந்தேன்?

    • மறுமொழி பகராதிருப்பதென்னவைய்யா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மாரு/ பல்கக3/-உன்னாவு/-ஏமிரா/
மறுமொழி/ பகராது/ இருப்பது/ என்னவைய்யா/

மா/ மனோ/-ரமண/
இலக்குமியின்/ உள்ளத்தினை/ மகிழ்விப்போனே/


அனுபல்லவி
ஜார/ சோர/ ப4ஜன ஜேஸிதினா/
காமுகரையும்/, கள்வரையும்/ புகழ்ந்தேனா/

ஸாகேத/ ஸத3ன/ (மா)
சாகேத/ நகருறைவோனே/


சரணம்
தூ3ர-பா4ரமந்து3/ நா/ ஹ்ரு23ய/-
நெடுந்தூரத்திலும்/ எனது/ இதய/

அரவிந்த3மந்து3/ நெலகொன்ன/
கமலத்திலும்/ (நீ) நிலைபெற்றுள்ள/

தா3ரினி/-எரிகி3/ ஸந்தஸில்லின-அட்டி/
தன்மையினை (நெறியினை)/ யறிந்து/ களித்திருப்பவனாகிய/

த்யாக3ராஜ/ நுத/ (மா)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - தூ3ர-பா4ரமந்து3 நா ஹ்ரு23யாரவிந்த3மந்து3 - நெடுந்தூரத்திலும், எனது இதயக் கமலத்திலும் - இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கின்றான். பகவத் கீதையில் (அத்தியாயம் 13, செய்யுள் 15) கண்ணன் உரைப்பது -

"அனைத்து சீவன்களிலும் உள்ளும், புறமுமமாக, அசைவதும், அசையாததுவுமாக, நுண்மையினால் புலப்படாமலும் (அறியப்படாமலும்), நெடுந்தூரத்திலும், அருகிலும் உள்ளது." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்).

Top

விளக்கம்
1 - ஜார சோர - காமுகன் - கோபியரின் உள்ளம் கொள்ளை கொண்டதால், கண்ணனுக்கும் அப்படி யொரு பெயருண்டு. முத்துஸ்வாமி தீக்ஷிதர் கிருதி 'மார ரதி ப்ரியம்' - 'ரதி ப்ரியா' ராகம், மற்றும் தியாகராஜரின் கிருதி 'வர லீல கா3ன' - ராகம் ஸங்கராபரணம் நோக்கவும்.

1 - சோர - திருடன் - இந்த தெலுங்கு சொல்லுக்கு 'அழகிய பெண்' என்று ஒரு பொருளும் உண்டு. இங்கு 'திருடன்' என்ற பொருள் கொள்ளப்பட்டது.

3 - நெலகொன்ன - சரணத்தினை இருவிதமாக மொழிபெயர்க்கலாம். இரண்டுமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், முதலில் கூறப்பட்டுள்ள பொருள் மிக்கு பொருந்தும் என கருதுகின்றேன்.

4 - தா3ரி - பொதுவாக, இச்சொல்லுக்கு 'நெறி', 'வழி' என்று பொருள். ஆனால் 'தன்மை' என்றும் பொருளுண்டு. சரணத்தின் இரண்டுவிதமான மொழிபெயர்ப்புகளிலும், இரண்டு பொருட்களுமே 'நெறி', 'தன்மை', சந்தர்ப்பத்திற்கேற்ப, ஏற்கப்பட்டுள்ளது.

நெடுந்தூரம் - அங்கிங்கெனாது எங்கும்.
எனது இதயக் கமலத்திலும் நிலைபெற்றுள்ள - இது இறைவனைக் குறிக்கும்.
நெறி - இறைநெறி
Top


Updated on 13 Mar 2009