Thursday, December 11, 2008

மனஸு நில்ப - ராகம் ஆபோ4கி - Manasu Nilpa - Raga Abhogi

பல்லவி
மனஸு நில்ப ஸ1க்தி லேக போதே
மது4ர க4ண்ட விருல 1பூஜேமி ஜேயுனு

அனுபல்லவி
4ன து3ர்மது3டை3 தா முனிகி3தே
காவேரி 2மந்தா3கினியெடு ப்3ரோசுனு (ம)

சரணம்
3ஸோமித3ம்ம ஸொக3ஸு-கா3ண்ட்3ர கோரிதே
4ஸோம யாஜி 5ஸ்வர்கா3ர்ஹுடௌ3னோ
6காம க்ரோது4டு3 தபம்பொ3னர்சிதே
காசி ரக்ஷிஞ்சுனோ த்யாக3ராஜ நுத (ம)


பொருள் - சுருக்கம்
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
மனதையடக்கத் திறமையின்றேல், இனிய மணி (மற்றும்) மலர்களின் பூசையென்ன செய்யும்?
மிக்கு தீய செருக்குடைத்து, தான் முழுகினால், காவேரியும் மந்தாகினியும் எவ்விதம் காக்கும்?
சோமயாசியின் மனையாள், காதலனை விழைந்தால், சோமயாசி வானுலகத்திற்குத் தகுதி பெறுவானோ?
இச்சை, சினம் இவை யுடையோன் தவமியற்றினால், பழுத்துக் காக்குமோ?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மனஸு/ நில்ப/ ஸ1க்தி/ லேக போதே/
மனதை/ யடக்க/ திறமை/ இன்றேல்/

மது4ர/ க4ண்ட/ விருல/ பூஜ/-ஏமி/ ஜேயுனு/
இனிய/ மணி/ மலர்களின்/ பூசை/ என்ன/ செய்யும்/


அனுபல்லவி
4ன/ து3ர்மது3டை3/ தா/ முனிகி3தே/
மிக்கு/ தீய செருக்குடைத்து/, தான்/ முழுகினால்/

காவேரி/ மந்தா3கினி/-எடு/ ப்3ரோசுனு/ (ம)
காவேரியும்/ மந்தாகினியும்/ எவ்விதம்/ காக்கும்/


சரணம்
ஸோமித3ம்ம/ ஸொக3ஸு-கா3ண்ட்3ர/ கோரிதே/
சோமயாஜியின் மனையாள்/ காதலனை/ விழைந்தால்/

ஸோம யாஜி/ ஸ்வர்க3/-அர்ஹுடு3/-ஔனோ/
சோமயாஜி/ வானுலகத்திற்கு/ தகுதி/ பெறுவானோ/

காம/ க்ரோது4டு3/ தபம்பு3/-ஒனர்சிதே/
இச்சை/ சினம் இவை யுடையோன்/ தவம்/ இயற்றினால்/

காசி/ ரக்ஷிஞ்சுனோ/ த்யாக3ராஜ/ நுத/ (ம)
பழுத்து/ காக்குமோ/தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பூஜேமி - பூஜயேமி

மேற்கோள்கள்
2 - மந்தா3கினி - கங்கையின் உப நதி - கங்கையின் மற்றொரு பெயர் - வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயம் 95-ன் படி, ராமன், சீதை மற்றும் லக்ஷ்மணனுடன் காட்டில் முதலில் தங்கிய சித்ரகூடத்திற்கருகில் ஓடும் ஒரு நதிக்கும் மந்தாகினி என்று பெயருண்டு. ஆனால் இவ்விடத்தில் கங்கையைக் குறிக்கும்.

3 - ஸோமித3ம்ம - சோமயாஜியின் மனைவி

4 - ஸோம யாஜி - சோமயாகமெனும் வேள்வி இயற்றுபவன் - சோம யாகத்தினைப் பற்றிய முழு விவரங்கள் யஜுர் வேதம் - 6-வது காண்டத்தில் காண்க
Top

விளக்கம்
5 - ஸ்வர்கா3ர்ஹுடௌ3னோ - இந்து மதத்தின் கோட்பாடுகளின்படி, மனைவியின்றி வேள்வி இயற்ற ஒருவனுக்கு அருகதையில்லை. எனவே, மனைவி கற்பு தவறினால் கணவன் இயற்றும் வேள்விகளுக்கு எந்தவித பயனும் கிட்டாது.

இந்த மேற்கோள் உடலுக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பினைக் குறிக்கும். மனம்-சொல்-செய்கை இவை மூன்றிலும் வேறுபாடின்றி இயற்றப்படும் செயல்கள் மட்டுமே முழுமை பெறும். இதனை த்ரி-கரண ஸு1த்3தி4 என்பர். அம்மாதிரியின்றி மனமோரிடமும் உடலோரிடமும் இருக்க இயற்றும் செயல்கள் வீணே. மனத்தையடக்கும் 'அத்3வைத சாத4னை' என்ற காஞ்சி மாமுனிவரின் சொற்பொழிவுகளை - (download) நோக்கவும்

'மனஸு ஸ்வாதீ4னமைன' எனும் ஸ1ங்கராப4ரண ராக கீர்த்தனையில் தியாகராஜர் 'மனது தன்வயப்பட்டவனுக்கு வேறு மந்திர தந்திரங்கள் ஏன்?' என்று கேட்கின்றார்.

6 - காம க்ரோது4டு3 - இச்சை, சினம் ஆகியவை - உட்பகை ஆறு

மணி - வழிபாட்டில் அடிக்கு மணி
முழுகு - புனித நீராடல்
காதலன் - கள்ளக் காதலன்
பழுத்து - தவத்தைக் குறிக்கும்
Top



Updated on 11 Dec 2008

No comments: