Tuesday, February 23, 2010

தியாகராஜ கிருதி - இந்து3கேமி - ராகம் வராளி - Indukemi - Raga Varali - Nauka Charitram

பல்லவி
இந்து3கேமி ஸேதுமம்ம
1க்ரு2ஷ்ணுடெ3ந்த மாடலாடெ3னம்ம

அனுபல்லவி
மகு3வலண்டே இந்த வாதா3 மாகு
மானமே ப்ராணமு காதா3 (இ)

சரணம்
சரணம் 1
கு3ஸ-கு3ஸலந்தே3மி வச்சு 2செலுல
உஸுருண்டே
ஊரு போவச்சு (இ)


சரணம் 2
வனிதல கனி3யெவரிகைன க்ரு2ஷ்ணா
வஞ்சனகா3 பல்க தகு3னா (இ)


சரணம் 3
ஹட2மு ஸேய வேள காது3 ஆத்ம
ஹத்ய கானி வேரெ லேது3 (இ)


சரணம் 4
நக்3னமுகா3 நில்வ வஸ1மா க்ரு2ஷ்ணா
நலுகு3ரிலோ நீகு யஸ1மா (இ)


சரணம் 5
நா மாடலு 4வினி மீரு வேக3
நனு க3ட்டு ஜேர்ச போனீரு (இ)


சரணம் 6
லலனல பாபமுலேமோ
ஈலாகு3 வ்ராதலுண்டெ3னேமோ (இ)


சரணம் 7
வெலகு தீஸின வலபு ராது3 கான
வெலது3லயிக நம்ம ராது3 (இ)


சரணம் 8
ராஜன்ய இடுயெஞ்ச வலது3 த்யாக3ராஜ
வினுத ப்ரேம கலது3 (இ)


பொருள் - சுருக்கம்
(இது கண்ணனுக்கும் ஆய்ச்சியருக்கும் ஓடத்தினில் நடக்கும் உரையாடல்)

  • ஆ - இதற்கென்ன செய்வோமம்மா? கண்ணன் எத்தகைய சொல் சொன்னானம்மா!
  • பெண்களென்றால் இத்தனை வாதா? நமக்கு மானமே உயிரன்றோ?

  • க - குசுகுசுப்பதனால் என்ன நேரும், பெண்டிரே? உயிரிருந்தால் ஊர் போகலாம்;

  • ஆ - வனிதையரைக் கண்டு யாருக்காகிலும், கண்ணா! வஞ்சனையாகப் பேசத்தகுமா?

  • க - அடம் பிடிக்கும் வேளையன்று; (இது) தற்கொலையன்றி வேறன்று;

  • ஆ - (நாங்கள்) அவணமாக நிற்கவியலுமா, கண்ணா? நால்வரில் உனக்கு (இது) புகழா?

  • க - என் சொற்களைக் கேட்டு, நீங்கள் விரைவில் என்னைக் கரை சேர்க்க மாட்டீர் போலும்;

  • ஆ - (இது) பெண்களின் பாவங்களோ என்னவோ? (அல்லது,) இவ்வாறு தலையெழுத்து இருந்ததோ என்னவோ?

  • க - விலைக்கு வாங்கினாலும், அன்பு வாராது; ஆகவே, பெண்களையினி நம்பலாகாது;

  • ஆ - இளவரசே! இவ்விதம் எண்ணலாகாது, தியாகராசனால் போற்றப் பெற்றோனே! (உன்னிடம் எமக்கு) காதலுளது.


ஆ - ஆய்ச்சியர்
க - கண்ணன்


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்து3கு/-ஏமி/ ஸேதுமு/-அம்ம/
இதற்கு/ என்ன/ செய்வோம்/ அம்மா/

க்ரு2ஷ்ணுடு3/-எந்த/ மாடலு/-ஆடெ3னு/-அம்ம/
கண்ணன்/ எத்தகைய/ சொல்/ சொன்னான்/ அம்மா/


அனுபல்லவி
மகு3வலு/-அண்டே/ இந்த/ வாதா3/ மாகு/
பெண்கள்/ என்றால்/ இத்தனை/ வாதா/ நமக்கு/

மானமே/ ப்ராணமு/ காதா3/ (இ)
மானமே/ உயிர்/ அன்றோ/


சரணம்
சரணம் 1
கு3ஸ-கு3ஸலு-அந்து3/-ஏமி/ வச்சு/ செலுல/
குசுகுசுப்பதனால்/ என்ன/ நேரும்/ பெண்டிரே/

உஸுரு/-உண்டே/ ஊரு/ போவச்சு/ (இ)
உயிர்/ இருந்தால்/ ஊர்/ போகலாம்/


சரணம் 2
வனிதல/ கனி/-எவரிகைன/ க்ரு2ஷ்ணா/
வனிதையரை/ கண்டு/ யாருக்காகிலும்/ கண்ணா/

வஞ்சனகா3/ பல்க/ தகு3னா/ (இ)
வஞ்சனையாக/ பேச/ தகுமா/


சரணம் 3
ஹட2மு/ ஸேய/ வேள/ காது3/
அடம்/ பிடிக்கும்/ வேளை/ அன்று/ (இது)

ஆத்ம ஹத்ய/ கானி/ வேரெ/ லேது3/ (இ)
தற்கொலை/ அன்றி/ வேறு/ அன்று/


சரணம் 4
நக்3னமுகா3/ நில்வ/ வஸ1மா/ க்ரு2ஷ்ணா/
(நாங்கள்) அவணமாக/ நிற்க/ இயலுமா/ கண்ணா/

நலுகு3ரிலோ/ நீகு/ யஸ1மா/ (இ)
நால்வரில்/ உனக்கு/ (இது) புகழா/


சரணம் 5
நா/ மாடலு/ வினி/ மீரு/ வேக3/
என்/ சொற்களை/ கேட்டு/ நீங்கள்/ விரைவில்/

நனு/ க3ட்டு/ ஜேர்ச/ போனீரு/ (இ)
என்னை/ கரை/ சேர்க்க/ மாட்டீர் போலும்/


சரணம் 6
லலனல/ பாபமுலோ/-ஏமோ/
(இது) பெண்களின்/ பாவங்களோ/ என்னவோ (அல்லது)/

ஈலாகு3/ வ்ராதலு/-உண்டெ3னோ/-ஏமோ/ (இ)
இவ்வாறு/ தலையெழுத்து/ இருந்ததோ/ என்னவோ/


சரணம் 7
வெலகு/ தீஸின/ வலபு/ ராது3/ கான/
விலைக்கு/ வாங்கினாலும்/ அன்பு/ வாராது/ ஆகவே/

வெலது3ல/-இக/ நம்ம ராது3/ (இ)
பெண்களை/ இனி/ நம்பலாகாது/


சரணம் 8
ராஜன்ய/ இடு/-எஞ்ச வலது3/ த்யாக3ராஜ/
இளவரசே/ இவ்விதம்/ எண்ணலாகாது/ தியாகராசனால்/

வினுத/ ப்ரேம/ கலது3/ (இ)
போற்றப் பெற்றோனே/ (உன்னிடம் எமக்கு) காதல்/ உளது/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - க்ரு2ஷ்ணுடெ3ந்த - க்ரு2ஷ்ணுடெ3ந்தோ : 'க்ரு2ஷ்ணுடெ3ந்த' பொருந்தும்.

சில புத்தகங்களில் அனுபல்லவி, முதல் சரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

2 - செலுல உஸுருண்டே - செலுவாரு உஸுருண்டே - இப்புடு உஸுருண்டே : 'செலுல உஸுருண்டே' என்பதே பொருந்தும்.

3 - எவரிகைன - எவரைன : 'எவரிகைன' என்பதே பொருந்தும்.

4 - வினி மீரு வேக3 - வினி மீரு வேக3 செலுலார.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் 'நௌக சரித்ரம்' எனப்படும் 'ஓடக் கதை'யின் அங்கமாகும்.

Top

பாடலின் பின்னணி - ஆய்ச்சியர்கள் கண்ணனை யமுனை நதிக்கரையில் சந்தித்து, எல்லோருமாக ஓடத்தில் பயணம் செய்கின்றனர். கண்ணனை சந்தித்த களிப்பில், ஆய்ச்சியர் கண்ணனை தமது சொத்தாக நினைத்து செருக்கடைகின்றனர். அவர்களுடைய செருக்கினை யடக்க, கண்ணன் புயலை உண்டாக்குகின்றான். புயலில் படகு தத்தளிக்கின்றது. படகினில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புகுகின்றது. கண்ணன் தனக்கு உடல் நலம் குன்றியதாகப் பாசாங்கு செய்கின்றான். அதனால் தாங்கள் எப்படி கரை சேர்வது, கண்ணனை எங்ஙனம் உயிர்காப்பது என பெருங்கவலை கொள்கின்றனர். அதற்கு, கண்ணன் படகின் ஓட்டையை அடைக்க அவர்கள் யாவருடைய ரவிக்கைகளையும் அவிழ்த்து ஓட்டையில் திணிக்கச்சொல்கின்றான். ஆய்ச்சியர் அங்ஙனமே செய்தும் ரவிக்கைகளெல்லாம் நீரில் அடித்துக்கொண்டு போய்விடுகின்றன. கண்ணன் அவர்களை தங்களுடைய சேலைகளையும் அவிழ்த்து ஓட்டையை அடைக்கும்படி கூறுகின்றான். இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த ஆய்ச்சியர், கண்ணனுடன் வாதாடுகின்றனர் - இந்தப் பாடலில்.

அவணம் - ஆடையின்றி

Top


Updated on 23 Feb 2010

No comments: