Tuesday, July 21, 2009

தியாகராஜ கிருதி - ஏ தாவுன நேர்சிதிவோ - ராகம் யது3குல காம்போ4ஜி - Etaavuna Nerchitivo - Raga Yadukula Kambhoji

பல்லவி
ஏ தாவுன நேர்சிதிவோ ராம
1எந்து3கிந்த கா3ஸி

அனுபல்லவி
ஸீதா லக்ஷ்மண ப4ரத ரிபுக்4
2வாதாத்மஜுலதோனாடே3 நாடகமே (தாவுன)

சரணம்
ஆலு வஜ்ரால ஸொம்முலடி3கி3ரோ
அனுஜுலு 3தல்லி-தண்ட்3ருலன்னமடி3கி3ரோ
ஸீ1லுலைன வர 44க்துலு பிலிசிரோ
சிர காலமு த்யாக3ராஜ நுத நீவே (தாவுன)


பொருள் - சுருக்கம்
இராமா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • பல காலம் நீ எவ்விடத்தில் கற்றாயோ? எதற்கித்தனை தொல்லை?

  • சீதை, இலக்குவன், பரதன், சத்துருக்கினன், வாயு மைந்தன் ஆகியோருடன் ஆடும் நாடகத்தினை எவ்விடத்தில் கற்றாயோ?

    • மனைவி வைர நகைகள் வேண்டினாளோ?

    • பின்னோர் மற்றும் தாய் தந்தையர் உணவு வேண்டினரோ?

    • நல்லொழுக்கமுடைய சிறந்த தொண்டர்கள் அழைத்தனரோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏ/ தாவுன/ நேர்சிதிவோ/ ராம/
எந்த/ இடத்தில்/ கற்றாயோ/ இராமா/

எந்து3கு/-இந்த/ கா3ஸி/
எதற்கு/ இத்தனை/ தொல்லை/


அனுபல்லவி
ஸீதா/ லக்ஷ்மண/ ப4ரத/ ரிபுக்4ன/
சீதை/ இலக்குவன்/ பரதன்/ சத்துருக்கினன்/

வாத/-ஆத்மஜுலதோனு/-ஆடே3/ நாடகமு/-(ஏ தாவுன)
வாயு/ மைந்தன் ஆகியோருடன்/ ஆடும்/ நாடகத்தினை/ எவ்விடத்தில்...


சரணம்
ஆலு/ வஜ்ரால/ ஸொம்முலு/-அடி3கி3ரோ/
மனைவி/ வைர/ நகைகள்/ வேண்டினாளோ/

அனுஜுலு/ தல்லி/-தண்ட்3ருலு/-அன்னமு/-அடி3கி3ரோ/
பின்னோர்/ (மற்றும்) தாய்/ தந்தையர்/ உணவு/ வேண்டினரோ/

ஸீ1லுலைன/ வர/ ப4க்துலு/ பிலிசிரோ/
நல்லொழுக்கமுடைய/ சிறந்த/ தொண்டர்கள்/ அழைத்தனரோ/

சிர/ காலமு/ த்யாக3ராஜ/ நுத/ நீவு/-(ஏ தாவுன)
பல/ காலம்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ நீ/ எவ்விடத்தில்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - வாதாத்மஜுலதோனாடே3 - வாதாத்மஜுலதோனாடு3.

3 - தல்லி-தண்ட்3ருலு - தலி-த3ண்ட்3ருலு : இரண்டு சொற்களுமே சரியாகும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - எந்து3கிந்த கா3ஸி - எதற்கித்தனை தொல்லை? தொல்லை யாருக்கு? இராமனுக்கா? அல்லது தியாகராஜருக்கா? கீழே கொடுக்கப்பட்டுள்ள, இந்த பாடலின் கருத்தின்படி, 'தொல்லை' இராமனுக்கு என்பது விளங்கும்.

4 - 4க்துலு பிலிசிரோ - தொண்டர்கள் அழைத்தனரோ? - தியாகராஜர் தனது 'முத்து மோமு' என்ற ஸூர்யகாந்தம் ராக பாடலில் கூறவதாவது -

"(இறைவனின் அவதாரம்) நிகழுமென நெடுநாள் உள்ளம் நெகிழ்ந்து, காத்து நிற்போர்முன் இராமனின் கொஞ்சுமுகம், எவ்விதம் தோன்றியதோ!"

தியாகராஜர், தனது 'ஏலாவதாரமெத்துகொண்டிவோ' என்ற 'முகாரி' ராக கிருதியில் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கின்றார் - ஆனால் பரவசமாக -

ஏன் அவதரித்தாயோ இராமனாக?
போர் புரிவதற்கோ? அயோத்தியை ஆள்வதற்கோ?
யோகியர் (உன்னைக்) காண்பதற்கென்றோ?
பிறவிப் பிணியாளிகளைக் காப்பதற்கென்றோ?
நூற்றுக் கணக்கான ராக இரத்தின மாலைகளைப் புனைந்த
தியாகராசனுக்கு வரமருள்வதற்கென்றோ?

எனவே, இந்த கிருதியில் அவர் கேட்கும் கேள்களின் கருத்தாவது -

"இராமா, நீ மனவிக்கு நகைகள் பெற்றுத்தரவோ, பின்னோர் மற்றும் தாய்தந்தையருக்கு உணவளிக்கவோ இந்த அவதாரம் எடுக்கவில்லை. நல்லொழுக்கமுடைய, சிறந்த தொண்டரின் அழைப்புக்கிணங்கி, அவர்களைப் பேணுதற்கு, அவதாரம் எடுத்தாய். அப்படியிருக்க, நீ என்னைக் காவாதிருப்பதினால், நீ அவதரித்தது, காப்பதாக நாடகமாடுவதற்கென்றே நான் கருதுகின்றேன்."

Top


Updated on 21 Jul 2009

No comments: