Thursday, March 5, 2009

தியாகராஜ கிருதி - ஸங்கீ3த ஸா1ஸ்த்ர - Sangeeta Sastra - Raga Mukhaari

பல்லவி
ஸங்கீ3த ஸா1ஸ்த்ர ஞானமு
1ஸாரூப்ய ஸௌக்2யத3மே மனஸா

அனுபல்லவி
2ஸ்1ரு2ங்கா3ர ரஸாத்3யகி2 ஸார
பூரித ராம கதா2னந்தா3ப்3தி4 யுத (ஸ)

சரணம்
3ப்ரேம ப4க்தி ஸு-ஜன வாத்ஸல்யமு
ஸ்ரீமத்3-ரமா வர கடாக்ஷமு
4நேம நிஷ்ட2 5யஸோ14னமொஸங்கு3னே
6நேர்பு கல்கு3 த்யாக3ராஜு நேர்சின (ஸ)


பொருள் - சுருக்கம்
  • தியாகராசன் கற்றறிந்த,

  • சிங்கார ரசம் முதலான அனைத்து சாரங்களும் நிறைந்த,

  • இராமனின் கதையெனும் ஆனந்தக் கடலுடன் கூடிய,

  • சங்கீத சாத்திரத்தின் அறிவு சாரூப்பிய சௌக்கியத்தினை யருளுமே.


  • காதலுடன் கூடிய (இறைப்) பற்று,

  • நல்லோரின் பரிவு,

  • திருமகள் மணாளனின் கருணை,

  • நியமம், நிட்டை, புகழ் ஆகிய செல்வங்களை வழங்குமே;

  • திறமைகளுண்டாகும்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸங்கீ3த/ ஸா1ஸ்த்ர/ ஞானமு/
சங்கீத/ சாத்திரத்தின்/ அறிவு/

ஸாரூப்ய/ ஸௌக்2யத3மே/ மனஸா/
சாரூப்பிய சௌக்கியத்தினை யருளுமே/ மனமே/


அனுபல்லவி
ஸ்1ரு2ங்கா3ர/ ரஸ/-ஆதி3/-அகி2ல/ ஸார/
சிங்கார/ ரசம்/ முதலான/ அனைத்து/ சாரங்களும்/

பூரித/ ராம/ கதா2/-ஆனந்த3/-அப்3தி4/ யுத/ (ஸ)
நிறை/ இராமனின்/ கதையெனும்/ ஆனந்த/ கடலுடன்/ கூடிய/ சங்கீத...


சரணம்
ப்ரேம/ ப4க்தி/ ஸு-ஜன/ வாத்ஸல்யமு/
காதலுடன் கூடிய/ (இறைப்) பற்று/ நல்லோரின்/ பரிவு/

ஸ்ரீமத்3-ரமா/ வர/ கடாக்ஷமு/
திருமகள்/ மணாளனின்/ கருணை/,

நேம/ நிஷ்ட2/ யஸோ1/ த4னமு/-ஒஸங்கு3னே/
நியமம்/ நிட்டை/ புகழ் ஆகிய/ செல்வங்களை/ வழங்குமே/

நேர்பு/ கல்கு3/ த்யாக3ராஜு/ நேர்சின/ (ஸ)
திறமைகள்/ உண்டாகும்/ தியாகராசன்/ கற்றறிந்த/ சங்கீத...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - ஸாரூப்ய - சாரூப்பியம் - கடவுளதுருப் பெற்றிருத்தல் - திருமந்திரச் செய்யுள் காண்க -

தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்
தங்குஞ் சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா
அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர்
இங்கிவ ராக விழிவற்ற யோகமே (திருமந்திரம் - 1510)

"யானைகளின் அரசனாகிய கஜேந்திரன், பரம்பொருளாகிய இறைவனின் கரங்களினால் நேரடியாக தீண்டப்பட்டதனால், அவன் உடனே, அறிவீனத்தினின்றும், உலகத்தளையினின்றும் விடுபட்டான். அங்ஙனம் அவன், சாரூப்பிய முக்தி எனப்படும், இறைவனின் அஃதே உடலுறுப்புகளும், பீதாம்பரமும், நான்கு கரங்களும் அடைந்தான்." (ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்) பாகவதபுராணம், புத்தகம் 8, அத்தியாயம் 4 (செய்யுள் 6).

முக்தியின் நான்கு நிலைகளாவன - சாலோக்கியம் - இறைவனின் அதே உலகத்தினை அடைதல், சாமீப்பியம் - இறைவனின் அண்மை பெறுதல், சாரூப்பியம் - இறைவனின் உருவம் அடைதல், சாயுச்சியம் - இறைவனுடன் ஒன்றுதல். ஆதி சங்கரர் இயற்றிய சிவானந்த லஹரி தோத்திரம், செய்யுள் 28 நோக்கவும்.

வைணவர்கள் இறைவனுடன் ஒன்றும் நிலையாகிய சாயுச்சியத்தினை விரும்பவதில்லை, ஏனெனில், அவர்கள் இறைவனின் புகழ் பாடுதலையும், இறைவனுக்கு தொண்டு செய்வதையுமே மனிதப் பிறவியின் மிக்குயர்ந்த பயனாகக் கருதுகின்றனர். இது குறித்து ஸ்வாமி கிருஷ்ணானந்தாவின் விளக்கம் நோக்கவும்.

Top

2 - ஸ்1ரு2ங்கா3ர ரஸ - சிங்கார ரசம் - நவரசங்களிலொன்று - நவரசங்களாவன - சிங்காரம், வீரம், வெறுப்பு, சினம், நகைச்சுவை, பயங்கரம், கருணை-இரக்கம், வியப்பு, சாந்தம்.

3 - ப்ரேம ப4க்தி - காதலுடன் கூடிய இறைப்பற்று - நாரத பக்தி சூத்திரங்களில் இது குறித்து முழு விவரங்கள் அறியலாம்.

4 - நேம நிஷ்ட2 - நியமம், நிட்டை - அட்டயோகத்தின் அங்கங்கள் - பதஞ்சலி யோக சூத்திரங்கள் நோக்கவும்.

Top

விளக்கம்
5 - யஸோ14னமு - புகழெனும் செல்வம். இங்கு 'செல்வம்' என்று தனியாகப் பொருள் கொள்வது தவறாகும். இறைவனுடைய உருவம் அடைதலெனும் சாரூப்பிய நிலையினை விழைவோர், செல்வம் விழையார். அப்படி செல்வம் தானாகவே கிடைத்தாலும், அதனையோர் இடைஞ்சலாகவே கருதுவர்.

6 - நேர்பு கல்கு3 - திறமைகளுண்டாகும் - சில புத்தகங்களில் இதனை 'திறமையுடைய' தியாகராஜன் கற்றறிந்த சங்கீத ஞானம் - என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'திறமையுடைய' மற்றும் 'கற்றறிந்த' என்ற சொற்கள் ஒன்றோடொன்று இழையா. எனவே அப்படிப்பட்ட பொருள் கொள்ளல் தவறென எனது சிற்றறிவிற்குத் தோன்றுகின்றது.

பல்லவி, மற்றும் சரணங்களில் கொடுக்கப்பட்டுள்ள, 'சங்கீத ஞானம்' என்ற சொற்கள், அனுபல்லவியில் கொடுக்கப்பட்டுள்ள, 'ராமனின் கதையெனும் ஆனந்தக் கடலுடன் கூடிய' சங்கீத ஞானம் என்று சேர்த்துத்தான் பொருள் கொள்ளவேண்டும். வெற்று இசையறிவோ, பயிற்சியோ, சாரூப்பியத்தினை அருளும் வல்லமை பெற்றதல்ல. உலகில் பெயரும், செல்வமும் பெறலாம், ஆனால் அவை நன்னெறி உய்விக்கா. தியாகராஜரின் 'சங்கீ3த ஞானமு ப4க்தி வினா ஸன்மார்க3மு கலதே3' (பக்தியற்ற சங்கீத ஞானம் நன்னெறி உய்விக்காது) என்ற கிருதியினையும் நோக்கவும்.

Top


Updated on 06 Mar 2009

No comments: