Saturday, March 7, 2009

தியாகராஜ கிருதி - க்ஷீணமை - ராகம் முகா2ரி - Ksheenamai - Raga Mukhaari

பல்லவி
1க்ஷீணமை திருக3 ஜன்மிஞ்சே
2ஸித்3தி4 மானுரா ஓ மனஸா

அனுபல்லவி
3கீ3ர்வாண 4நாடகாலங்கார வேத3
புராண யக்3ஞ ஜப தபாது352லமுலு (க்ஷீண)

சரணம்
6எதி3 ஜேஸின ஜக3ன்னாது2டு3 ஸி1ரமுன
ஹ்ரு23யமுன
7வஹிஞ்சி
பதி3லமைன ஸத்பத3முனொஸங்கே3
பா3ட த்யாக3ராஜ வினுதுனி ப4ஜனரா (க்ஷீண)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
  • தளர்ந்து, மீண்டும் பிறப்பிக்கும் சித்திகளைத் தவிர்ப்பாய்,

  • இயல், இசை, நாடகம், அணியிலக்கணம், மறைகள், புராணம், வேள்வி, செபம், தவம் ஆகியவற்றின் பயன்கள் தளர்ந்து, மீண்டும் பிறப்பிக்கும் சித்திகளைத் தவிர்ப்பாய், ஓ மனமே!

  • நிலையான நற்பதமளிக்கும் நெறி தியாகராசனால் போற்றப் பெற்றோனின் பஜனையடா!

  • உலக நாயகன் என்செயினும், தலையிலும், உள்ளத்திலும் வகித்து, தளர்ந்து, மீண்டும் பிறப்பிக்கும் சித்திகளைத் தவிர்ப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
க்ஷீணமை/ திருக3/ ஜன்மிஞ்சே/
தளர்ந்து/ மீண்டும்/ பிறப்பிக்கும்/

ஸித்3தி4/ மானுரா/ ஓ மனஸா/
சித்திகளை/ தவிர்ப்பாய்/ ஓ மனமே/


அனுபல்லவி
கீ3ர்/-வாண/ நாடக/-அலங்கார/ வேத3/
இயல்/ இசை/ நாடகம்/ அணியிலக்கணம்/ மறைகள்/

புராண/ யக்3ஞ/ ஜப/ தப/-ஆது3ல/ ப2லமுலு/ (க்ஷீண)
புராணம்/ வேள்வி/ செபம்/ தவம்/ ஆகியவற்றின்/ பயன்கள்/ தளர்ந்து...


சரணம்
எதி3/ ஜேஸின/ ஜக3ந்/-நாது2டு3/ ஸி1ரமுன/
என்ன/ செயினும்/ உலக/ நாயகன்/ தலையிலும்/

ஹ்ரு23யமுன/ வஹிஞ்சி/
உள்ளத்திலும்/ வகித்து/

பதி3லமைன/ ஸத்பத3முனு/-ஒஸங்கே3/
நிலையான/ நற்பதம்/ அளிக்கும்/

பா3ட/ த்யாக3ராஜ/ வினுதுனி/ ப4ஜனரா/ (க்ஷீண)
நெறி/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனின்/ பஜனையடா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - ஸித்3தி4 - சித்திகள் - அணிமா முதலான எண்சித்திகள் - பாகவத புராணம், புத்தகம் 11, அத்தியாயம் 15 உத்தவ கீதையினை நோக்கவும்.

பதஞ்சலி யோக சூத்திரங்கள் - அத்தியாயம் 3 - சக்திகள் - நோக்கவும்.

2 - ஸித்3தி4 மானுரா - மேற்கூறிய பாகவதபுராணத்தில், கண்ணன் உத்தவனுக்குக் கூறவதாவது -

"(மேற்கூறிய) சித்திகள் யாவும் என்னை, யோக முறையில், மனத்தினையொருமித்து, வழிபடும் முனிவனிடம் காத்து நிற்கின்றன."

"இந்த சித்தகள் யாவுமே, என்னையடையும் தலை சிறந்த நெறியினுக்குத் தடங்கல்களென்றும், அங்ஙனம், அவற்றினை விழைவோனுக்கு, அவை (சித்திகள்) கால விரயமும் ஆகும் என்று தொண்டு முறைகளைக் கற்றறிந்த வல்லுநர்கள் கூறுவர்." (ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

4 - அலங்கார - அணியிலக்கணம் - சுருக்கம்

Top

விளக்கம்
1 - க்ஷீணமை - தளர்ந்து - பல்லவியில், இதற்கு 'உடல் தளர்ந்து' அல்லது 'சித்திகள் தளர்ந்து' என்று பொருள் கொள்ளப்படும். அனுபல்லவியில், 'பயன்கள்' என்ற சொல்லினை பல்லவியில் இணைக்கும்போது, 'இயல், இசை, நாடகம்.....ஆகியவற்றின் பயன்கள் தளர்ந்து' என்று பொருள் கொள்ளப்படும். சரணத்தில், 'வகித்து' என்ற சொல்லினை பல்லவியுடன் இணைக்கும்போது, 'தளர்ந்து' (உடல் அல்லது சித்திகள்) என்று பொருள் கொள்ளப்படும்.

3 - கீ3ர்வாண - எல்லா புத்தகங்களிலும் 'கீ3ர்' - bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், இந்த சொல், இதற்கு முந்தைய தாள ஆவர்த்தியினைச் சேர்ந்தது என சங்கீதம் அறிந்தவர் கூறுகின்றனர்.

சில புத்தகங்களில் இதற்கு 'சம்ஸ்கிருதம்' என்றும் மற்றவற்றில் 'இலக்கியம்', 'கவிதை' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

'கீ3ர்வாண' என்ற சொல்லுக்குப் பொதுவாக 'வானோர்' என்று பொருள். அந்த பொருள் இங்கு பொருந்தாது. 'கீ3ர்' என்ற சொல்லுக்கு 'சொல்', 'பேச்சு' என்று பொருள். 'வாண' என்ற சொல்லுக்கு 'இசை' என்று பொருளுண்டு. இதற்கடுத்து வரும் 'நாடகம்' என்ற சொல்லினை இணைக்கும்போது இதற்கு 'இயல்', 'இசை', 'நாடகம்' (முத்தமிழ்) என்று பொருள் கொள்ளலாம்.

5 - 2லமுலு - பயன்கள் - சில புத்தகங்களில் இதற்கு (அனுபல்லவியில் கூறிய) 'இயல், இசை, நாடகம், அணியிலக்கணம் ....ஆகியவற்றின் பயன்கள் தளர்ந்து மீண்டும் பிறப்பிக்கின்றன' என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவற்றின் பயன்கள் தானாகத் தளர்வதில்லை; சித்திகள்தான் இவற்றின் பயன்களைத் தளர்வுறச் செய்வதாகப் பொருள் கொள்ளவேண்டும்.

Top

6 - எதி3 ஜேஸின ஜக3ன்னாது2டு3 ஸி1ரமுன ஹ்ரு23யமுன வஹிஞ்சி - உலக நாயகன் என்செயினும், தலையிலும், உள்ளத்திலும் வகித்து -

மேற்கூறிய, பாகவத புராண மேற்கோளின்படியும், திருமூலரின் திருமந்திரத்தின்படியும், இந்த சித்திகளுக்கு ஆசைப்பட்டால் இறைவனை அடையும் நோக்கம் நிறைவேறாது. எனவே, தியாகராஜர் தன்னுடைய மனத்திற்கு - அதன் மூலமாக உலகோருக்கு - உரைப்பது 'இந்த சித்திகளைத் தவிர்த்து, நடப்பது நடக்கட்டும் என்று இறைவனின் நினைவினில் இரு' என.

திருமூலரின் திருமந்திரம், செய்யுட்கள் 631 மற்றும் 669 - 672 நோக்குக.

தியாகராஜரின் 'க்ரு2பாலவால' என்ற 'நாதவராங்கிணி' கீர்த்தனையின் குறிப்புகளில் இதுபற்றி மேலும் விளக்கங்கள் காணவும்.

7 - வஹிஞ்சி - வகித்து - இது 'தலையில்' மற்றும் 'உள்ளத்தில்' - இரண்டுக்குமே பொதுவான சொல்.

Top


Updated on 07 Mar 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
க்ஷீணமை என்பதற்கு உடல் தளர்ந்து அல்லது சித்திகள் தளர்ந்து என்றும் பொருள் கொள்ளலாம் என்று கூறியுள்ளீர்.
Refrain from the (eight-fold) siddhis which, having withered, cause one to be born again.
என்று ஆங்கிலத்தில் கூறிய பதவுரை மிகத்தெளிவாக உள்ளது.
 தமிழில், ”சக்தி குறைந்து (மனிதர்களை) மறு பிறவியடையச் செய்யும் சித்திகளைக் கைவிடடா” என்பது தெளிவாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
 க்ஷீணமை என்பது சித்திகளைக் குறிக்கின்றது என்பது தான் சரியெனத் தோன்றுகிறது.
 சித்திகள், இயல், இசை, நாடகம், அணியிலக்கணம், மறைகள், புராணங்கள், வேள்வி, செபம், தவம் ஆகியவற்றின் பயன்களை தளர்வுறச்செய்து மீண்டும் பிறப்பிக்கும் என்று பொருள் கொடுத்துள்ளீர்.
தளர்வுறச் செய்து என்பதற்கு ‘க்ஷீணிஞ்சி’  ’க்ஷீணமு சேஸி’ அல்லது ’க்ஷீணபரசி’ என்றல்லவா இருக்கவேண்டும்? க்ஷீணமை என்றால் தளர்வுற்று என்றல்லவா பொருள் தருகிறது. அனுபல்லவியில் கூறியவற்றோடு க்ஷீணமை என்பது பொருந்தவில்லையே.
 
சரணத்திலுள்ள வஹிஞ்சி (வகித்து) என்பதைப் பல்லவியோடு இணைத்துப் பொருள் கொள்ளலாம் எனக் கூறியுள்ளீர். பஜனை தான் எல்லாவற்றினும் சிறந்தது என்ற சரணம் தனித்து நின்று பொருள் தருகிறது. இதைப் பல்லவியோடு இணக்கவேண்டியதில்லை என்று நான் கருதுகிறேன்,
 
இப்பாடலில் சித்திகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தியாகராஜர் கூறுகிறாரா.
 
வணக்கம்
கோவிந்தசாமி
 

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

சரணத்தின், மூன்றாவது, நான்காவது அடிகள் தனித்து நிற்கின்றன. இவற்றினை, இரண்டாவது அடியின் 'வஹிஞ்சி' என்ற சொல்லுடன் இணைக்க இயலாது. எனவே 'வஹிஞ்சி' என்ற சொல் பல்லவியுடன் இணைக்கப்படும்.

அனுபல்லவியின் சொல் 'ப2லமுலு' என்ற சொல்லுக்கு நான் விளக்கம் கூறியுள்ளேன். அதன்படி, கற்ற கல்வியின் (இயல் இசை நாடகம், அணியிலக்கணம் ஆகியவை) பயன்கள், சித்திகளினால் தளர்வுறுகின்றன. அதனால் 'க்ஷீணமை' என்ற சொல் 'தளர்ந்து' என்று பொருள் கொடுத்தாலும், அதனுடைய காரணம் என்ன என்று விளக்கியுள்ளேன்.

சித்திகளைக் 'கைவிடு' என்பதைவிட 'தவிர்ப்பாய்' என்பது மிக்கு பொருந்தும். ஏனெனில், 'கைவிடுதல்' என்பது அடைந்ததற்குப் பிற்பட்ட நிலை. அவற்றினை 'விழையாதே' என்று தியாகராஜர் கூறுகின்றார்.

வணக்கம்
கோவிந்தன்.