பல்லவி
1க்ரு2பாலவால கலா த4ர ஸே1க2ர
க்ரு2தாபி4வந்த3ன ஸ்ரீ ராம
அனுபல்லவி
ந்ரு2போத்தம ஸ1ரணாக3த ஜனாக4
நிவாரணாப்3ஜ ஹிதான்வய ஸ1ஸா1ங்க (க்ரு2)
சரணம்
2அபவர்க3 ப2ல 3காமமுலனு ஜூசி 4அட்3ட3மை
5அணிமாதி3 ஸித்3து4ல மோஸ பு3ச்செத3ரய்ய
ஸு-பவித்ர ரூப ஸதா3 கருண ஜூடு3
ஸுர பாலக த்யாக3ராஜ நுத (க்ரு2)
பொருள் - சுருக்கம்
கருணைக் கடலே! கலையணி சேகரனால் வந்திக்கப்பெற்ற இராமா! மன்னரிலுத்தமனே! சரணடைந்தோரின் பாவங்களைக் களைவோனே! பரிதி குலத்தின் மதியே! தூய உருவோனே! வானோரைப் பேணுவோனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
முத்திப் பயனின் இச்சைகளைக் கண்டு, குறுக்கிடும் அணிமாதி சித்திகளினால் வஞ்சிக்கப் பெற்றனரய்யா;
எவ்வமயமும் கருணை காட்டுவாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
க்ரு2பா/-ஆலவால/ கலா/ த4ர/ ஸே1க2ர/
கருணை/ கடலே/ கலை/ அணி/ சேகரனால்/
க்ரு2த-அபி4வந்த3ன/ ஸ்ரீ ராம/
வந்திக்கப்பெற்ற/ ஸ்ரீ ராமா/
அனுபல்லவி
ந்ரு2ப/-உத்தம/ ஸ1ரண/-ஆக3த ஜன/-அக4/
மன்னரில்/ உத்தமனே/ சரண்/ அடைந்தோரின்/ பாவங்களை/
நிவாரண/-அப்3ஜ/ ஹித/-அன்வய/ ஸ1ஸ1-அங்க/ (க்ரு2)
களைவோனே/ தாமரைக்கு/ இனியவன் (பரிதி)/ குலத்தின்/ மதியே/
சரணம்
அபவர்க3/ ப2ல/ காமமுலனு/ ஜூசி/ அட்3ட3மை/
முத்தி/ பயனின்/ இச்சைகளை/ கண்டு/ குறுக்கிடும்/
அணிமா-ஆதி3/ ஸித்3து4ல/ மோஸ பு3ச்செத3ரு/-அய்ய/
அணிமாதி/ சித்திகளினால்/ வஞ்சிக்கப் பெற்றனர்/ அய்யா/
ஸு-பவித்ர/ ரூப/ ஸதா3/ கருண/ ஜூடு3/
தூய/ உருவோனே/ எவ்வமயமும்/ கருணை/ காட்டுவாய்/
ஸுர/ பாலக/ த்யாக3ராஜ/ நுத/ (க்ரு2)
வானோரை/ பேணுவோனே/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - க்ரு2பாலவால - ந்ரு2பாலவால : 'ந்ரு2பாலவால' சரியன்று.
3 - காமமுலனு - காமுலனு.
Top
மேற்கோள்கள்
5 - அணிமாதி3 ஸித்3து4ல - அணிமாதி சித்திகள் எண்வகையெனப்படும். அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் - (பிங்கள நிகண்டு) திருமந்திரம் (668) நோக்குக.
பாகவத புராணத்தில் (11-வது புத்தகம், 15-வது அத்தியாயம் - உத்தவ கீதை) எட்டு பிரதான சித்திகளுடன், பத்து சில்லரை சித்திகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பதஞ்சலி யோக சூத்திரங்கள், 3-வது அத்தியாயம் (சக்திகள்) நோக்கவும்.
Top
விளக்கம்
2 - அபவர்க3 ப2ல - முக்திப் பயன்கள் - 'அபவர்க3' என்ற சொல்லுக்கு பொதுவாக முக்தி என்று பொருளாகும். அனைத்து இச்சைகளையும் துறந்து, தன்னை உணர்தலே, முக்தி எனப்படும்
(விவேகானந்தரின் சொற்பொழிவுகள், Vol 8 - The Essence of Religion - தன்னையுணர்தல் - ஆடுகளினால் வளர்க்கப்பட்ட, 'மே, மே' எனும் சிங்கத்தின் கதையினை நோக்கவும்.
பிறவிக்கடலில் மறுபடியும் பிறவாத பயனைத்தவிர வேறு ஏது பயன்களும் முக்தியுற்றவர்களுக்குக் கிடையாது. இங்கு தியாகராஜர் 'பயன்கள்' (ப2ல) என குறிப்பிடுவது அணிமா சித்திகளை.
Top
திருமூலரின் திருமந்திரத்தில் முக்தியின் ஐந்து நிலைகள் கூறப்பட்டுள்ளன (2474-2477,2864). ஜீவ முக்தி - அதீத, பர முக்தி - உபஸாந்த, சிவ முக்தி - ஆனந்த, துரிய - சொரூப, நிருவாணம் - அரிய துரியாதீத.
மேலும், அட்டாங்க யோகமுறைகளினால் சித்திகள் அடையப்பெறுகின்றன (669); சித்திகள், சக்தியின் அருளினால் முக்திக்கு வழிகோலுகின்றன (670); சித்திகளுக்கு மேற்பட்டதுதான் முக்தி நிலை (671); சித்திகளினால் காமிய உலகம் அடையப்பெறுகின்றது (672); சமாதி நிலை சித்திகளுக்கு மேற்பட்டது (631); சித்திகளை விரும்பாத யோகி சமாதி நிலையை அடைகின்றான் அவன் கடவுளுடன் ஒன்றுகின்றான் (Dr. நடராஜன் அவர்களின்ஆங்கல மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)
பதஞ்லி யோக சூத்திரம், சமாதி இரண்டு வகைப்படும் எனக் கூறுகின்றது - ஸ-பீஜ சமாதி (I.46), நிர்-பீஜ சமாதி (I.51).
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சமாதி ஆறு வகைப்பட்டதென்கிறார் - ஸ-விகல்ப, நிர்-விகல்ப, சேதன, ஜட, உன்மன, ஸ்தித ('The Gospel of Sri Ramakrishna pp 639).
ஸ்வாமி சின்மயானந்தா சமாதி மூன்று வகைப்பட்டதென்கிறார் - ஸ-விகல்ப, நிர்-விகல்ப, ஸஹஜ.
Top
4 - அட்3ட3மை - குறுக்கிடும் -
கண்ணன் உத்தவனுக்குக் கூறுவது (பாகவத புராணம் - 11-வது புத்தகம், அத்தியாயம் 15) -
"மேற்கூறிய சித்திகள் யாவும், (முன் கூறப்பட்ட) யோகமுறையினில் என்னை வழிபடும் முனிவனிடம் காத்து நிற்கின்றன." (31)
"ஆயினும், தொண்டு முறைகளைக் கற்றறிந்தோர் கூறுவது யாதெனில் (இங்கு கூறிய) 'யோக முறையினால் கிடைக்கும் தெய்வீக சக்திகள் (அணிமா முதலானவை) யாவுமே என்னை அடைவதற்காக யோகத்தினைப் பழகுவோனுக்கு உண்மையில் தடங்கல்களும், கால விரயமும் ஆகும்.' (33)
சித்திகளைத் துறந்தபின்பே முக்தி கிட்டும் - பதஞ்சலி யோக சூத்திரம் (I.19).
Top
2 - அபவர்க3 ப2ல காமமுலனு ஜூசி அட்3ட3மை அணிமாதி3 ஸித்3து4ல மோஸ பு3ச்செத3ரய்ய - மேற்கூறிய யாவற்றினையும் நோக்குகையில், முக்தியின் உச்சமான, இறையுடன் ஒன்றும், நிருவாணம் அல்லது நிர்விகல்ப சமாதி நிலையை அடைதல், சித்திகளையும் துறந்தபின்பே முடியும். எனவே, இந்த பாடலில் 'அபவர்க3' என்று தியாகராஜர் குறிப்பிடுவது நிருவாணத்தினையல்ல - அந்நெறி செல்வோரையும் அவர்கள் எதிர்கொள்ளும் நிலைகளைப் பற்றியுமே.
அதன்படி, சரணத்தின் இந்த சொற்களினால் அவர் கூறுவது யாதெனில் - அணிமாதி சித்திகள் (ப2ல) முக்தி நிலை (அபவர்க3) பெற விரும்புவோனின் வழியில் தடங்கலாகவோ, ஆசையூட்டுவனவாகவோ நிற்கின்றன (அட்3ட3மை). சித்திகளை விரும்புவதனால் (காமமுல ஜூசி) முக்தி (நிருவாணம் அல்லது நிர்விகல்ப ஸமாதி) அடையமுடியாமல் வஞ்சிக்கப் பெறுகின்றனர் (மோஸ பு3ச்செத3ரு). நான் அவ்விதம் வஞ்சிக்கப்படாமல் எவ்வமயமும் (ஸதா3) கருணை கொள்வாய் (கருண ஜூடு3)
கலை - பிறை
கலையணி சேகரன் - சிவன்
Top
Updated on 31 Jan 2009
No comments:
Post a Comment