Thursday, January 14, 2010

தியாகராஜ கிருதி - நீ பத3 பங்கஜ - ராகம் பே3க3ட3 - Nee Pada Pankaja - Raga Begada

பல்லவி
நீ 1பத3 பங்கஜமுலனு நே நெர நம்மினானு

அனுபல்லவி
2பூ4 பாலுல க3ர்வம்பு3லணசு கொரகா
பரமேஸ்1வரு சாபமு த்3ருஞ்சின (நீ)

சரணம்
சரணம் 1
கோபமுதோ முனு தாபஸியிச்சின
ஸா1பமுன அஹல்ய அனு-தி3னமு
சாப ராதி தனு 3தாபமோர்வ
லேனாபெனு
கனி பரிதாபமு தீர்சின (நீ)


சரணம் 2
வன-ருஹ துலித நயன ஸங்க்ரந்த3
தனயுனி பா34 ஸஹிம்பனி
4விரோசன ஸுது மதி கலிகி3ன ப4மெக3யக3
4னதம து3ந்து3பி4 5பெனு தல தன்னின (நீ)


சரணம் 3
ஜ்யா-வர நுத ஜ்யா-ஜா வர
6பி3டௌ3ஜாவரஜாஸ்1ரித த்யாக3ராஜ
7ஜ்யா-வராஜ ருத்3ராவனீ ஸுர
பா4வனீய முனி ஜீவனானிஸ1மு (நீ)


பொருள் - சுருக்கம்
கமலம் நிகர் கண்ணா! சிறந்த வில்லாளிகள் போற்றும் புவிமகள் கேள்வா! இந்திரன் பின்தோன்றலே! தியாகராசனின் புகலே! பூதேவி மணாளன், பிரமன், உருத்திரன் மற்றும் அந்தணர்கள் மதிக்கும் முனிவர்களின் வாழ்வே!
  • உனது திருவடித்தாமரைகளினை நான் எவ்வமயமும் மிக்கு நம்பியுள்ளேன்;

    • புவியாள்வோரின் செருக்கினை யடக்குவதற்காக, அந்த பரமேசனின் வில்லினை முறித்த...
    • சினத்துடன் முன்பு தவசியிட்ட சாபத்தினால், அகலிகை, நாளும் கருங்கல்லுடலின் வெம்மை தாள இயலாத அவளைக் கண்டு, பரிதாபத்தினைத் தீர்த்த...
    • இந்திரன் மகனின் தொல்லைகளைப் பொறுக்காத, பரிதி மைந்தனின் மனதில் எழுந்த அச்சம் பறந்தோட, கனத்த, துந்துபியின் பெருந் தலையினை உதைத்தெறிந்த...

  • உனது திருவடித்தாமரைகளினை நான் எவ்வமயமும் மிக்கு நம்பியுள்ளேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ பத3/ பங்கஜமுலனு/ நே/ நெர/ நம்மினானு/
உனது/ திருவடி/ தாமரைகளினை/ நான்/ மிக்கு/ நம்பியுள்ளேன்/


அனுபல்லவி
பூ4/ பாலுல/ க3ர்வம்பு3ல/-அணசு கொரகு/-ஆ/
புவி/ ஆள்வோரின்/ செருக்கினை/ அடக்குவதற்காக/ அந்த/

பரமேஸ்1வரு/ சாபமு/ த்3ருஞ்சின/ (நீ)
பரமேசனின்/ வில்லினை/ முறித்த/ உனது...


சரணம்
சரணம் 1
கோபமுதோ/ முனு/ தாபஸி/-இச்சின/
சினத்துடன்/ முன்பு/ தவசி/ இட்ட/

ஸா1பமுன/ அஹல்ய/ அனு-தி3னமு/
சாபத்தினால்/ அகலிகை/ நாளும்/

சாப ராதி/ தனு/ தாபமு/-ஓர்வ/
கருங்கல்/ உடலின்/ வெம்மை/ தாள/

லேனி/-ஆபெனு/ கனி/ பரிதாபமு/ தீர்சின/ (நீ)
இயலாத/ அவளை/ கண்டு/ பரிதாபத்தினை/ தீர்த்த/ உனது...


சரணம் 2
வன-ருஹ/ துலித/ நயன/ ஸங்க்ரந்த3ன/
கமலம்/ நிகர்/ கண்ணா/ இந்திரன்/

தனயுனி/ பா34/ ஸஹிம்பனி/
மகனின்/ தொல்லைகளை/ பொறுக்காத/

விரோசன/ ஸுது/ மதி/ கலிகி3ன/ ப4யமு/-எக3யக3/
பரிதி/ மைந்தனின்/ மனதில்/ எழுந்த/ அச்சம்/ பறந்தோட/

4னதம/ து3ந்து3பி4/ பெனு/ தல/ தன்னின/ (நீ)
கனத்து/ துந்துபியின்/ பெருந்/ தலையினை/உதைத்தெறிந்த/ உனது...


சரணம் 3
ஜ்யா/-வர/ நுத/ ஜ்யா-ஜா/ வர/
வில்லாளிகளில்/ சிறந்தோர்/ போற்றும்/ புவிமகள்/ கேள்வா/

பி3டௌ3ஜ/-அவரஜ/-ஆஸ்1ரித/ த்யாக3ராஜ/
இந்திரன்/ பின்தோன்றலே/ புகலே/ தியாகராசனின்/

ஜ்யா/-வர/-அஜ/ ருத்3ர/-அவனீ ஸுர/
பூதேவி/ மணாளன்/ பிரமன்/ உருத்திரன்/ (மற்றும்) அந்தணர்கள்/

பா4வனீய/ முனி/ ஜீவன/-அனிஸ1மு/ (நீ)
மதிக்கும்/ முனிவர்களின்/ வாழ்வே/ எவ்வமயமும்/ உனது...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பத3 பங்கஜமுலனு - பத3 பங்கஜமுல.

3 - தாபமோர்வ லேனாபெனு - தாபமோர்வனியாபெனு.

Top

மேற்கோள்கள்
2 - பூ4 பாலுல க3ர்வம்பு3லணச - புவியாள்வோரின் செருக்கினை யடக்க - விசுவாமித்திரர், ஜனக மன்னன் அவைக்கு இராமனையும் இலக்குவனையும் அழைத்துக்கொண்டு வந்து, ஜனகரிடம் சிவ வில்லினைக் காட்டுமாறு கூறினார். அதற்கு ஜனகர், தேவர்கள், தானவர்கள், அரக்கர்கள், கந்தருவர்கள், யட்ச, கின்னரர்களாலும் நாணேற்ற முடியாத வில்லை மனிதர்களால் எங்ஙனம் இயலும் என்று ஏளனமாகக் கேட்டான். ஆயினும், வில் கொணரப்பட்டது. விசுவாமித்திரர் 'இராமா வில்லினை நோக்குவாய்' என்று ஆணையிட்டார். அதன் பின், அவையோர், என்ன நடந்தது என்று உணரும் முன்பே, இராமன் வில்லினை நாணேற்ற, அது உடைந்தது. இதனைத்தான், தியாகராஜர், 'புவியாள்வோரின் செருக்கினை அடக்க' என்று கூறுகின்றார்.

Top

4 - விரோசன ஸுது மதி கலிகி3ன ப4யமு - பரிதி மைந்தனின் மனதில் எழுந்த அச்சம் - சுக்கிரீவனுக்கு இராமனின் மகிமைகளைப் பற்றித் தெரியாது. எனவே, மிக்கு வலியவனாகிய தனது அண்ணன் வாலியை எதிர்த்து இராமன் போரிட்டு, அவனை வெல்ல முடியுமா என்று மிகவும் ஐயப்பட்டான். வாலியின் வலிமையினைப் பற்றி திரும்பத் திரும்ப உரைக்கும் சுக்கிரீவனிடம், இராமன், தான் என்ன செய்தால் அவனுடைய ஐயம் தீரும் என்று கேட்டான். அதற்கு சுக்கிரீவன், அங்குள்ள பெரும் சால மரங்களின் கிளைகளை உலுக்கியே, இலைகளையெல்லாம் வாலி உதிரச் செய்வான் என்றும், அவன் அந்த சால மரங்களை வில்லினால் துளைக்க வல்லவன் என்றும் கூறியதுடன், அங்கு கிடந்த, துந்துபி என்னும் எருமையரக்கனின் மலை போன்ற உலர்ந்த உடலையும் காட்டி, இவனை வாலி கொன்றான் என்றான். உடனே இராமன், அந்த உடலை தனது கால் கட்டை விரலால் உதைத்து 10 யோஜனை தூரத்தில் எறிந்தான். பின்னர் ஏழு சால மரங்களையும் ஒரம்பினால் துளைத்து அந்த அம்பு திரும்ப தன் அம்பறாத்தூணியை வந்தடையச் செய்தான். அதன் பின்னரே, சுக்கிரீவனின் ஐயம் தெளிந்தது.

Top

6 - பி3டௌ3 - பி3டௌ3ஜஸ் அல்லது விடௌ3ஜஸ் - இந்திரனின் பெயர் – (7183)

6 - பி3டௌ3ஜ அவரஜ - இந்திரனின் பின்தோன்றல். 'உபேந்திரன்' எனப்படும் விஷ்ணுவின் வாமன அவதாரத்தினைக் குறிக்கும்.

Top

விளக்கம்
5 - பெனு தல தன்னின - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. 'பெனு' என்பதற்கு 'பெரிய' என்றும், 'தல' என்பதற்கு 'தலை' யென்றும், 'தல தன்னின' எனபதற்கு 'மிதித்த' என்றும் பொருளாகும். இங்கு கூறப்படும் நிகழ்ச்சி, 'வால்மீகி ராமாயண'த்தின்படி, துந்துபியின் உலர்ந்த உடலை, இராமன், தனது கட்டை விரலால் உதைத்து எறிந்ததாகும். எனவே, 'தன்னின' (உதைத்த) என்ற சொல் சரியானாலும், 'பெனு தல' என்பது ஐயத்திற்குரியது. இவ்விடத்தில், தியாகராஜர், 'அத்யாத்ம ராமாயண'த்தினைப் பின்பற்றியதாகத் தோன்றுகின்றது. 'அத்யாத்ம ராமாயண'த்தின்படி (கிஷ்கிந்தா காண்டம், முதல் அத்தியாயம்), வாலி, துந்துபியைக் கொன்று, அவன் தலையைத் திருகி எறிந்தான் என்றும், அந்தத் தலை, மதங்க முனிவரின் ஆசிரமத்தருகில் வந்து வீழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இவ்விடத்தில், 'பெனு தல' என்பது 'பெருந் தலை' என்று பொருளாகும்.

7 - ஜ்யா-வர - சில புத்தகங்களில் இதற்கு 'அரசர்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடத்தி்ல் மும்மூர்த்திகளில் ஒருவரான, பூமி தேவியின் மணாளனாகிய, 'விஷ்ணு'வைக் குறிக்கும்.

Top

பரமேசன் - உருத்திரன் - சிவன்
தவசி - அகலிகையின் கணவராகிய கௌதம முனிவர்
இந்திரன் மகன் - வாலி
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்
துந்துபி - எருமை அசுரன் - வாலியால் கொல்லப்பட்டவன்
புவிமகள் - சீதை
இந்திரன் பின்தோன்றல் - உபேந்திரன் - வாமனர்
பூதேவி மணாளன் - அரி

Top


Updated on 15 Feb 2011

4 comments:

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
ஆங்கிலத்திலே ‘பெனுதல’ என்பதனை விரிவாக விளக்கியுள்ளீர். ’ துந்துபியின் உடலை’ ’ மலை போன்ற உலர்ந்த உடலையும்’ என்பவற்றிற்குப் பதிலாக ‘எலும்புக்கூடு’ என்று கூறலாமா.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'எலும்புக்கூடு' என்னும் பொருள் பொருந்தும். ஆனால், அதற்கான தெலுங்கு சொல் ஏதும் பாடலில் இல்லை. 'பெனு தல' என்பதற்கு அத்தகைய பொருள் கூற இயலாது என்று நான் கருதுகின்றேன்.

வணக்கம்,
கோவிந்தன்.

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களுக்கு
‘பெனுதல’ என்பது (காய்ந்து போன) மண்டையோட்டினைக் குறிக்குமா? கபாலம் என்பது உயிருடன் இருப்பவரது மண்டையோட்டினை மாத்திரம் குறிக்குமா? இப்பாடலில் தியாகராஜர் துந்துபியின் மண்டையோட்டினை உதைத்தார் என்று கூறுகிறாரா?
நன்றி
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

வால்மீகி ராமாயணத்தின்படி துந்துபியின் உலர்ந்த உடலை ராமன் உதைத்துத் தள்ளினான். எனவே தலையை மட்டும் உதைத்தான் என்பது தவறாகும்.

'பெனுதல' என்பதற்கு 'பெரியதலை' என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இச்சொல் மண்டையோட்டினைக் குறிக்காது.

'கபாலம்' என்பது 'skull' என்பதற்கு சமமாகும். எப்படி 'skull' என்பது உயிருடன் இருப்பவருக்கும் பொருந்துமே அங்ஙனமே கபாலுமும்.

வணக்கம்
கோவிந்தன்