Friday, March 6, 2009

தியாகராஜ கிருதி - ஸரஸீரூஹானன - ராகம் முகா2ரி - Saraseeruhaanana - Raga Mukhaari

பல்லவி
ஸரஸீருஹானன ராம
ஸமயமு ப்3ரோவ 1சித்3-க4

அனுபல்லவி
பர பா4மலனாஸி1ஞ்சியன்னமிடி3
பக3லு 2ரேயு ஸரஸமாடு3 வாரினொல்ல (ஸ)

சரணம்
3ப்3ராஹ்மணீகமு பா3ய நீசுல
ப்3ரதுகாயெனதி3 கா3கயீ கலிலோ
4ப்3ரஹ்மமைன மாடல நேர்சுகொனி
3ரகே3ரய்ய த்யாக3ராஜ நுத (ஸ)


பொருள் - சுருக்கம்
தாமரை முகத்தோனே இராமா! சுத்த சித்தமே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • இது தருணமென்னைக் காக்க;

  • பிற பெண்டிருக்கு ஆசைப்பட்டு, அன்னமிட்டு, பகலிரவு சரசமாடுவோரின் இணக்கத்தினை விரும்பேன்;

  • அந்தணத்துவத்தினைக் கைவிட்டதனால், இழிந்தோரின் பிழைப்பானது; அன்றியும்,

  • இக்கலியில், பிரமமெனும் சொற்களை யறிந்துகொண்டுத் திகழலாயினரய்யா.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸரஸீருஹ/-ஆனன/ ராம/
தாமரை/ முகத்தோனே/ இராமா/

ஸமயமு/ ப்3ரோவ/ சித்3-க4ன/
தருணம்/ (என்னைக்) காக்க/ சுத்த சித்தமே!


அனுபல்லவி
பர/ பா4மலனு/-ஆஸி1ஞ்சி/-அன்னமு/-இடி3/
பிற/ பெண்டிருக்கு/ ஆசைப்பட்டு/ அன்னம்/ இட்டு/

பக3லு/ ரேயு/ ஸரஸமாடு3 வாரினி/-ஒல்ல/ (ஸ)
பகல்/ இரவு/ சரசமாடுவோரினை (அவர் இணக்கத்தினை)/ விரும்பேன்/


சரணம்
ப்3ராஹ்மணீகமு/ பா3ய/ நீசுல/
அந்தணத்துவத்தினை/ கைவிட்டதனால்/ இழிந்தோரின்/

ப்3ரதுகு-ஆயெனு/-அதி3 கா3க/-ஈ/ கலிலோ/
பிழைப்பானது/ அன்றியும்/ இந்த/ கலியில்/

ப்3ரஹ்மமைன/ மாடல/ நேர்சுகொனி/
பிரமமெனும்/ சொற்களை/ யறிந்துகொண்டு/

3ரகே3ரு/-அய்ய/ த்யாக3ராஜ/ நுத/ (ஸ)
திகழலாயினர்/ அய்யா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ரேயு - எல்லா புத்தகங்களிலும் இவ்விதமே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் இச்சொல்லுக்கு 'இரவு' என்று பொருளாகும். அதற்கு சரியான தெலுங்கு சொல் 'ரேயி' ஆகும். 'ரேயி'-யின் பன்மை 'ரேலு'-வாகும்.

Top

மேற்கோள்கள்
3 - ப்3ராஹ்மணீகமு - அந்தணத்துவம் - அந்தத்தையுணர்வோர் - அந்தணரின் தன்மை - மகாபாரதம், அனுசாசன பர்வம் 13-வது புத்தகம், பகுதி 141 முதலாக, நான்கு வர்ணத்தாரின் கடமைகள் என்னவென்ற மகாதேவன், உமை, நாரதர் ஆகியோரிடையேயான உரையாடலைக் காணவும்

அந்தணர்களின் கடமைகள் என்னவென்று மனு ஸ்ம்ருதி, அத்தியாயம் 4 நோக்கவும்.

Top

விளக்கம்
1 - சித்3-க4 - இது வெறும் 'சித்ரூபமான' பரம்பொருளைக் குறிக்கும். இதனை 'சுத்த சித்தம்' என இங்கு மொழிபெயர்க்கப்பட்டது.

4 - ப்3ரஹ்மமைன மாடல - பிரமமெனும் சொற்களையறிந்து - அச்சொல்லின் பொருளுணராது என - கடவுளைத் தன்னுடைய உள்ளத்துள் கண்டுகொள்ளாது வெறும் சொற்களைப் பிதற்றித் திரிவோரை தியாகராஜர் கண்டிக்கின்றார்.

பிற பெண்டிருக்கு - பிறன் மனைக்கு என்றும் கொள்ளலாம்.
கலி - கலி யுகம்
பிரமம் - சச்சிதானந்தமாய் அண்டம் யாவும் தோன்றியொடுங்குதற்கு இடமாயுள்ள பொருளாகிய கடவுள்.
Top


Updated on 06 Mar 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே

இந்த பாட்டை மறுபடியும் படித்தபோது எனக்குத் தோன்றிய கருத்துக்களைக் கீழே கொடுத்துள்ளேன்,
அனுபல்லவியில் ‘ஒல்ல’ என்பதற்கு ‘ஒறுக்க’ என்று வினையெச்சமாக எடுத்துக்கொண்டுள்ளீர். இதை வினைமுற்றாக எடுத்துக்கொள்ளலாமா? (அதாவது; ஒல்லனு என்பதன் குறுகிய மாற்றுவடிவம்). ”பிற பெண்டிருக்கு ஆசைப்பட்டு, அன்னமிட்டு, பகலிரவு சரசமாடுவோரை யொறுக்க (ஏற்றுக்கொள்ள) மாட்டேன்” என்று பொருள் கொள்ளலாமா.
சரணத்தில் நடத்தைகெட்ட கீழ் மக்களைப் பற்றிக் கூறியுள்ளார். அனுபல்லவியில் அத்தகைய கீழோருடன் நான் சேரமாட்டென், ஆதலால் என்னைக் இது தருணம் என்று தியாகராஜர் கூறுகிறாரா?
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

நீங்கள் கூறியுள்ளது சரியாகும். எனவே, 'விரும்பேன்' என்று வினைமுற்றாக மாற்றியமைத்துள்ளேன். ஆங்கில வடிவத்திலும் இந்த மாற்றத்தினைச் செய்துவிட்டேன்.

நன்றி,
வணக்கம்,
கோவிந்தன்.