Sunday, February 1, 2009

தியாகராஜ கிருதி - நாத3 தனுமனிஸ1ம் - ராகம் சித்த ரஞ்ஜனி - Nada Tanumanisam - Raga Chitta Ranjani

பல்லவி
நாத3 தனுமனிஸ1ம் ஸ1ங்கரம்
நமாமி மே மனஸா ஸி1ரஸா

அனுபல்லவி
மோத3கர 1நிக3மோத்தம ஸாம
வேத3 ஸாரம் வாரம் வாரம் (நா)

சரணம்
ஸத்3யோஜாதாதி3 2பஞ்ச வக்த்ரஜ
ஸ-ரி-க3-ம-ப-த4-நி வர 3ஸப்த-ஸ்வர
வித்3யா
லோலம் 4வித3ளித காலம்
5விமல ஹ்ரு23 த்யாக3ராஜ பாலம் (நா)


பொருள் - சுருக்கம்
  • களிப்பூட்டும், மறைகளில் தலை சிறந்த, சாம வேதத்தின் சாரமான, நாத மேனியனை, சங்கரனை

  • சத்தியோசாதம் முதலான ஐம்முகங்களினின்று பிறந்த, ச-ரி-க-ம-ப-த-நி எனும் உயர் ஏழ் சுரங்களின் கலையிற் திளைப்போனை,

  • காலனை அழித்தவனை,

  • தூய இதயத்தோனை,

  • தியாகராசனைப் பேணுவோனை,

எவ்வமயமும், எனது மனதாலும், தலையாலும் வணங்குகின்றேன்


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாத3/ தனும்/-அனிஸ1ம்/ ஸ1ங்கரம்/
நாத/ மேனியனை/ எவ்வமயமும்/ சங்கரனை/

நமாமி/ மே/ மனஸா/ ஸி1ரஸா/
வணங்குகின்றேன்/ எனது/ மனதாலும்/ தலையாலும்/


அனுபல்லவி
மோத3கர/ நிக3ம/-உத்தம/ ஸாம/
களிப்பூட்டும்/ மறைகளில்/ தலை சிறந்த/ சாம/

வேத3/ ஸாரம்/ வாரம்/ வாரம்/ (நா)
வேதத்தின்/ சாரமான/ திரும்ப/ திரும்ப/ நாத...


சரணம்
ஸத்3யோஜாத/-ஆதி3/ பஞ்ச/ வக்த்ரஜ/
சத்யோஜாதம்/ முதலான/ ஐந்து/ முகங்களினின்று பிறந்த/

ஸ-ரி-க3-ம-ப-த4-நி/ வர/ ஸப்த/-ஸ்வர/
ச-ரி-க-ம-ப-த-நி (எனும்)/ உயர்/ ஏழ்/ சுரங்களின்/

வித்3யா/ லோலம்/ வித3ளித/ காலம்/
கலையிற்/ திளைப்போனை/ அழித்தவன்/ காலனை/

விமல/ ஹ்ரு23ய/ த்யாக3ராஜ/ பாலம்/ (நா)
தூய/ இதயத்தோனை/ தியாகராசனை/ பேணுவோனை/ நாத...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - நிக3மோத்தம ஸாம - ரு2க்3 மற்றும் யஜுர் மறையோதலில் மூன்று சுரங்களே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சாம மறையோதலில் ஏழு சுரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. (AS பஞ்சாபகேசய்யர் எழுதிய 'கர்னாடக சங்கீத சாத்திரம்' எனும் புத்தகம் நோக்குக.) அதனால் தியாகராஜர் (சங்கீதத்தைப் பொறுத்த வரையில்) சாம வேதம் தலை சிறந்ததென்கின்றார்.

2 - பஞ்ச வக்த்ரஜ - ஐந்து முகங்களி்னின்று பிறந்த - சிவனின் ஐந்து முகங்களாவன - ஸத்3யோஜாத, அகோ4ர, தத்புருஷ, ஈஸா1ன மற்றும் வாமதே3வ. திருமூலர் திருமந்திரத்தில் சிவனுக்கு 'அதோ4முக2ம்' எனும் ஆறாவது முகமும் இருப்பதாகக் கூறுகின்றார்.

மிருதங்கத்தின் ஐந்து அடிப்படை ஒலிகளான த, தி4, தோம், நம், ஜெம் ஆகியவை சிவனின் ஐந்து முகங்களின்று தோன்றியவை.

ஐந்து தாளங்கள் - சச் சட்புட, ச ச புட, ஷட்பித புத்ரிக, ஸம்பத3 வேஷ்டக, உத்3கத்த - ஆகியவை சிவனின் ஐந்து முகங்களினின்றும் தோன்றியவை.

4 - வித3ளித காலம் - திருக்கடவூரில் மார்க்கண்டேயனைக் காக்க நமனை உதைத்த கதை நோக்குக.

Top

விளக்கம்
3 - ஸப்த-ஸ்வர வித்3யா - ஏழு சுரங்களி்ன் வித்யை - இதனை 'நாத வித்யை' என்றும் 'நாதோபாஸனை' என்றும் கூறப்படும். நாதோபாஸனை - சுருக்கம் நோக்குக.

5 - விமல ஹ்ரு23 - தூய இதயத்தோன் - இதனை தியாகராஜருக்கு அடைமொழியாகவும் கொள்ளலாம்

Top


Updated on 02 Feb 2009

No comments: